பால்மழை

இயற்கையின் அதிசயம்
மனிதனுக்கு பேரானந்தம்
உப்பு நீரை முகர்ந்து
உன்னத நீரை உலகுக்கு
தானம் அளிக்கும்
மேகராஜனின் மாயாஜாலம்...

இளம் காதலர்களின் திருவிழா
உல்லாசமாக நனைந்து
விளையாடும் சிறார்களின்
சந்தோச பூப்பொழிவு...

நடுநிசியில் துணையின்றி
வீடு திரும்பும் ஒரு பெண்ணின்
வழிதுணையாக
விடிய விடிய பெய்யும் மழை...

பெண் பார்க்கும் வேளையில்
எல்லோரும் காத்திருக்க
நாணத்துடன்
மெதுவாக வந்துப்போகும்
கிராமத்து இளம்பெண்ணைப்போல
சில மழைத்தூறல்கள் எட்டிப்பார்த்து
லேசாக வந்துப்போகிறது...

காற்றும் மழையும் சேர்ந்து
செய்த தாக்குதலில்
என் மண்வீட்டு சுவர்கள்
எதிர்ப்பு சக்தியில்லாமல்
சரிந்துக்கொண்டிருக்கிறது...

ஒரு காகம் தன்
மூன்று குஞ்சுகளையும் சிறகுகளில்
மூடி பாதுகாக்கிறது அதில்
ஒன்று குயில் குஞ்சு என்று
தெரியாமலே
மழை நின்றும் தூவானம் நின்றபாடில்லை...

விவசாயி வேண்டும்போது
பொழியாமல்
வேண்டாதப்போது பொழிந்து
உன் வான்புகழை கெடுக்காதே
பாவம் நீ என்ன செய்வாய்
மனிதர்கள் விதைத்த வினை
பலனும் அவர்களுக்கே...

நீயின்றி அமையாது உலகம்
உன் துணையின்றி
வாழாது உயிர்கள்
தேவைக்கேற்ப பொழிந்து
மழை என்ற மாட்சிமையை
தக்கவைத்துக்கொள் இவ்வையகத்தில்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (10-Jan-18, 8:57 am)
பார்வை : 520

மேலே