பாலைவன பயணங்கள் ---முஹம்மத் ஸர்பான்
நான் நிலவைக் கண்டு அச்சப்படுகிறேன்; இரவானால் என் பெண்மை துண்டு துண்டாய் வெட்டப்படுகிறது. மூங்கில் காடுகள் எனக்கான சிலுவைகளையும் நான் விளையாட பொம்மைகளையும் வாங்கி வருகிறது. பூக்கள் போல காலையில் மலர்கிறேன்; மாலையில் வாடுகிறேன். கண்ணீர் துடைத்த கைக்குட்டைகள் தூமத்துணிகளின் நாற்றம் வீசுகின்றது. நுரை முட்டைகள் போல உள்ளத்தால் உடைந்து போகிறேன்; சுவாசங்களால் அடைக்கப்பட்ட பலூன்கள் போல காயங்களால் நிரம்பி வழிகிறேன். குருடன் வரைந்த சித்திரம் போல நிம்மதியை தேடியலைகிறேன். முள் உடைந்த பேனாக்களை வைத்துக் கொண்டு விதியை மாற்றி எழுத நினைக்கிறேன். யாருமில்லாத முச்சந்தியில் கருத்தடை மாத்திரைகளை வைத்துக் கொண்டு கர்ப்பத்திற்காய் காத்து நிற்கிறேன். ஆடைகள் அணிந்த போது பார்வைகளால் மறைவிடத்தைக் கடித்தார்கள்; இன்று குழந்தை போல் மேனி திறந்த போதும் கன்னத்தில் சிகரெட்டால் சுட்டார்கள். தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் காட்டுக்குள் என்னை புல்லாங்குழல்கள் போல் வாசிக்கின்றது உலகம்
பட்டாம் பூச்சிகளின் சிறகுகளுக்குள் விண்வெளிக் கனவுகள் கண்ட நான் விலை மகளாய் தண்டிக்கப்படுகிறேன். நட்சத்திரங்களோடு காதல் கொண்டு உப்புக் கல்லாய் கரைந்து போகிறேன். இளவேனிற் கால பழுத்த இலைகள் போல உள்ளுக்குள் என்றோ நான் அழுகிப் போய் விட்டேன். செருப்பைத் தாண்டி பாதத்தில் ஒட்டிக் கொண்ட மண் போல கண்களின் கண்ணீருக்காய் புன்னகை சாலை மறியல் செய்ய ஆயத்தமாகிறது. கவர்ச்சியான சிற்பங்கள் கூட என் காதுகளில் ஆலோசனைகள் கூறுகின்ற பரிதாபம். கரையில் இருந்து கொண்டு அலைகளின் ஈரத்தில் நீந்தும் ஆமைகள் போல பாவங்களால் தானங்கள் செய்கிறேன். மின்மினிகளின் நூலகத்தில் சிலந்திப் பூச்சிகள் புத்தகங்களாய் அடுக்கப்பட்டதைப் போல என்னை இரவல் வாங்கிப் போகிறார்கள். நீண்டு கொண்ட போகும் தண்டவாளப் பயணங்களாய் சுவாசங்கள் வேகமாய் ஓடுகின்றது. கண்ணாடியில் முகம் பார்த்தால் அழுகை தான் வருகிறது. ஆறுதலுக்காய் உறவுகளை தேடுகிறேன். கரை கடந்து கடத்தப்பட்டவளாய் புத்தகப்பைக்குள் கடந்த காலங்களை ஆல்பமாய் புரட்டுகிறேன்.
முயல்கள் போல் துள்ளித் திரிந்த நான் முள்ளுக்குள் சிறைப்பட்ட காற்றாடியாகிறேன். என் அன்பான புன்னகை கூட இந்த உலகத்திற்கு தீட்டாகி விட்டது. மீன்களை வாங்கும் சந்தையில் தூண்டிலுக்குள் இரையாகிப் போகிறேன். என் நாசிக்குள் சாணம் கூட மணக்கிறது; என் உதிரம் தான் நாற்றமடிக்கிறது. தெருமுனைக் குப்பைத் தொட்டிற்குள் எழுத்துப் பிழை பட்ட கவிதைகள் குவிந்து கிடக்கிறது. அதற்குள் என் நிழலும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கிறது. வாசகன் இல்லாத நூலகம் போல என் பெண்மை மனுக்கள் எழுதுகின்றது; அதிவேகப் பாதையின் சாலை நெறிசல் போல காமத்தின் வேட்டைகள் என்னை ஆக்கிரமிப்புச் செய்கின்றது. மழலையின் மொழியும், பொக்கை வாய் புன்னகையும் எனக்கு இவ்வுலகில் மிகவும் பிடித்தவைகள். அத்தையடி மெத்தையடி தவழ்ந்து என் பிள்ளை வாழ வேண்டிய வீடு சிதைந்து போனது. அங்கே கதவுகள் கிடையாது; ஆனால், ஜன்னல்கள் விற்கப்படுகிறது. அங்கே விடியல்கள் கிடையாது; ஆனால், மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுகிறது. மனதில் எப்போதும் ஒரு குற்ற உணர்வு என்னை கொல்கிறது. மிகவும் அழகான பெண்மை கூட எனக்குள் அலங்கோலமாய் வாழ்கிறது.
குருவிகளின் கூட்டிற்குள் ஓர் இரவு நிம்மதியாக தூங்க யாசகம் கேட்கிறேன்; அவைகள் என் உடம்பைக் கேட்காது. புல்வெளிக்குள் ஒளிந்த பனித்துளிகள் போல இறைவனிடம் கல்லறையைக் கேட்கிறேன். ரோஜாக்களை காம்பிலுள்ள முட்கள் தாக்குவதைப் போல என்னை நானே தேர்த்திக் கொள்கிறேன். கன்னிக் காதலை நினைத்து நானும் வெட்கப்படுவேன்; அப்போதெல்லாம் என் முக்காட்டை காற்று கலைத்து விட்டு போகிறது. தாய் மொழியால் தன் வலியை நாட்குறிப்புக்குள் சுமக்கிறேன்.அனாதை இல்லங்கள் எங்கும் சேவைகள் செய்ய ஆசைப்படுகிறேன்; பாதைக் கடவையில் ஆணுறை வைத்திருக்கும் ஆண்களால் தடுத்து நிறுத்தப்படுகிறேன். தூய்மையான தாய்ப்பால் கூட என் மார்பில் நஞ்சானது. என் கற்பை சூறையாடியவர்கள் தடுக்கி விழுவதைக் கண்டால் கூட கண்களால் கண்ணீர் வருகிறது. தன் கண்ணீரை துடைக்க தேம்பில்லாத கைகள் கொண்ட பெண்கள் யாரும் இந்த விபச்சாரியின் பாலைவன பயணங்களை வாசித்து தயவு செய்து அழாதீர்கள்.