உழவன் எங்கே
விடியல் வருவதற்குள்
வேலைக்கு சென்ற நாட்கள் எங்கே?
பனி துளிப் படர்ந்த வரப்பில் பணிக்கு சென்ற நாட்கள் எங்கே?
ஏறும் வெயில் வருவதற்குள்
ஏர் பூட்டி ஆகணும்னு
விடியலில் எழுப்பி விட்ட
என் சேவல் கூவல் எங்கே?
கம்பக்கூழா கேப்பைக்கூழா
நல்ல நாளுன்னா நெல் சோறா
நேத்து வச்ச மீன் குழம்பா
ருசிக்காக உண்ட நாட்கள் எங்கே?
இரட்டை மாடு நிக்க வச்சு
ஏர் கலப்பை தூக்கி வச்சு
காளை காலில் அடி விழாமல்
கரை உழுத நாட்கள் எங்கே?
கட்டுச்சோறு கட்டிக்கிட்டு களத்துமேட்டில் நெல் அடிச்சு பனைமரம் தொடுமளவு
போரா குவித்த வைக்கோல் எங்கே?
மூணு போகம் நெல் விதைத்து
முத்து முத்தா அரிசி ஒடச்சு
மூட்டையை எண்ணி எண்ணி
கணக்கு கற்றுக்கொண்ட நாட்கள் எங்கே?
களத்துமேட்டில் கண்ணுறங்க
காட்டு நரிக்கு காவல் நின்று
வெரட்டி ஓடி வேட்டையாட
வளர்த்து வைத்த நாய் எங்கே?
புல்லுக்கட்டில் பாசம் வச்சு
பொட்டு தவிடு தண்ணி வச்சு
முட்டி மோதும் காளையை
தட்டி வளர்த்த நாட்கள் எங்கே?
மஞ்சு அறுத்து கொட்டகை கட்டி
கன்று ஒன்று வளர்த்து வந்தேன், கைம்மாறு செய்ய இரு காம்பு பால் பங்கு கொடுத்த பசு எங்கே?
மூட்டை நெல்லில் ஓட்டை போடும் காட்டு எலி கூட்டம் பிடிக்க
ஆட்டுக் கல்லில் உறங்கி போகும்
காலை சுத்தும் பூனை எங்கே?
கூடைக்குள்ள கோழி வச்சு
கோழிக்கு சேவல் காவல் நின்னு
பத்து முட்டை அடை காத்து
குஞ்சி பொறிச்ச நாட்கள் எங்கே
வாழ மரத்திற்கு தோள் கொடுத்து
தென்னை மரத்திற்கு துணை கொடுத்து
தேக்கு மரத்திற்கு கை கொடுத்து தென்றலில் உறங்கிய நாட்கள் எங்கே?
ஊருக்கெல்லாம் சோறு போட்டு
உச்சி வெயில் பார்க்காம
உழைக்கிற கூட்டம் ஒன்று
உழவன் கூட்டம் எங்கே
உழவன் எங்கே?