அகழ்வாராய்ச்சியில் ஜல்லிக்கட்டு

அகழ்வாராய்ச்சியில் ஜல்லிக்கட்டு

(14.01.2018 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த என்னுடைய கட்டுரை )

மனித நாகரீகம் நைல் நதிக்கரையில் தோன்றிய காலம் தொட்டு இன்றுவரை, நதிகளும் நீர்த்தேக்கங்களும் மக்களின் உணவு தேவைகளுக்கு இன்றியமையாத பணியை ஆற்றி வருகிறது. நதிகளிலிருந்தும் நீர்த்தேக்கங்களிலிருந்தும் நீரை பயன்படுத்திய உழவர் பெருங்குடி மக்கள், தங்கள் விளைச்சல் நிலங்களை பொன் விளையும் பூமிகளாக மாற்றுகிறார்கள். அப்படிப்பட்ட உழவுத் தொழிலுக்கு உதவி புரிந்து, உழவனுக்கு உற்றத் தோழனாக இருந்த மாடுகளுக்கு நன்றிக் கடனாக மாட்டுப் பொங்கலை நாம் கொண்டாடி வருகிறோம்.

செல்வம் என்பதற்கு தூயத் தமிழ்ச்சொல் "மாடு" அதனால்தான் ஆண்டாள் தனது திருப்பாவையில்

''ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!''

என்று பாடி, மாடுகளை நீங்காத செல்வம் என்று குறிப்பிடுகிறாள்.

வள்ளுவன்,
''கேடில் விழுச் செல்வம் கல்வி யொருவருக்கு
மாடல்ல மற்றை யவை'’

ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் எது என்று கேட்டால், அது அவனது கல்வி. அந்த கல்வியைத் தவிர ஏனைய செல்வமெல்லாம் மாடல்ல அதாவது செல்வம் அல்ல என்று குறிப்பிடுகிறார்.

நம்மாழ்வார் தமது பெரிய திருவந்தாதியில்,

"மாலே..!. படிச்சோதி மாற்றேல், இனியுனது
பாலேபோல் சீரில் பழுத்தொழிந்தேன்,-மேலால்
பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று,
மறப்பின்மை யான்வேண்டும் மாடு."

திருமாலே...! உன்னுடைய பால் போன்ற பரம யோக்கியமான திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்துவிட்டேன். இனிமேல் முக்தி அடைந்து உனது திருவடியின் கீழ் நித்யக் கைங்கர்யம் செய்து, உன்னை மறவாமல் இருப்பதே அடியேன் ஆசைப்படும் "மாடு" அதாவது செல்வம் என்று குறிப்பிடுகிறார்.

திருமூலர் தனது திருமந்திரத்தில் அதுவும் முதல் தந்திரத்தில் செல்வம் நிலையாமை குறித்து கூறும் போது

''மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.''

நம் புலனின்பத்திற்கு ஏதுவாகிய செல்வமும் மாடும் (காசும்) நீரில் மிதக்கும் படகைபோல எந்த நேரத்திலும் கவிழும் என்கிறார்.

எனவே, ''மாடு'' என்றால் செல்வம் என்றே நம் முன்னோர்கள் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். அதுமாத்திரமல்ல, காளை, பசு, எருமை இவைகளுக்கும் மாடு என்றே பொதுப் பெயரிட்டு அழைத்து, அசையாச் செல்வம் என்று இந்த மண்ணையும், அழியாச் செல்வமென்று கல்வியையும், அசையும் செல்வமென்று மாட்டையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

தொல்காப்பிய இலக்கண நூலில் புறத்திணையில் உள்ள பன்னிரண்டு திணைகளில் வெட்சித் திணை மற்றும் கரந்தைத் திணை இந்த இரண்டிலும் மாட்டினை ''ஆநிரைச் செல்வம்'' என்று குறிப்பிட்டு, பகை நாட்டின் மீது போர் தொடுக்கும் முன் , அந்த நாட்டில் உள்ள மாடுகளுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது எனக் கருதி மன்னன் போர் தொடுக்கும் முன்பே , தன் படை வீரர்களுக்கு வெட்சிப் பூ சூட்டி அனுப்பி அங்குள்ள ஆடு மாடுகளை அதாவது ஆநிரைச் செல்வங்களை கவர்ந்து வரச் செய்வான். இதற்கு வெட்சித் திணை என்று பெயர்.

அப்படிப்பட்ட பெருமையையும் புகழையும் தன்னகத்தே கொண்ட அசையும் செல்வமாகிய, மாடுகளுக்கு விழா எடுப்பது என்பதும் நண்பனாக, உற்றத் தோழனாக இருக்கும் காளை மாடுகளோடு விளையாடி இன்புறுவதற்கு ஜல்லிக்கட்டு நடத்துவது என்பதும் தமிழர்கள் வாழ்வில் பிண்ணிப்பிணைந்த ஒன்று.

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் இருக்கிறது. மேலும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை பிடிக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சு வழக்கில் அது இப்போது திரிந்து 'ஜல்லிக்கட்டு' என்று ஆகிவிட்டது.

அதுமாத்திரமல்ல, இன்றைய பாகிஸ்தானின் சிந்து நதி தீரத்திற்கு அருகில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தழைத்திருந்த நாகரீகமே இன்றைய அறிஞர் பெருமக்களால் சிந்துவெளி நாகரீகம் என்று பெருமையோடு அழைக்கப்படுகிறது. இந்த சிந்துவெளி நாகரீகத்தில் ஜல்லிக்கட்டு நடந்ததற்கான சான்றுகளும் ஜல்லிக்கட்டு போலவே காளையை பல மனிதர்கள் அடக்க முயல்வது போலவும் அந்த காளை அவர்களை முட்டித்தள்ளி எறிந்துவிட்டு வெற்றிக்களிப்பில் தன திமிலை உலுக்கியபடி ஒய்யாரமாய் நிற்பது போல முத்திரைகள் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டிருப்பதை காணும் போது தமிழன் பரந்து பட்டு வாழ்ந்திருக்கிறான். அதுமட்டுமல்ல எவ்வுயிரையும் தன் உயிர் போல கருதி காளைகளை நண்பனாக பாவித்து அறம் சார்ந்த வாழ்வு வாழ்ந்திருக்கிறான் என்பது புலப்படும்.


ஆனால் மெக்ஸிகோ, போர்ஷிகோ, ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடைபெறுகிற ஏறு தழுவுதல் என்பது முற்றிலும் மாறுபட்ட வினோதம் நிறைந்தவை. அது அந்த நாட்டின் தேசிய விளையாட்டாக புல் பைட்டிங் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய மைதானம் அதில் பல லட்சக்கணக்கானோர் சுற்றிலும் அமர்ந்திருப்பர். மைதானத்தின் ஆறு புறமும் ஆறு மெட்டடோர்கள் என்றழைக்கப்படுகிற காளை அடக்குபவரர்கள் சிவப்புத்துணிகளை கையில் ஏந்தியபடி நிற்பார்கள்.

ஒரு எருதுவை அந்த அகண்ட மைதானத்திற்குள் திறந்து விடுவார்கள். ஒவ்வொரு மெட்டடோறும் கையில் வைத்திருக்கும் துணியை எருதுக்கு முன்னால் அசைத்து கோபமூட்டிக்கொண்டே வருவார்கள்.

இறுதியில் பிக்காடோரெஸ் குதிரையின் மேலமர்ந்து இடது கையில் குதிரையைப் பிடித்துக் கொண்டு வலது கையில் உள்ள ஈட்டியால் தன்னை நோக்கித் தாக்க வரும் காளைமாட்டினை ஒரே தாக்குதலில் நடுமுதுகில் குத்தித் தாக்குவார். இந்தத் தாக்குதலைச் செய்ய மிகுந்த பலம் தேவை. இதனை எதிர்த்து காளைமாடு உடனே குதிரையை முட்டி பிக்காடோரெஸை தொடர்ந்து தாக்கும். இது மிகப் பயங்கரமான ஒரு நிலை. சுற்றிலும் இரும்புக் கவசம் போடப்பட்டும் கண்கள் மூடப்பட்டும் குதிரை இருப்பதால் அதற்குச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இருக்காது.

ஆனால் பிகோடோரெஸ் லாவகமாக இந்தத் தாக்குதலைச் சமாளித்து மாட்டை பலம் இழக்கச் செய்து விடுவார். இத்துடன் இவரது பணி முடிய இவர் வெளியே சென்று விடுவார். தனித்திருக்கும் காளை மாடு தன்னைக் கொஞ்சம் சுதாகரித்துக் கொள்ள முனைந்தாலும் கூட ஈட்டித் தாக்கியதால் இரத்தம் முதுகிலிருந்து வழிய அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். இறுதியில் அந்த காளை மாடு துடிதுடித்து இறந்து போகும். இது தான் மேலை நாட்டு நாகரிகம்.

ஆனால், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருந்தகை பிறந்த மண்ணில் காளைகளை தன் சக நண்பனாக பாவிப்பது நம் தமிழர் நாகரீகம்.


அதுமட்டுமல்ல, சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில்

''காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும், இவ்
வேரி மலர்க் கோதையாள்;

நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய, இப்
பொன் தொடி மாதராள் தோள்.

மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள், இம்
முல்லை அம் பூங் குழல்-தான்.

நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும், இப்
பெண் கொடி மாதர்-தன் தோள்.

பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்: இந்
நன் கொடி மென்முலை-தான்.

வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள், இக்
கொன்றை அம் பூங் குழலாள்.

தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள், இப்
பூவைப் புது மலராள்.''


அதாவது,
தேன்மலர் சூடிய இவள் காரிக் காளையை அடக்கியவனை விரும்புவாள். பொன்வளையல் அணிந்த இவள் தோள் நெற்றியில் செஞ்சுழி உடைய காளையை அடக்கியவனுக்கு உரியது. முல்லைப் பூ சூடிய இவள் கொழுத்த காளைமேல் ஏறி வருபவனுக்கு உரியவள். இந்தப் பெண்ணின் தோள் சின்னச் சின்ன புள்ளி கொண்ட வெள்ளைக் காளையை அடக்கியவனுக்கு உரியது. இந்த மென்முலையாள் பொன்னிறப் புள்ளி கொண்ட வெள்ளைக் காளையை அடக்கியவனுக்கு உரியவள். கொன்றைப் பூ சூடிய இவள் பலரை வெற்றி கண்ட கொழுத்த காளையை அடக்கியவனுக்கு உரியவள். காயாம்பூ அணிந்த இவள் தூய வெள்ளை நிறக் காளையை அடக்கியவனுக்கு உரியவள்.

இங்ஙனம் ஏழு காளைகளை ஏழு கன்னியர் இதனை அடக்கியவனையே மணப்போம் என உறுதி கொண்டு இருந்தனர் என்று தன் மகள் ஐயையை நோக்கி மாதரி கூறியதாக சிலப்பதிகாரத்தில் இளங்கோ பதிவு செய்திருக்கிறார்.

அது மாத்திரமல்ல, பகவான் கிருஷ்ணரே ஏழு குதிரைகளை அடக்கி பேரழகி சத்யாவை மனம் முடித்தார் என்று மறைந்த மகா பெரியவா காஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் கூறியதாக தெய்வத்தின் குரல் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது

கோசல நாட்டு மன்னனின் பெயர் நக்னஜித், அவன் மாபெரும் தர்மவான், வேத நெறிப்படி நடப்பவன். அவனின் மகளான சத்யா பேரழகி. நக்னஜித் தன்னிடமிருந்த பலம் வாய்ந்த ஏழு காளைகளை அடக்கக்கூடிய வீரனுக்கு மட்டுமே தன் மகளை மணம் முடிக்க விரும்பினார். ஆயினும், அரச வம்சத்தினர் எவராலும் அக்காளைகளை அடக்க முடியவில்லை. எனவே, சத்யாவை எவராலும் திருமணம் செய்ய முடியவில்லை. மிகவும் பலம் வாய்ந்த அந்த காளைகள், எந்த அரச குமாரனையும் தம்மிடம் அணுகவிடவில்லை. பல அரச குமாரர்கள் கோசல நாட்டிற்கு வந்து காளைகளைப் பணிய வைக்க முயன்று தோற்றுப் போனார்கள். இந்தச் செய்தி எங்கும் பரவி கிருஷ்ணரை எட்டியது.

சத்யாவை மணக்க ஏழு எருதுகளை அடக்க வேண்டுமென்ற செய்தி கிருஷ்ணரை அடைந்தபோது, அவர் கோசல நாட்டிற்குச் செல்ல தயாரானார். பல வீரர்கள் புடைசூழ கிருஷ்ணர் கோசல நாட்டின் பகுதியான அயோத்தியாவிற்கு அரச முறையில் பயணம் மேற்கொண்டார்.

சத்யாவைக் கரம் பிடிக்க கிருஷ்ணர் வந்திருப்பதை அறிந்த கோசல நாட்டு மன்னர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தகுந்த மரியாதைகளுடன் அவர் கிருஷ்ணரைச் சிறப்பாக வரவேற்றார். கிருஷ்ணருக்கு தகுந்த ஆசனமளித்து தக்க முறையில் உபசரித்தார். கிருஷ்ணரும் தம் வருங்கால மாமனாரான கோசல மன்னருக்கு உரிய மரியாதைகளை வழங்கினார்.

லக்ஷ்மியின் கணவரான கிருஷ்ணரே தன்னை மணம்புரிய வந்திருப்பதையறிந்த சத்யா மகிழ்ந்தாள். அவரை மணம்புரிய வேண்டுமென்று வெகு நாள்களாக ஆவல் கொண்டிருந்த அரசகுமாரியான சத்யா தன் ஆவல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பல விரதங்களை அனுஷ்டித்து வந்தாள்.

பக்திமானான நக்னஜித் கிருஷ்ணர் தாமே தன் அரண்மனைக்கு வந்ததால் மகிழ்ச்சியடைந்து தனக்குத் தெரிந்த முறைகளில் தம் சக்திக்கு உட்பட்ட வகைகளில் அவரை வழிபட்டார். பகவானிடம், “அன்பார்ந்த இறைவனே, நீங்கள் பிரபஞ்சம் முழுமைக்கும் உடைமையாளர், உயிரினங்களின் புகலிடமான நாராயணர், நீர் தம்மில் நிறைவு பெற்றவர், ஐஸ்வர்யங்கள் நிரம்பப் பெற்றவர். எனவே, உமக்கு நான் தரக்கூடியது என்ன இருக்கிறது? நீர் திருப்தியடையும் வகையில் நான் என்ன தரக்கூடும்? அது சாத்தியமல்ல; ஏனெனில், நான் முக்கியத்துவமற்ற ஒரு பிறவி. உமக்கு சேவை செய்யக்கூடிய சக்தி என்னில் எதுவுமில்லை.”

கிருஷ்ணர் எல்லா உயிரினங்களிலும் உறையும் பரமாத்மா. எனவே, அவர் சத்யாவின் உள்ளக்கிடக்கையை அறிந்திருந்தார். மன்னன் நக்னஜித் தமக்களித்த சேவையால் அவர் திருப்தியடைந்திருந்தார். தந்தையும் மகளும் தம்முடன் நெருங்கிய உறவுகொள்ள விரும்பியது அவருக்கு திருப்தியளித்தது. அவர் புன்னகை செய்து பெருமிதம் கொண்ட குரலில் பேசினார்: ''அன்பார்ந்த நக்னஜித் மன்னரே, அரச பரம்பரையைச் சார்ந்து நெறிவழுவாது நடக்கும் ஒருவன் யாரிடமும்–அவன் எவ்வளவு உயர்ந்த நிலையிலிருப்பவனாயினும்–எதையும் வேண்டிப் பெறுவதில்லை. ஒரு சத்திரிய அரசன் யாரிடமும் எதையும் விரும்பிக் கேட்பதை வேத சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை. இந்த நெறியிலிருந்து தவறும் சத்திரிய அரசன் கற்றறிந்த பண்டிதர்களின் நிந்தனைக்கு உள்ளாகிறான். இருப்பினும், இந்த கண்டிப்பான நியமத்தையும் மீறி நான் உங்களிடம் உங்களுடைய அழகிய மகளின் கரத்தை வேண்டுகிறேன். நீங்கள் எமக்களித்த உயர்வான வரவேற்பிற்கு ஈடுசெய்து உங்களுடன் உறவு ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் நான் இதை வேண்டுகிறேன். எங்கள் குடும்பப் பாரம்பரிய வழக்கப்படி உங்களது மகளை ஏற்றுக்கொள்வதற்கு பிரதியுபகாரமாக நான் எதுவும் உங்களுக்குத் தருவதற்கு இல்லை. அவளை நான் ஏற்றுக்கொள்வதற்காக, எந்தவொரு நிபந்தனையையும் நான் ஏற்கப் போவதில்லை.” அதாவது ஏழு காளைகளையும் அடக்க வேண்டுமென்ற நிபந்தனையைப் பின்பற்றாமல் சத்யாவைப் பெற விரும்புவதாக கிருஷ்ணர் நக்னஜித்திடம் கூறினார்.


கிருஷ்ணரின் பேச்சைக் கேட்ட நக்னஜித், ''கிருஷ்ணா, நீர் எல்லா இன்பங்களும் ஐஸ்வர்யங்களும் தகுதிகளும் நிரம்பியவர். உமது மார்பில் லக்ஷ்மி எப்போதும் வாசம் செய்கிறாள். இவ்வாறிருக்க எனது மகளுக்கு உம்மை விடச் சிறந்த கணவர் யார் இருக்க முடியும்? இந்த வாய்ப்பிற்காக நானும் என் மகளும் நெடுங்காலமாகப் பிரார்த்தித்து வந்திருக்கிறோம். நீர் யது வம்சத்தின் தலைவர். நான் ஏற்படுத்தியிருக்கும் போட்டியில் வெற்றியடைபவருக்கே என் மகளைத் தருவதென்று முதலிலேயே அறிவித்திருக்கிறேன் என்பது உமக்குத் தெரியுமல்லவா . எனது வருங்கால மருமகனின் வலிமையையும் அந்தஸ்தையும் அறிவதற்காக நான் இப்போட்டியை ஏற்படுத்தியிருக்கிறேன். நீர் பகவான் கிருஷ்ணர், வீராதி வீரர், நீர் எவ்வித சிரமமுமின்றி இந்த ஏழு காளைகளையும் அடக்கக் கூடியவர் என்பதை நான் அறிவேன். எந்த அரசகுமாரனாலும் இதுவரை இவற்றை அடக்க முடியவில்லை. இவற்றைப் பணியச் செய்ய முயன்றவர்களெல்லாம் அங்கங்கள் முறியப் பெற்றுத் தோற்றுப் போனார்கள். நீர் தயவுசெய்து இந்த ஏழு காளைகளுக்கும் கயிறு பூட்டி அடக்கி, நீரே சத்யாவின் கணவராக வரவேண்டும்.”

இதைக் கேட்ட கிருஷ்ணர், மன்னர் அவனது கொள்கைகளிலிருந்து மாறவில்லை என்பதைப் புரிந்து கொண்டார். எனவே, மன்னரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக அவர் காளைகளுடன் சண்டையிடுவதற்கு ஆயத்தமானார். உடனடியாக, அவர் தம்மை ஏழு கிருஷ்ணர்களாக வியாபித்துக் கொண்டார், ஒவ்வொரு கிருஷ்ணரும் ஒரு காளையைப் பிடித்துக் கயிறு பூட்டி, அதை ஒரு விளையாட்டுப் பொருளாக அடக்கினார்.

ஒரு குழந்தை மரத்தாலாகிய பொம்மை காளையைக் கட்டி இழுப்பது போல பலமாக இழுத்தார். கிருஷ்ணரின் மேன்மையைக் கண்ட நக்னஜித் ஆச்சரியமடைந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் மகளான சத்யாவை வரவழைத்து கிருஷ்ணரிடம் ஒப்படைத்தார். கிருஷ்ணரும் அவளை ஏற்றுக் கொண்டார். அவர்கள் இருவருக்கும் மிக விமரிசையாக திருமணம் நடந்தது. தம் மகளான சத்யா கிருஷ்ணரைத் தன் கணவனாக அடைந்ததில் நக்னஜித் மன்னரின் மனைவியருக்கும் மிகுந்த திருப்தி. மன்னரின் மனைவியரும் மன்னனும் அந்த சுபவேளையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். திருமண வைபவத்தைக் கொண்டாடும் வகையில் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. எங்கும் சங்குகளும் மத்தளங்களும் வேறு பல இசைக் கருவிகளும் முழங்கின. கற்றறிந்த பிராமணர்கள் புதுமணத் தம்பதியருக்கு ஆசிகள் வழங்கினார்கள்.

இப்படி ஏறு தழுவுதல் என்பது தமிழர்கள் வாழ்வியலோடும், ஆன்மீகத்தோடும் பின்னிப்பிணைந்து நம் பண்பாட்டுச் சின்னமாக, தடைகள் பல கடந்து வெற்றி பெற்று, இத் தைத்திருநாளில் பட்டியை கிழித்துக் கொண்டு காளைகள் சீறிவரும் கண்கொள்ளா காட்சிதனை , அதன் மாட்சிதனை கண்டு உலகோர் வியக்கட்டும். தமிழரின் பெருமை திக்கெட்டும் பரவட்டும்.




''திருக்குறள் இளம் புலமையர்''
கே.பி.ரோஹித்கணேஷ்
(கட்டுரையாளர் & சொற்பொழிவாளர்)
உறையூர், திருச்சி

எழுதியவர் : கே.பி.ரோஹித்கணேஷ் (18-Jan-18, 1:05 pm)
சேர்த்தது : Rohitganesh
பார்வை : 175

மேலே