நியாயந்தான் சட்டம் அதற்கு தேவையில்லை, வக்கீல் பட்டம்
உலகில் ஒருவர் எந்த நாட்டவராக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும், எந்த இனத்தவராக இருந்தாலும் அவருக்கு, அவருடைய நாட்டில் என்னென்ன உரிமைகள் உண்டோ அத்தனை உரிமைகளையும் வழங்கும் ஒரேநாடு நமது இந்தியாதான்.
இதன் அடிப்படையில் இந்தியக் குடிமகன் அல்லது குடிமகள் என்பதற்காக நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும். ஆனால் நமது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதமாவது பெருமைப்படுவார்களா என்பது சந்தேகமே. காரணம் ஒவ்வொரு மதத்திற்கும் எனத் தனித்தனியாகச் சட்டம் இருந்தாலுங்கூட, அது பற்றிய விழிப்பறிவுணர்வு இன்மையே.
நாமெல்லாம் சட்டப்படி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சட்டம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் உங்களால் நம்ப இயலாது. ஆனால் அது உண்மை.
ஆம்! சட்டப்படி வாழ்வதால்தான் வெளியில் இருக்கிறோம் இல்லையென்றால் ‘சிறையில்தானே இருப்போம்?’ சட்டம் தெரியாமலே சட்டப்படி வாழ்ந்து வரும் நமக்கு, சட்டத்தைத் தெரிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்க முடியும்? ஒன்றுமே இல்லை என்பதுதான் எனது ஆணித்தரமான கருத்து.
நாட்டில் நடக்கும் அத்தனை செயல்களும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரையறைதான் “சட்டம்”. எனவே, சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டை என்பதெல்லாம் அதை கையாள்பவர்களின் கையாலாகாத்தனமே தவிர சட்டத்தின் தன்மையல்ல.
நான் முன்சொன்னவாறு சட்டம் என்பது, நாட்டில் நடக்கும் செயல்களெல்லாம் நல்லவிதமாக நடக்க வேண்டும் என்பதற்காக யார்யார் எப்படிச் செயல்பட வேண்டும் என எழுதப்பட்ட அதிகார வரையறை தொகுப்பே. இந்த அதிகாரத்தை எவர் ஒருவர் தவறாகப் பயன்படுத்தினாலும் சட்டம் ஒன்றும் செய்யாது. செய்யவும் முடியாது. காரணம், ‘அது எழுத்து மூலமான ஓர் அறிவுறுத்தல் தொகுப்புத்தானே தவிர, நம்மைப்போல் வாய் உள்ள நபர் அல்ல’ என்பதை முதலில் நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
நாட்டில் எந்ததெந்த விதத்தில் யார்யார் பெரிய ஆள் என்று கேட்டால், நமது நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் முதல் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடிமகன் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பெரியாளாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் எல்லாருமே ஒன்றுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றால், அது சட்டத்துக்கு மட்டுந்தான்.
சட்டம் என்பது நாம் நினைப்பதுபோல் மிகவும் கடினமான ஒன்றல்ல. எளிமையான விஷயமே. சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற இருக்கிற சட்டங்களையெல்லாம் கரைத்துக்குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நமது உடம்பில் எப்படி ஐம்புலன்கள் முக்கியமோ அதுபோல, நாட்டில் நாம் நல்லமுறையில் வாழவேண்டுமென்றால், இந்திய அரசமைப்பு, இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை விதிகள், உரிமையியல் விசாரணை முறை விதிகள் என்ற இந்த 5 சட்டங்கள் மிகமிக முக்கியம்.
இந்திய அரசமைப்புதான், “இந்தியாவின் தலையாய சட்டம்”.
இதில் சொல்லப்பட்டுள்ளபடிதான் நாடு இயங்க வேண்டும். நாட்டில் உள்ள குடிமக்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் முதல் அனைத்து விதமான உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதோடு தமக்கென விதிக்கப்பட்டுள்ள கடமைகளை ஆற்ற வேண்டும்.
இதிலென்ன விசித்திரம் என்றால், சட்ட விழிப்பறிவுணர்வு அறவே இல்லாதவர்கள் கூட உரிமையை நிலைநாட்டிக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஆனால், கடமையைச் செய்வதில் கண்டுங்காணாமலும் இருக்கின்றனர்.
உரிமையை நிலைநாட்டுவதில் கண்ணுங்கருத்துமாக இருந்தாலுங்கூட, அதற்காக வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கிறது அல்லவா? இதற்கென்ன காரணம்... கடமையைச் செய்ய வேண்டிய யாருமே செய்யாததுதான்.
குடிமகன் ஒருவர் தான் ஆற்றவேண்டிய கடமையை ஆற்றினால் மட்டும்தானே அதன்மூலமாக பலபேருக்கு கிடைக்கவேண்டிய உரிமைகள் பலனாகக்கிடைக்கும். ஆனால், எல்லோருமே உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்தால் உரிமை எப்படி கிடைக்கும்?
சாதாரண ஆவணம் முதல் சான்று ஆவணங்கள் வரை, ஆண்டி முதல் அரசன் வரையிலான சாட்சிகள் எவையெவை எத்தன்மை வாய்ந்ததை என்று வகைப்படுத்தப்பட்டு நீதிமன்றங்கள் எப்படிச் செயல்பட வேண்டும், நீதியை நிலைநாட்ட இயல்பான அதிகாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டுமென்பதற்கான வழிகாட்டுதல்களை இந்திய சாட்சிய சட்டம் வழங்குகிறது.
இந்திய தண்டனைச் சட்டமோ, நாம் எதையெல்லாம் செய்யக்கூடாது, எதையெல்லாம் செய்யவேண்டும், செய்யக்கூடாததை செய்தால் அது எந்தவிதத்தில் குற்றமாகும்... செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தால் அது எந்தவிதத்தில் குற்றமாகும்... இவைகளுக்கு என்ன தண்டனை என்பதை விளக்குகிறது. இதுமாத்திரமில்லாமல், வேறுபல தண்டனைச் சட்டங்களும் அமலில் உள்ளன.
இந்திய தண்டனைச் சட்டம் உட்பட எந்தவொரு சட்டத்தின் கீழும் தண்டிக்கத்தக்க குற்றம் நடக்கும்போது அதற்கான முதல் தகவல் அறிக்கை, புலனாய்வு, கைது, பிணை, விசாரணை, தண்டனை அல்லது விடுதலை ஆகியவை குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்குவதே குற்ற விசாரணை முறை விதிகள்.
எந்தவொரு சட்டத்தின் கீழ் நமது உரிமையைக் கோருவதாக இருந்தாலும், அதற்கு மனு தாக்கல், பதில் மனு தாக்கல், சாட்சிகள் விசாரணை, ஆவணங்கள் ஆய்வு, தீர்ப்புரை என அனைத்தும் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்துவது உரிமையியல் விசாரணை விதிமுறைகள்.
இந்த ஐந்து சட்ட விஷயங்களை சாதாரணமாகத் தெரிந்து வைத்திருந்தாலே போதும். தப்புத்தண்டா ஏதும் செய்துவிடாமல் நல்ல முறையில் நமது வாழ்க்கையை கழித்துவிடலாம்.
ஒருவேளை தப்புத்தண்டா ஏதும் செய்துவிட்டால்கூட அதற்காகப் பயப்படத் தேவையில்லை. நேராக நீதிமன்றம் சென்று ஒப்புக் கொண்டு விட்டால் “அது திட்டமிட்டு செய்யாத முதல் குற்றம் என்ற காரணத்தால் அதிகபட்சம் மன்னிக்க வாய்ப்புண்டு அல்லது மிகக்குறைந்த தண்டனையையே கொடுப்பார்கள். அத்தண்டனை நாம் நமது தவறுகளைச் சரி செய்து கொள்வதற்கு வழிகோலாக அமையும்”.
நாமே நேரடியாக நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள முடியுமா என்று உங்களுக்கு பெருத்த சந்தேகம் வரலாம். குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு மட்டுமல்ல, நமது பிரச்னைக்காக அல்லது உரிமைக்காக “நமக்காக நாமே எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் வாதாடலாம்!”
நம் வழக்குக்காக நாமே வாதாடுவதற்கு, சட்டப்படி எந்தவிதத்தடையும் கிடையாது. இனி தடைவிதிக்கவும் முடியாது. ஏன் தெரியுமா?
உங்களிடம் நான் தற்போது எதன் அடிப்படையில், இவ்விழிப்பறிவுணர்வைப்பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறேனோ, அதே அடிப்படை உரிமையில் நீங்கள் நீதிபதிகளிடம் மட்டுமல்ல, யாரிடம் வேண்டுமானலும் உங்களின் நியாயத்துக்காக வாதாட முடியும்.
அதாவது, இப்படி வாதாடுவது, ஒவ்வொருவரின் / உங்களின் அடிப்படை உரிமை.
அடிப்படை உரிமை என்றால் நமக்குத் தேவையானதை யாரிடமும் அனுமதிகேட்காமல் நாமே எடுத்துக் கொள்வதாகும். நம் அப்பா, அம்மாவிடம் பேசுவதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது அல்லவா, அப்படித்தான்!
ஆமாம், நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா, அம்மாவிடம் பேசுவது போல்தாம்!
நீங்களே வாதாடும் போது முக்கியமாக செலவு கிடையாது. உங்களை எதிர் தரப்பினர் விலை கொடுத்து வாங்கமுடியாது என்பதால் ஏமாற வாய்ப்பில்லை. வழக்கு முடியும்வரை வேறு வேலை கிடையாது என்பதால், வாய்தா வாங்கமாட்டீர்கள். வழக்கு விரைவில் முடியும். வக்கீல்களின் நீதிமன்றப் புறக்கணிப்பை அடுத்து பல்வேறு தரப்பினரும் தாங்களே வாதாடி ஒரேநாளில் நிவாரணம் பெற்றனர்.
“நியாயம்தான் சட்டம். அதற்குத் தேவையில்லை வக்கீல் பட்டம்’’ என்ற கருத்தை, ஆழமாக உணர்ந்து வாதாடியவர்களே, செலவில்லாமல், ஏமாறாமல், விரைவாக தனக்கான நீதியைப் பெற்றார்கள். இந்த நற்கொள்கை மிக்க உணர்வை ஏன் இந்தியக் குடிமகனாகிய நாம் ஒவ்வொருவரும் பின்பற்றக்கூடாது என்பதைவிட, ஏன் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இதற்காகவே நீதியைத்தேடி... நீங்களும் வாதாடலாம் என்கிற பொதுத்தலைப்பில், ‘குற்ற விசாரணைகள், பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி, சட்ட அறிவுக்களஞ்சியம், சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் மற்றும் சாட்சியங்களை சேகரிப்பது எப்படியென்கிற தலைப்புகளில் ஐந்து நூல்களையெழுதி, மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியோடு பொதுவுடைமையாக அறிவித்து வெளியிட்டுள்ளேன்.
இந்நூல்கள் யாவும் தங்கள் பகுதி பொது நூலகங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வம்பு, வழக்கு என இருந்து, அதனை எதிர்க்கொள்ள உ(ய)ரிய நன்கொடை செலுத்தி சொந்தமாக பெற்றுக்கொள்ள விரும்புவோர் 98423900190 என்ற வாட்ஸஅப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சட்ட விழிப்பறிவுணர்வு பெற விரும்புவோருக்கு, நீதியைத்தேடி... இணையதளம் வழிகாட்டும்.
ஆய்வுரை - சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா