கண்ட நாள் முதலாய்-பகுதி-40

....கண்ட நாள் முதலாய்....

பகுதி : 40

விடியற் காலையில் ஒலித்த தொலைபேசியின் சத்தத்தில் விழித்துக் கொண்ட அரவிந்தன்,திரையில் ஒளிர்ந்த "அர்ஜீன்"என்ற பெயரைக் கண்டதும் ஆவல் பொங்க தொலைபேசியை அழுத்திக் காதில் வைத்தான்...

"குட் மோர்னிங்டா அர்ஜீன்,சேருக்கு இப்போயாச்சும் ஹோல் பண்ணனும்னு தோனிச்சே...எப்படிடா இருக்க...??.."

இங்கிருந்து செல்லும் போதிருந்த அர்ஜீன் இல்லை அவன்...இப்போது அவனது மனம் முழுதாகவே மாறியிருந்தது...அங்கிருந்து வரும் போது துளசியின் நினைவுகளை மறக்க முடியாமல் வந்தவன்,இப்போதோ அவள் நினைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பழைய அர்ஜீனாகவே மாறியிருந்தான்...

துளசி என்பவள் தன் அண்ணனின் மனைவி என்ற எண்ணம் மட்டுமே தற்போது அவனிடத்தில்...அதைத்தவிர வேறெந்த உணர்வுகளுமே அவனது உள்ளத்தில் இல்லை...இதிலிருந்து விடுபடுவதற்காய் வேலையில் முழுக்கவனத்தையும் செலுத்திக் கடுமையாக உழைத்தவன்..அதில் வெற்றியும் கண்டிருந்தான்....

சுமார் ஆறு மாதங்களில் முடிக்க வேண்டிய அவனது வேலையை நான்கு மாதங்களிலேயே வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தவன்,அதற்கு மேலும் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல்..இதோ மீண்டும் அவனது நாட்டிற்குத் திரும்பிவிடத் தயாராகிவிட்டான் ...அந்த சந்தோசமான செய்தியை சிறிது நேரத்திற்கு முன்னர்தான் தன் குடும்பத்தினருக்கு அறியப்படுத்தியவன்,உடனேயே அரவிந்தனோடு பகிர்ந்து கொள்வதற்காய் அழைப்பினையும் எடுத்துவிட்டான்...அவனது மனதிலிருந்த மட்டற்ற மகிழ்ச்சி அவனது குரலிலும் வழிந்தோடியது...

"வெரி வெரி குட்மோர்னிங் டா...நான் ரொம்ப சூப்பராவே இருக்கன்...நீ துளசி எல்லாம் எப்படி இருக்கீங்க...??.."

"எங்களுக்கென்ன நாங்க ரொம்ப நல்லாவே இருக்கோம்...உன் வேலை எல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு...??.."

"அதெல்லாத்தையும் எப்பயோ முடிச்சு...பெட்டி படுக்கை எல்லாம் கட்டி ரெடியாகிட்டேன்...இன்னும் இரண்டே நாள்தான்...உங்க முன்னாடி வந்து ஐயா எப்படி நிற்குறேன்னு மட்டும் பாரு..."

"டேய் என்னடா சொல்லுற....ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குடா...ஏன்டா முதலே சொல்லல...????.."

"இப்பக்கூட சொல்லியிருக்க மாட்டேன்டா...சொல்லாம உங்க எல்லார் முன்னாடியும் வந்து நின்னு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்னுதான் நினைச்சன்...ஆனால் உங்களை எல்லாம் பார்க்கப்போற மகிழ்ச்சியில மனசு பொறுக்கல...அதான் சொல்லிட்டே கிளம்புவம்னு எல்லாரோட தூக்கத்தையும் காலையிலேயே கெடுத்து விட்டுடேன்..."

"ஹா...ஹா...நீ வேற...அங்க எல்லாரும் துள்ளிக் குதிக்காத குறையாத்தான் நீ வாற வரைக்கும் வானத்தில பறந்திட்டே இருக்கப் போறாங்க...சீக்கிரமா வந்து எங்க எல்லாரையும் தரையில இறக்கி விடுற வழியைப் பாரு..."

"அது சரி...எனக்கும் இங்க கால் தரையில படாம மேல தான்டா உலாவிட்டு இருக்கு...அப்புறம் சொல்ல மறந்திட்டன்டா...பரத் எனக்கும் கல்யாணப் பத்திரிகை அனுப்பியிருந்தான்..."

"ம்ம்...எனக்குச் சொல்லும் போதே உன்னையும் கேட்டான்...நீ அவன் கல்யாணத்துக்கு முதலே இங்க வந்துருவதானே...??..."

"ஆமாடா...உன் கல்யாணத்தைதான் மிஸ் பண்ணிட்டேன்...அவனோட கல்யாணத்தன்னைக்கு எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சு அமர்க்களப்படுத்திடலாம்..."

"ம்ம்...சீக்கிரமா வாடா..உனக்காக நாங்க எல்லாருமே காத்திட்டிருப்போம்..."

அதன் பின் சிறிது நேரம் கதைத்துவிட்டு அர்ஜீன் அழைப்பினை முடித்துக் கொள்ள,அரவிந்தன் தூக்கம் தொலைந்தவனாய் பல்கனியில் போய் நின்று கொண்டான்...நேரத்தைப் பார்த்தவன்,அப்போதுதான் மணி மூன்று என்று காட்டவும்...அதற்கு மேல் உறங்கப் பிடிக்காமல் கீழே சென்றான்...

கீழே சென்றவனுக்கு தாமே இன்று அனைத்து வேலையையும் செய்து முடித்தாலென்ன என்ற யோசனை எழ...உடனேயே அதை செயற்படுத்தவும் ஆரம்பித்து விட்டான்...வழமையாகத் துளசி நான்கு மணிக்கெல்லாம் எழும்பி விடுவாள் என்பதால்,ஒரு மணி நேரத்தில் அனைத்தையும் முடிக்கும் நோக்கில் விரைவாகவே செயற்பட்டான்...

அவளுக்குப் பிடித்தமான உணவு வகைகளைச் சமைத்து முடித்தவன்,அவளுக்கும் அவனுக்குமான தேநீர்க் கோப்பைகளோடு மாடியேறினான்...

அப்போதுதான் குளித்துவிட்டு வந்து அரவிந்தன் எங்கே சென்றிருப்பான் என்ற குழப்பத்தோடு யோசித்துக் கொண்டிருந்தவள்,அவன் கதவைத் திறந்து கொண்டு வரவும்,அவன் கையிலிருந்தவற்றை பார்த்தவளிற்கு அவன் எங்கே போனான் என்பது புரிந்து போனது...

"குட் மோர்னிங் அரவிந்...என்ன சேர் இன்னைக்கு ரொம்ப வேளைக்கே எழும்பிட்டீங்க போல...??.."

"ஹப்பி மோர்னிங் மேடம்...இன்னைக்கு காலையிலேயே ஒரு குட் நியூஸ் கிடைச்சிச்சா...அதான் தூக்கம் பறந்து போயிடுத்து..."

"அப்படி என்ன சேர் குட் நியூஸ்...??..."அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் அவளுள்ளும் எட்டிப் பார்த்தது...

"அது என்னன்னு யோசிச்சிட்டே இருங்க...நான் போய் குளிச்சிட்டு வந்திடுறன்..."

"ஹைய்யோ அரவிந்...அது என்னன்னு சொல்லிட்டுப் போங்க...நான் தான் சஸ்பென்ஸ் தாங்கமாட்டேன்னு தெரியும் ல..."என்று அவள் சொன்னது காத்தோடுதான் கரைந்து போனது...அவன் அவளிற்கு டாட்டா காட்டிவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்...

"அப்படி என்ன குட் நியூஸ்...நமக்குத் தெரியாம..??.."என்று அவள் மூளையைப் போட்டு குடைந்து கொண்டிருக்கவும்..அவன் தலையைத் துவட்டியவாறு வெளியே வந்தான்..

"என்ன லெக்ஸரர் மேடம் கண்டுபிடிக்க முடியலையா...??.."

"நீங்க என்ன கணக்குக்கு விடையா கேட்டீங்க..நான் உடனே பதிலைச் சொல்லுறதுக்கு...காலையிலேயே சஸ்பென்ஸ் வைக்காம என்னென்னு சொல்லுங்க சேர்...??.."

அதற்கு மேலும் அவளைச் சோதிக்க விரும்பாமல் அர்ஜீன் வருகின்ற தகவலை அவளிடம் கூறினான்...

"அர்ஜீன் இன்னும் இரண்டு நாளில வாறானாம்...காலையிலதான் கோல் பண்ணி சொன்னான்..."

"ஓஓஓ...இதானா சேரோட ஹப்பி மூடுக்கு காரணம்...?அவரும் அவசரமா கிளம்பினதில ஒழுங்காவே பேச முடியல...இனி இங்கதானே இருக்கப் போறாரு...உங்க தில்லு முல்லுகளைப் பத்தி அவர்கிட்ட விலாவரியா கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டியதுதான்..."

"அட பார்றா...ஐயா அப்போயும் சரி இப்போயும் சரி ரொம்ப ரொம்ப நல்ல பையனாக்கும்..."என்றவாறே டீ-சேர்ட்டில் இல்லாத கோலரை இழுத்து விட்டுக் கொண்டான் அரவிந்தன்..

"ஆ..ஹா....இதை நாங்க சொல்லனும் மிஸ்டர் அரவிந்தன்...நீங்களே சொல்லிக்கக் கூடாது..."

"சரிங்க மேடம்..."என்றவாறே அவன் கையைக் கட்டி வாயைப் பொத்திக் கொள்ளவும்,அங்கே பெரிய சிரிப்பலையொன்று உருவானது...

"அப்புறம்...உங்களோட பெஸ்ட்டு ப்ரண்ட் பவி கூட வாறதா சொன்னீங்களே மேடம்...அவங்க எப்போ வாறாங்களாம்..??.."

"அவளும் இன்னும் ஒரு வாரத்தில வந்திடுவன்னு சொன்னா...எப்படியும் பரத்-ஸ்வேதா வோட கல்யாணத்துக்கு முதல் நாள்தான் வருவாள்னு நினைக்கிறேன்..."

"அப்போ ஸ்வேதாவோட கல்யாணத்துக்கு அவங்க வரலையா..??.."

"கண்டிப்பா வருவாள்...எனக்கப்புறம் அவளுக்கு ஸ்வேதாதான் குளோஸ்...நம்ம கல்யாணத்தில பண்ணாத எல்லாத்தையும் சேர்த்து வைச்சு ஸ்வேதாவோட கல்யாணத்திலதான் அட்டகாசம் செய்யப் போறாளாம்..."

"ஹா...ஹா...அர்ஜீன் கூட இதைத்தான் சொன்னான்...பாவம் பரத்தும் ஸ்வேதாவும்,இவங்க இரண்டு பேரும் பண்ணுற கூத்தில என்ன பாடு படப் போறாங்களோ...??.."

"அதுவும் சரிதான்.."

கதைத்தவாறே தேநீரைக் குடித்து முடித்தவர்கள்,காலை உணவினையும் ருசி பார்த்துவிட்டு வேலைக்கு கிளம்பத் தயாரானார்கள்...அன்று எல்லாமே துளசிக்குப் பிடித்தமானதாகவே அரவிந்தன் பண்ணியிருந்ததில்,அனைத்தையும் ஒன்றுவிடாமல் சாப்பிட்டு அதன் மூலமாகவே அவனுக்கு அவளது நன்றியையும் தெரிவித்துக் கொண்டாள் துளசி...

அன்று இருவரது உள்ளங்களையுமே எதுவென்றே சொல்ல முடியாத ஓர் அழகிய உணர்வு சூழ்ந்து கொண்டிருந்தது... அதற்கு காரணம் அவர்கள் மனதிற்குப் பிடித்தவர்கள் வரப் போகின்றார்கள் என்பதை விடவும்,அவர்கள் காதலை ஒருவரிடத்தில் ஒருவர் சொல்லிக் கொள்ளும் காலம் நெருங்கி விட்டது என்பதேயாகும்...

ஆம்,பரத்-ஸ்வேதாவுடைய திருமணம் முடிந்ததுமே தங்களுடைய காதலைத் தெரியப்படுத்துவதாக இருவருமே மனதிற்குள் பல்வேறு ஆசைகளோடு அந்தத் திருமணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்...

ஆனால் அந்தத் திருமணத்தை ஆவலோடு எதிர் நோக்கியிருக்கும் அந்த நான்கு உள்ளங்களுக்குமே அப்போது தெரிந்திருக்கவில்லை..அன்றைய நாளில் அவர்களின் வாழ்க்கையே திசைமாறிப் போகப் போகின்றது என்பது...


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (21-Jan-18, 6:51 am)
பார்வை : 644

மேலே