களவுபோன கன்னகிகள்
பதறுகிறது பச்சிளங் குழந்தை
பக்கத்து வீட்டிலேயே
பாலியல் கொடுமை
கக்கத்தில் இருப்பதற்கும்
கற்றுத் தரணுமோ
கண்களை பார்த்துப் பழகூ
காமம் தெரியுமென்று
தொட்டால் சிணுங்கி
எப்படி உணரும்
தோட்டக்காரன் தொடுகிறானா?
இல்லை வேட்டைக்காரன்
தொடுகிறானா என
இச்சையூட்டும் இனிப்பு
பொட்டல்கள் எல்லாம்
பச்சைத் தளிர்களின்
கச்சைக் குறிவைக்கும்
கலியுக பிரம்மாஸ்திரமோ?!
போலி சூழ்ந்த
புன்னகை எல்லாம்
தாலியற்ற தாம்பத்தியத்திற்கு
வழி கோலுமோ?
தாய் என்றாலும்
தாரம் என்றாலும்
பேய் என்றாலூம்
பிள்ளை என்றாலும்
எல்லாம் ஓன்றோ கயவனுக்கு!
இரண்டு என்றாலும்
இருப து என்றாலும்
கூறுபோடுவது என்ன கணக்கு?
கலியுக காமனுக்கு
களவுபோன கன்னகிகள்
முடிவிலியை முட்டுகிறது
கணக்குபோட எண்ணிக்கைகள்....
உற்றார் வீட்டிலேயே
உண்டு உறங்கிய
காலம் மாண்டதோ?
சுற்றார் கூட
கொற்றார் ஆக
கண்டுமிரளும் காலம்
ஏன்தான் வாய்ந்ததோ?!
பார்த்துக் கொள்ளுங்கள்
பிள்ளையை என்ற
வார்த்தை இனி வாழுமோ ?
இத்தனைக்கும் பெரும்பாலும்
இளைஞன் என்பதால்
என்தலையும் தாழுமோ?
மொத்தம் படைத்த
பிரம்மனே புத்தியும்
நீதான் படைத்திருப்பாய்
சக்தியிருந்தால் அழித்துக்காட்டு
பூமியை இன்னொரு
பூமி இருந்தால்
ஏற்போம் இந்தபுத்தி
இறக்குமா பார்ப்போம்...

