மக்கள் வயிற்றில் அடிக்கலாமா
ஏற்கெனவே பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது தமிழக அரசு அமல்படுத்தியுள்ள பேருந்துக் கட்டண உயர்வு. மாணவர்கள், வணிகர்கள், அரசு, தனியார் ஊழியர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் என்று அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிராக முதலாவதாகக் களமிறங்கியிருப்பவர்கள் மாணவர்கள். தன்னெழுச்சியான அவர்களது போராட்டம் தமிழகம் எங்கும் பரவுகிறது. கட்டண உயர்வு ஏற்படுத்தியிருக்கும் பிரச்சினைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பயணிகள்:
நாகம்மா, ஓசூர்:
தனியார் பள்ளிக்கூடத்தில் ஆயாவாக வேலை பார்க்கிறேன். ஓசூரில் இருந்து ஆவலப்பள்ளி செல்ல 5 ரூபாயாக இருந்த கட்டணம், 10 ரூபாயாகிவிட்டது. எப்படிச் சமாளிப்பதென்றே தெரியவில்லை. முன்பெல்லாம் கர்நாடக பஸ்ஸைவிட தமிழக பஸ்களில் கட்டணம் குறைவு. இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.
ஐயப்பன் - நாகம்மா - ஹென்றி
ஹென்றி, கொட்டூர், குமரி மாவட்டம்:
கொட்டூர் பகுதியில் உள்ள பலரும் பேச்சிப்பாறையில் தேனீப் பெட்டிகளை வைத்துள்ளனர். கொட்டூரில் இருந்து பேச்சிப்பாறைக்கு 9 ரூபாய் இருந்த கட்டணம் இப்போது 23 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் 5 ஆண்டுகளாக தேனின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. செலவுக்கு என்ன செய்வோம்? ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கலாமா?
எஸ்.ஐயப்பன், கட்டிடப் பொறியாளர், வடகாடு:
ஒரு நாள் வந்துசெல்வதற்கு 100 ரூபாய் செலவாகிறது என்பதால் வேலைக்கு வருவதற்கே கட்டுமானத் தொழிலாளர்கள் தயங்குகிறார்கள். ஏற்கனவே மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானப் பணிகள் தடைபட்டுள்ள நிலையில் அரசின் நடவடிக்கை மேலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்ரீனிவாசமூர்த்தி, மேட்டூர்.
திருச்செந்தூருக்கு மாதம் ஒருமுறை சாமி கும்பிட வருவது வழக்கம். வந்து திரும்ப 450 ரூபாயாக இருந்த கட்டணம், இப்போது 876 ரூபாய் ஆகிவிட்டது. இனிமேல் திருச்செந்தூருக்கு மாதந்தோறும் வரமுடியாது என்பது மட்டுமல்ல வெளியூர் செல்வது என்பதே செலவு பிடிக்கும் விஷயம் என்றாகிவிட்டது!
பிரியா - சிவ வடிவேலன் - சீனிவாசமூர்த்தி
வே.சிவவடிவேலன், தில்லையாடி, தஞ்சை:
சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகிறேன். சொந்த ஊரில் உடல்நிலை சரியில்லாத பெற்றோர் இருப்பதால், வாரம் ஒருமுறையேனும் ஊருக்கு வந்துபோக வேண்டிய சூழல். சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு குடும்பத்துடன் (4 பேர்) சென்றுவர 2,160 ரூபாயாக இருந்த பஸ் கட்டணம், இப்போது 3,200 ரூபாயாகிவிட்டது. என் சம்பளத்துக்கு இது எப்படிக் கட்டுப்படியாகும்?
பிரியா, கல்லூரி மாணவி, உத்திரமேரூர்:
கிராமப் பகுதியிலிருந்து அரசு பஸ் மூலம் கல்லூரிக்கு வந்துசெல்கிறேன். பயணச்சீட்டுக் கட்டணம் இரு மடங்காக உயர்ந்திருப்பதால், கிராமப் பகுதியைச் சேர்ந்த பெற்றோர் வருவாய் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பெண் பிள்ளைகளின் கல்வியை நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வீரகுமாரி, தேனி:
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதைச் சாக்காக வைத்து, ஆட்டோ, மினி பஸ்களிலும் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ, வேன்களிலும் மாத வாடகை உயர்ந்துள்ளது. இனி விலைவாசியும் உயரும். ஆனால், எங்கள் சம்பளம்?
திரிபுரசுந்தரி - வீரகுமாரி
திரிபுரசுந்தரி, கே.கே.நகர், சென்னை:
முன்பெல்லாம் 50 ரூபாய் இருந்தாலே துணிச்சலாக வெளியே கிளம்பலாம். இப்போது வீட்டைவிட்டு வெளியே கிளம்பவே யோசனையாக இருக்கிறது. வீட்டுச் செலவுக்காகக் கணவர் தரும் தொகையில் ஏதாவது மிச்சப்படுத்தலாம் என்ற நோக்கத்தை, பஸ் கட்டண உயர்வு தவிடுபொடியாக்கிவிட்டது.
அ.பூங்குழலி, ஆசிரியை, செஞ்சி:
சாதாரணப் பேருந்து, தாழ்தளப் பேருந்து, எக்ஸ்பிரஸ் என்று பல்வேறு பெயர்கள் சொன்னாலும் எல்லாப் பேருந்துகளும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. இதில் கட்டண உயர்வு வேறா? இது மோசடி இல்லையா?
க.பூமதி, வழக்கறிஞர், திருப்பூர்:
பஸ் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் ஏழைகளும் பள்ளிக்குழந்தைகளும்தான். கட்டண உயர்வு அவர்களைப் பெரிதும் பாதிக்கும். கட்டணத்தை உயர்த்தியாகிவிட்டது சரி, இனி பேருந்துகளின் தரத்தை நிச்சயம் உயர்த்திவிடுவோம் என்று உத்தரவாதம் கொடுக்க அரசு தயாரா?
பூமதி
மு.வரதராசன், திருமானூர், அரியலூர்:
கடந்த சில ஆண்டுகளாக நேரடியாக மக்களின் சட்டைப் பையில் கைவைக்கிற நடவடிக்கைகளை அரசுகள் செய்கின்றன. பணமதிப்பு நீக்க நடவடிக்கை, தினந்தோறும் எரிபொருள் விலை நிர்ணயம், இப்போது பஸ் கட்டணம் கடுமையாக உயர்வு. மக்களைக் கசக்கிப் பிழிவதற்கும் ஓர் அளவில்லையா?
பா.வெங்கடேசன், பொறியாளர், வேட்டமலை (தி.மலை மாவட்டம்):
பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாததுதான். அதற்காக, 50 முதல் 100% கட்டணத்தை உயர்த்தியிருப்பதை ஏற்கவே முடியாது. அதைப் பாதியாகக் குறைக்க வேண்டும். அப்போதுதான் மக்களால் சமாளிக்க முடியும்!
வெங்கடேசன் - பரமசிவன் - பிரணவகுமார்
எஸ்.பரமசிவன், தூத்துக்குடி:
இங்கிருந்து திருநெல்வேலிக்கு 31 ரூபாயாக இருந்த பஸ் கட்டணத்தை, 52 ரூபாயாக உயர்த்திவிட்டார்கள். அதேநேரத்தில் தனியார் பஸ் கட்டணம் 25 ரூபாயிலிருந்து 35 ரூபாய் அளவுக்குத்தான் உயர்ந்திருக்கிறது. நிறைய நிறுத்தங்களில் நின்று சென்றாலும், 17 ரூபாய் மிச்சப்படுகிறது. என்பதால் தனியார் பேருந்துக்கு மாறிவிட்டேன். அதெப்படி அரசைவிட தனியார் குறைந்த கட்டணம் வாங்க முடிகிறது?
ஆர்.பிரணவக்குமார், கல்லூரி ஆசிரியர், நாமக்கல்:
வீட்டு பட்ஜெட்டில் 20 -முதல் 30% பஸ் கட்டணத்துக்கென்றே ஒதுக்கி வைக்க வேண்டியதிருக்கிறது. கிராமப்புறங்களில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
கோவிந்தசாமி, குட்டியாங்குப்பம், கடலூர்:
எனக்கு 82 வயதாகிறது. சிகிச்சைக்காக அடிக்கடி கடலூர் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டியிருக்கிறது. பஸ் கட்டணத்துக்கு கொடுக்கிற காசில், தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுவிடலாம்போல!
கோவிந்தசாமி - பெத்தனாட்சியார் - ஜெயலட்சுமி
பெத்தனாட்சியார், கன்னிவிளை, தூத்துக்குடி மாவட்டம்:
திருச்செந்தூர் முருகன் கோயிலில் துப்புரவுப் பணி செய்கிறேன். தினக்கூலி 150 ரூபாய். நாலுமாவடியிலிருந்து திருச்செந்தூருக்குப் போய்வர பஸ் கட்டணமே 44 ரூபாயாகிவிட்டது. இரு பிள்ளைகளும் கல்லூரிகளுக்குச் சென்றுவர 80 ரூபாய் வரையில் செலவாகும். எப்படிச் சமாளிப்பேன்?
ஜெயலட்சுமி, திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் எத்தனையோ தனியார் தையல் பயிற்சி நிறுவனங்கள் இருக்கின்றன. செலவை மிச்சப்படுத்துவதற்காக, பர்கூரில் இருக்கிற அரசு ஐடிஐயில் இலவசத் தையல் பயிற்சியில் சேர்ந்தேன். இப்போது தனியார் நிறுவனத்தின் பயிற்சிக் கட்டணத்தைவிட, அரசு நிறுவனத்துக்குச் செல்ல பேருந்து கட்டணம் அதிகமாக இருக்கிறது.
ரவி, திருவொற்றியூர்:
சுமை தூக்கும் தொழிலாளியான நான், பணிக்காக நாள்தோறும் சென்னை- பாரிமுனைக்கு பஸ்ஸில்தான் சென்றுவந்தேன். தற்போது பஸ்சுக்கான செலவு மட்டுமே மாதம் ரூ.2 ஆயிரம் ஆகும் என்பதால், மின்சார ரயிலுக்கு மாறிவிட்டேன். ரயிலிலோ நெரிசல் அதிகமாகிவிட்டது!
மனோகரன், சின்மயாநகர், சென்னை:
தமிழக அரசை மட்டும் குறைகூறிப் பயனில்லை. பெட்ரோல் டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதும் பஸ் கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணம். பொதுப் போக்குவரத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இருந்திருந்தால், டீசல் விலையையாவது குறைத்திருக்கும்.
கருணாநிதி - மனோகரன்
எம்.கருணாநிதி, சைதாப்பேட்டை, சென்னை:
போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைக் காரணம் காட்டி பஸ் கட்டணத்தை உயர்த்தியிருப்பது நியாயமற்ற செயல். அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த பணத்தைத் திரும்ப வழங்காதது அரசும், அதிகாரிகளும் செய்த தவறு. அதற்காக மக்கள் தண்டிக்கப்படுவதா?
வரதராஜன், வெண்மணி:
வெண்மணியிலிருந்து அரியலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல பஸ் கட்டணம் 14 ரூபாயிலிருந்து 30 ஆக உயர்ந்திருக்கிறது. ஆக, ஏழைகள் இலவச மருத்துவம் பெற பேருந்துக்கே ரூ.100 செலவழிக்க வேண்டும் என்றாகிவிட்டது. அதனால், எங்கள் ஊரில் இனி யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையென்றால் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முடிவெடுத்திருக்கிறோம்.
சேது.செல்வகணபதி - வரதராஜன்
சேது.செல்வகணபதி, சிவகங்கை:
வறட்சி மாவட்டமான சிவகங்கையிலிருந்து பிழைப்புக்காக பக்கத்து மாவட்டமான மதுரைக்குச் சென்றுவருவோருக்கு இது மேலும் சுமை. தொழிலாளர்கள் ஏற்கனவே குடிநோய்க்கு அடிமையாகி டாஸ்மாக்குக்குச் செலவழிக்கின்றனர். பஸ் கட்டணத்தை உயர்த்தி மீதிப் பணத்தையும் பறிப்பது எந்த வகையில் நியாயம்?
கே.ராமசாமி, கடம்பூர், ஈரோடு:
மலைப்பகுதி மக்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, அரசு சேவைகள் என அனைத்துக்கும் அரசு பஸ்ஸைத்தான் நம்பி இருக்கின்றனர். இந்நிலையில், பஸ் கட்டண உயர்வு எங்களுக்குப் பேரிடியாக விழுந்திருக்கிறது. நகரப் பகுதிகளுக்கு கூலி வேலைக்குச் சென்றுவருபவர்கள் நிலைமை படுமோசம்!
மரியசெல்வி - ராமசாமி
மரியசெல்வி, மீனம்பட்டி, விருதுநகர்:
பட்டாசுத் தொழிலாளியான நான், வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 27 நாட்களாக வேலையில்லாமல் தவித்துவந்தேன். ஆலைகள் திறக்கப்பட்ட முதல் நாளே, பஸ் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டேன். அதே சம்பளம்தான். ஆனால் பஸ் கட்டணம் மட்டும் இரண்டு மடங்கு என்றால் என்ன நியாயம்?
சாந்தா, சுந்தராபுரம்:
வாரக்கூலி, மாதச் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்லும் ஏழை, நடுத்தர மக்கள் என்ன செய்வார்கள்? முன்பு கோவை கணபதியிலிருந்து உக்கடத்துக்கு 6 ரூபாய். இப்போது 13 ரூபாய். இரண்டு மடங்குக்கு மேல்! மற்ற செலவுகளுக்கு நாங்கள் என்ன செய்வது? எப்படி வாழ்வது?
பிரியா - சாந்தா - வெங்கடேசன்
நா.வெங்கடேசன், பேராவூரணி, தஞ்சை:
குறைந்த கட்டணம் வசூல் செய்யும் தனியார் பேருந்துகள் லாபத்தில் இயங்கும்போது, கூடுதல் கட்டணம் வசூல் செய்த அரசுப் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகத்தில் உள்ள ஊழல் ஓட்டையை அடைக்காமல், கட்டணத்தை எவ்வளவு உயர்த்தினாலும் கஜானா நிறையாது!
ராமசாமி, கொணவக்கரை.
தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை பார்க்கிறேன். கிடைக்கும் கூலியில சாமான்கள் வாங்க கோத்தகிரிக்குப் போக வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை போனால், பஸ்ஸுக்கே காசு போய்விடும்.
காசி, தர்பூசணி வியாபாரி, திருப்பூர்:
அரசின் வருவாய் இழப்பைக் காரணம் காட்டி மக்களிடம் அபகரிக்கும் திட்டமாகத்தான் பஸ் கட்டண உயர்வு தெரிகிறது. எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை அபரிமிதமாக உயர்த்தினார்கள். சாமானிய மக்களைக் கைவிட்டுவிட்டார்கள். அரசியல் என்பது மக்கள் சேவை என்ற நிலை மாறிவிட்டது. மக்கள் மீது திணித்துள்ள கட்டண உயர்வை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!