தமிழ் வாழ்க, தமிழர் ஆள்க – கட்டுரை

இன்று காலையில் தினத்தந்தி செய்தித்தாளில் பிஸ்லேரி தண்ணீர் பாட்டிலின் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அந்த பாட்டிலில் பிஸ்லேரி என்று தமிழிலே அச்சிடப்பட்டு இருந்தது. அதை பரத நாட்டிய உடையணிந்த ஒரு பெண் ஒரு அபிநயத்தில் பிடித்திருக்கிறாள். அவ்விளம்பரத்தை பார்க்கும் பொழுதே மனதில் ஒரு மகிழ்ச்சி, தமிழ் மொழியின் வளர்ச்சியை பார்த்து.
இதற்க்கு காரணம் ஒரு காலத்தில் ஆங்கிலமே நாகரிகம் என கருதிக்கொண்டு இருந்த எம் மக்கள், தங்கள் தாய் மொழியே சிறந்தது என விழிப்படைந்ததே. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இதை புரிந்து கொண்டு தங்கள் விளம்பர யுக்தியை மாற்றுகின்றன. இதை விட வேறு என்ன பெருமை வேண்டும் தமிழுக்கு. ஆம், நான் சற்று பழைய (ஒரு ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்பு)மதராஸ் சாலைகளின் புகைப்படங்களை பார்த்திருக்கிறேன்.
அதில் உள்ள எந்த கடையின் பெயர்ப்பலகையிலும் தமிழ் மொழி இல்லை. ஆனால் இன்று அந்நிலை இல்லை. பல வெளிநாட்டு நிறுவனங்கள் (உதாரணத்திற்க்கு கே எப் சி, டொமினோஸ், சப் வெ மேலும்) மற்றும் வணிக அங்காடிகள் தங்கள் பெயர்ப்பலகையில் தமிழ் மொழியை சேர்த்துள்ளன. இதற்கு காரணம் யாராக இருந்தாலும், (எனக்கு தெரிந்து காரணம் தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள்)நம்மொழி வளர்ச்சிக்காக நாம் பெருமைபட்டுக் கொள்ளலாம்.
பிற தேசங்களில் நாகரிகம் என்ற அமைப்பு உருவாவதற்கு முன்பே தமிழர்கள் பொழுது போகாமல் பரமபதம் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். இதற்கு ஆதிச்சநல்லூர் ஊரில் நிகழ்ந்த அகழ்வாராய்சியில் கிடைத்த 3000 வருடங்கள் பழமையான தங்கத்திலான தாயக் கட்டைகளே சான்று. அக்காலத்திலேயே நாம் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியது அனைவரும் அறிந்த ஒன்றே.
பிற நாடுகளில் நமது பொங்கல் மற்றும் இதர தமிழ் பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படுவதும், இந்தியாவின் பிற பெரும்பான்மை மொழிகளை தவிர்த்து நமது மொழியில் நல்வரவு என அவர்கள் நாட்டில் வரைவதும், அவர்கள் தேசிய கீதத்தை நமது மொழியில் பாடுவதும், அவர்கள் நாட்டு நாணயத்தில் நமது மொழியை பொறிப்பதும் தமிழர்களுக்கே கிடைத்த ஒரு உலக மரியாதை.
இது போன்ற பெருமைகளினால் நம்மொழி செம்மைபடுத்தப்படுகிறது. மேலும் இக்காரணங்களினாலே இந்தியாவின் பிற மாநிலங்களை தவிர்த்து தமிழ்நாடு ஒரு தனித்தன்மையோடு தலை சிறந்து விளங்குகிறது.
மேலும் நமது பெருமைக்கு மற்றுமொரு காரணம் பிற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது நாம் சற்று தன்னிறைவு மாநிலமாக விளங்குகிறோம். நீங்கள் பல தொழிற்சாலையில் வடஇந்திய தொழிலாளிகள் உழைப்பதை பார்க்கலாம். மேலும் பல பல்கலைக் கழகங்களில் வடஇந்திய மாணவர்கள் பயில்வதை பார்க்கலாம். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மாநிலங்களில் கிடைக்காத கல்வியோ அல்லது வேலை வாய்ப்போ அவர்களுக்கு தமிழகத்தில் கிடைக்கிறது.
மற்றொரு காரணம் இது வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு மற்றும் விருந்தோம்பலை விரும்புவன் தமிழன் என்பதுதான். இதனால் அவர்கள் அச்சம் ஏதும் இன்றி இங்கு தங்கி தங்கள் காரியத்தில் ஈடுபடுகிறார்கள். இதுவே தமிழன் ஒருவன் டெல்லியிலோ, ராஜஸ்தானிலோ, பீகாரிலோ தனது வாழ்வியலை நிம்மதியா அமைத்துக்கொள்வது சந்தேகம்தான்.
உடையில் காஞ்சிப்பட்டு, இனிப்பில் திருநெல்வேலி அல்வா, பூட்டிற்கு திண்டுக்கல், முட்டைக்கு நாமக்கல், நடனத்தில் பரத நாட்டியம், விளையாட்டில் சிலம்பம், வீரத்தில் ஜல்லிக்கட்டு, சுற்றுலாவிற்கு கொடைக்கானல், முறுக்கிற்கு மணப்பறை, பலாப் பழத்திற்கு பன்ரூட்டி, பூவிற்கு மதுரை மல்லி, பிரியாணிக்கு ஆம்பூர், அருவிக்கு குற்றாலம், ஆயத்த ஆடைக்கு திருப்பூர், கோடைக்கு உதகமண்டலம் இப்படி இன்னும் நமது ஊர் பெருமையை அடுக்கி கொண்டே போகலாம்.
இதற்கும் மேல் அரேபிய நாடுகள் போல் அதிக வெப்பமும் இல்லாமல், அண்டார்டிகா போல் அதிக குளிரும் இல்லாமல் ஒரு மிதமான சீதோஷ்ண நிலையை இயற்கை நமக்கு அளித்திருப்பதே ஒரு வரம். எனவே தமிழ் மொழி வாழும், தமிழர்கள் இவ்வுலகத்தை வழிநடத்துவார்கள்.
‘தமிழ் வாழ்க, தமிழர் ஆள்க’

எழுதியவர் : அகரன் (28-Jan-18, 12:21 am)
சேர்த்தது : அகரன்
பார்வை : 462

சிறந்த கட்டுரைகள்

மேலே