ஆனந்த யாழ்
ஒவ்வொரு ஆண்மகனும் தனது தாயின் படிமங்களை, தனக்கு வாய்த்த மனைவியிடம் தேடுகிறானோ இல்லையோ, தனக்கு பிறந்தவளிடம் கட்டாயமாக தேடிக்கொள்கிறான். மகளின் கண்களில், கன்னத்தில், காதுகளில், கழுத்து வளைவுகளில், விரல் நகங்களில் எங்கேனும் தன் தாயின் சாயல் இருக்குமோ என தேடித் தொலைகிறான். அவ்வாறாக ஏதேனும் கண்டுகொண்டால், அவன் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. தன் வாழ்நாள் முழுவதும் தனக்குத் தெரிந்தவர்கள் அனைவரிடமும் மகள் அவனது தாய் போலவே இருப்பதாகச் சொல்லி பெருமை பட்டுக்கொள்கிறான்.
"என்னை பெத்த அம்மா!!!" என்று தாயை அழைத்தவர்களைக் காட்டிலும், மகளை அழைத்த தந்தைகளே இங்கு நிறைந்திருக்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த தகப்பன் ஒருவர், அவரது மகளின் கால் விரல்களில் பெருவிரலுக்கு அடுத்த விரலானது தனது தாயின் விரலைப் போல இருப்பதாக ஒருநாள் சொன்னார். எத்துணை நுட்பமாக தனது தாயின் சாயலை அவர் தேடியிருந்தால், அவரால் இதனைக் கண்டுபிடித்திருக்க முடியுமென்று நான் வியந்து போய் அமர்ந்திருந்தேன்.
தந்தைக்கும் மகளுக்குமான உறவு பல இடறுதல்களைக் கடந்தே வருகின்றது. பொதுவாக ஒரு தாய்க்கும், அவளது மகள் (அ) மகனுக்குமிடையேயான உறவு முதல் நாள் முதல் கடைசி நாள் வரை பெரிதான மாற்றங்களுக்கு உட்படுவதில்லை. தாய் மீது கொண்ட அன்பு பெரும்பாலும் கடைசி நாள் வரை மாற்றங்கள் அதிகமின்றி காப்பாற்றப்படுகின்றது. காலமாற்றத்தில் பெரிதும் பாதிக்கப்படுவது தந்தையும், அவரது அன்புமே.
குழந்தைகள் வளர்ந்து தம் சொந்தக் கால்களில் நிற்கத் தொடங்கும் நாட்களில், பெருமை கொண்டாலும், தம் உதவி இனி குழந்தைகளுக்கு தேவையில்லை என்பதை உணரும் வேளைகளில் தந்தைகள் பெரிதாய் உடைந்து போகின்றனர். அதன் பின்னர் குழந்தைகள் மீது அன்பை வெளிப்படுத்தும் போட்டியில், அப்பாக்கள் பல நாட்கள் அம்மாக்களிடம் தோற்றுப்போகின்றனர். இருப்பினும் வெளிப்படுத்தப்படாத அந்த அன்பு அதிகம் சக்தி வாய்ந்தது என்பதை அப்பாக்கள் அவ்வப்போது நிரூபிக்கத் தவறுவதில்லை.
மேலே சொன்ன அதே தந்தை இன்னுமொரு ஒற்றுமை குறித்தும் கூறுவதுண்டு. அவரது மகள் வைக்கும் மீன் குழம்பு தன் தாயின் கைப்பக்குவத்தில் இருப்பதாகவும், அத்தகைய நாட்களில் தான் அதிகம் சாப்பிட்டு விடுவதாகவும் சொல்வார். என்றோ இறந்து போன தன் தாய், மகள் ரூபத்தில் இன்னமும் தன் கூடவே இருப்பதாக இத்தகைய தந்தைகள் நம்புகின்றனர்.
"மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், முத்தங்கள் காமத்தைச் சேர்ந்ததல்ல." என்று இயக்குனர் ராம் சொன்னதை நாம் அனைவரும் மனமுவந்து ரசித்தாலும், இவ்வரிகளின் உண்மையான ஆழத்தை மகள்களை பெற்ற அத்தகைய அப்பாக்களால் மட்டுமே உணர்ந்திட முடியும்.
பெண் குழந்தைகளுக்கும், அப்பாவுக்குமான அன்பில் இடைவெளி என்பது அவள் வயதுக்கு வந்த நாட்களில் இருந்தே துவங்குகின்றது. அது வரை தோளிலும், மடியிலும் ஏறி விளையாடிய குழந்தை, தனிமையில் பல நேரங்களை செலவிட துவங்குகின்றது. "ஆண் பையன்களிடம் இனி பார்த்து பழக வேண்டும்" என அம்மா சொன்னதை ஆமோதித்து, அப்பாவையும் அந்த ஆண்கள் கூட்டத்தோடு சேர்த்துக் கொள்கின்றனர் அவர்கள். "ரெயினீஸ் ஐயர் தெரு" என்ற நாவலில் வண்ணநிலவன் அத்தகைய பென்குழந்தை ஒன்று வயதுக்கு வந்த பின்னர் அப்பா மீதான அவளது அன்பு அடையும் மாறுதல்கள் குறித்து சில பக்கங்கள் எழுதியுள்ளார்.
வண்ணநிலவன் எழுதியது போலவே நான் மேலே கூறிய தந்தையும் அத்தகைய மாற்றத்தை கடந்து தான் வந்தார். அவரது மகளுக்கும் அவருக்குமிடையே ஒரு சிறு இடைவெளி இருந்து வந்தது. அத்தகைய நிலையில், மகளின் திருமணமும் வந்தது. கணவனுடன் புதுப்பெண் அவன் ஊர் போக வேண்டிய தருணம். அவள் கண்ணீர் மல்க, தாயிடமும் தம்பிகளுடமும் விடை பெறுகின்றாள். சூழ்ந்திருக்கும் தோழிகள், உறவினர் என யாவரிடமும் விடை கேட்கின்றாள். ஆனால், ஏனோ அப்பாவின் முகத்தினையும், கண்களையும் பார்ப்பதை மட்டும் தவிர்க்கிறாள். அவரும் மகள் போவதற்கு வண்டி, சீர் செனத்தி எல்லாம் சரி பார்ப்பது போல தன்னை வேறு வேலைகளில் ஆழ்த்திக் கொள்கிறார். எல்லாம் முடிந்து புதுப்பெண், வண்டியில் ஏறி அமர்கிறாள். காரின் பின்புற சன்னலை அம்மாவும், தம்பிகளும் சூழ்ந்துகொள்கிரார்கள். அப்பா முன்புற சன்னல் வழியாக டிரைவரிடம் வண்டியை பார்த்து ஓட்டும்படி சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்பாவிடம் விடை பெறாதது அவளை ஏதொ செய்தது. உடலின் வலிமை அனைத்தையும் திரட்டி "அப்பா, போயிட்டு வரேன் பா" என்பதை முழுதாய் சொல்ல முடியாமல் பாதியிலே நிறுத்தி கை நீட்டி அப்பாவை பிடித்திவிட முயன்று, கதறி அழுகிறாள். அது வரை கல்லாய் நின்ற மனிதன் "சரிம்மா" என்று சொல்லிவிட்டு, தான் அழுவதை யாரும் பார்த்துவிடக் கூடாதென்று வீட்டுக்குள் ஓடுகிறார். காற்றிலே அவரது கண்ணீர் துளிகள் தெறித்தோடின. ஆண்கள், அதுவும் வயது முதிர்ந்த ஆண்கள் அழுதிடக்கூடாது என்று எழுதப்படாத விதியொன்று இங்கு உள்ளதே.
அந்த நேரத்தில் என்னுள் தோன்றியது ஒன்றே ஒன்று தான். உறவுகளை வரிசைப்படுத்துவதென்பது எவராலும் முடியாத காரியம். அன்பினை எதைக் கொண்டு அளப்பது? இருப்பினும், உறவுகள் அனைத்தையும் ஒரு காகிதத்தில் எவரேனும் எழுதச் சொன்னால், நான் 'தந்தை-மகள்' உறவினை பிள்ளையார் சுழியென்று எழுதி, மற்ற உறவுகளை எழுதத் தொடங்குவேன்.