சித்தர்கள் வாக்கு சிவன் வாக்கு

இயற்கையோ டியைந்து வாழ்வினை நகர்த்தும்
***இயல்பினைக் கொண்டவர் சித்தர் !
முயல்வதெல் லாமே மெய்ப்புலன் காண
***முனைந்திடும் அன்னவர் சித்தம் !
வியப்புறத் தக்க சக்திக ளோடு
***விளங்குதல் சித்தரின் வாழ்வு !
மயலதை விடுத்து மனத்தினை யடக்கி
***வாழ்வியல் வகுத்திடு வாரே !!

இறைவனைத் தேடி அலைந்திட வேண்டா
***என்னுளும் உன்னுளும் இருப்பான் !
குறைவற உடலைப் பேணிடு வாயேல்
***குடிகொளும் கடவுளைக் காண்பாய் !
உறைந்திடும் இறையை அவனரு ளாலே
***உளத்தினுள் உணர்ந்திடச் சொன்ன
நிறைமொழி மாந்தர் அருள்மொழி தன்னை
***நிரந்தரன் வாக்கெனக் கொள்வோம் !!

தன்னல மின்றிப் பித்தனாய்த் திரிந்து
***தவத்தினால் சிவனருள் கூடி
நன்னெறி புகட்டும் சித்தரின் வாக்கால்
***நலம்பல கிட்டிடும் வாழ்வில் !
அன்பினால் உணர்ந்து திருவடி பற்றி
***அட்டமா சித்தியும் பெற்றோர்
சொன்னதை நாளும் கடைபிடித் தாலே
***தூய்மையாய் மாறிடும் வாழ்வே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Jan-18, 9:28 pm)
பார்வை : 675

மேலே