எனது மொட்டைமாடி இரவுகள்
உனது நினைவுகளைச்
சுமந்த படியே
கடந்து கொண்டிருக்கிறது
எனது மொட்டைமாடி இரவு…
அந்த கரிய வானத்தை
பொத்துக்கொண்டு
கவிதையாய் விழுகின்றது
உன் நினைவுகள்.
கண் சிமிட்டும்
விண்மின்கள் எல்லாம்
நீ சிமிட்டும்
விழிகளாகின்றன.
உனது
கரிய கூந்தலைப் போன்று
கணத்துக்கிடக்கிறது
என்னைச் சுற்றிய
கரிய இருள்.
அடர்ந்த இருட்டுப்போலவே
அமைதியும்
நிசப்தங்களால் நிறைந்திருக்க
உன் கால்கொலுசு
ஓசை மட்டும்
காதில் விழுகின்றது…
இரவு அழகு
இரவில் உன்நினைவு
அழகின் அழகு
உன்னையன்றி வேறெதுவும்
காணாமலேயே போய்விடுகிறது
இந்த கரிய இருளில்…
பனியில் நனைந்துவரும்
காற்றெல்லாம்
உன்னைப்போலவே
பற்றிக் கொள்கிறது
என் மேனியை…
ஒற்றை நிலவு
தனித்திருப்பதுப் போலவே
நானும் தனித்திருக்கிறேன்…