அப்பாவுக்கு பிறந்தநாள்

நான் தாயின் கருவினிலே துஞ்சுகையில்
உன் தாரம் வயிரதனை வருடுகையில்
என் சருமம் உன் வருடல் உணர்ந்ததுவே
என் தந்தை நீயெனவே உணர்ந்தனனே

நான் எப்பிறப்பை எவ்வுலகில் எய்தினாலும்
அப்பிறப்பை உன்பிறப்பால் பெற்றிடவே – என்
உள்ளம் ஓயாது துடிக்கிதுவே; மனம்முழுதும்
உன் நாமம் ஒலிக்கிதுவே

பிறந்த நாள் முதலே வறுமையுனை சேர்ந்ததுவே
நீ வளர்ந்திடவே வறுமையதும் வளர்ந்ததுவே
அந்நாள் முதலே உழைப்பதனை தொடங்கிவிட்டாய்
கடைசிநாள் வரையில் உழைத்துக் கொண்டே நீயிருந்தாய்

எந்ததுன்பம் என்னிலையில் உனைக் கொண்டபோதும்
அறம் என்ற பாதைதனை நீ மாற்றவில்லை-அறமென்ற
இறைவழியே சிறந்ததென்று அவ்வழியை என்றென்றும்
தொடர்ந்திட்டாய் எங்களையும் தொடரச் செய்திட்டாய்

தந்தையென்ற எவரும் வாழ்வில் வள்ளல்களே
உனை சுரண்டுபவர் தினமுனது பிள்ளைகளே
இன்று உன் பிள்ளை உனக்கு சுரண்டல் காரன்
நாளை அவன்பிள்ளைக்கு அவனே வள்ளலன்றோ

காத்திடப்பா சிலகாலம் எனக்காக வந்திடுவேன்
உனை தூக்கிச் சுமந்திடவே; உன் பாரம் என்தோளில்
ஏற்றிடுவேன் இன்பமொன்றே அத்தினம் முதல்
உனக்குநான் தந்திடுவேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா……

எழுதியவர் : (31-Jan-18, 12:06 pm)
பார்வை : 5407

மேலே