மனிதத் தன்மை, மனித நேயம்--------- ராம் மனோகர் ---- படித்தது
கேள்வி - எத்தனையோ சமயங்கள் தோன்றினாலும், மனிதன் அவற்றில் ஏதோ ஒன்றைப் பின்பற்றி ஒழுகினாலும், மனிதத் தன்மை, மனித நேயம் என்பது மனிதனிடத்தில் இல்லாமல் போய் விட்டதே ஏன் ?
இராம் மனோகர் - இந்தக் கேள்வியை நாம் மற்றவர்களைப் பார்த்து கேட்பதற்கு முன், முதலில் நம்மை நாமே கேட்டுக் கொள்வதுதான் முறையாகும். ஏனெனில் நாமும் இந்த மனித சமுதாயத்தில் ஒரு அங்கம்தான் என்பதை மறந்து விடக் கூடாது. சமயம் என்றால் என்பதற்கு பலரும் பல்வேறு விளக்கங்களை முன் வைக்கிறார்கள். பக்குவப்படுத்துதல், உண்மையை நோக்கி அதாவது மெய்ப் பொருளை நோக்கி அழைத்துச் செல்லுதல், மெய்ப்பொருள் மயமாதல் என்று பல விதமான விளக்கங்கள் உள்ளன. எது எப்படி இருந்தாலும் சமயங்கள் கற்பிப்பது இறைத் தன்மையை அடைவதற்கான வாழ்வியல் நெறிகளையேயாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் அவற்றை எந்த அளவில் நாம் கை கொள்ளுகிறோம் அல்லது கடைபிடிக்கிறோம் என்பதுதான் கேள்வி.
அதுவே உங்கள் கேள்விக்கான பதிலும் கூட. சமயங்கள் என்ன செய்கின்றன ? மனிதனை கட்டுப்பாட்டோடு வாழச் சொல்கின்றன. வெளியிலிருந்து கொண்டு, மனிதனின் வெளி விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் உள்ளே ஒழுக்கத்தை கொண்டு வந்து விடலாம் என்பது சமயங்களின் திட்டமாகும். ஆனால், மனிதன் என்ன செய்கிறான். வெளி விவகாரங்களில் சமயங்கள் குறிப்பிடுகிற ஒழுங்கையும், நேர்த்திகளையும் கடைபிடிக்கிறானே தவிர, உள்ளே அவற்றை கடைபிடிக்காமல் கை விட்டு விடுகிறான். இங்குதான் முரண்பாடு தோன்றி விடுகின்றது. கட்டுப்பாடு என்பது உள்ளே உள்ளத்திலிருந்து வர வேண்டும். வெளி விவகாரங்களில் கட்டுப்பாடு என்பது நிலைத் தன்மையற்றது. மனிதனை வெளியிலிருந்து கட்டுப்படுத்தி யாதொரு பயனுமில்லை. ஏனெனில் மனித மனமானது சுதந்திரமானது. அது எத்தகைய கட்டுப்பாட்டையும் விரும்புவதில்லை.
மனதின் ஒழுங்குத் தன்மையையும், நேர்த்தியையும் கூட மனித மனமானது சுதந்திரமாகவே கடைபிடிக்க விரும்பும். ஆனால் இங்கே நிலைமை வேறு விதமாக இருக்கிறது. புறத்தே கட்டுப்பாடு, அகத்தே சுதந்திர தாகம். இரண்டும் முரண்படுகிறது. மனிதன் நடிக்க ஆரம்பித்து விடுகிறான். அவன் யதார்த்தம் இங்கே அடிபட்டுப் போய் விடுகிறது. இலக்கை மறந்து விட்டு, மார்க்கத்தை பற்றிக் கொண்டு, கட்டுப்பாடோடு நடப்பது போலப் பாசாங்கு செய்கிறான். நன்றாகக் கவனித்துப் பாருங்கள், மார்க்கங்கள் வேறுவேறான வழிகளைக் காட்டுகின்றன. ஏனெனில் அவை வெவ்வேறு மனிதர்களிடமிருந்து உருவானவை. ஆனால், ஒழுக்கம் என்பது உலகிலுள்ள மனிதர்கள் அனைவருக்கும் ஒன்றுதான். ஏனெனில் அது கடவுள் என்கிற ஒருவரிடமிருந்து வந்தது. எனவே எவனொருவானால் மெய்ப்பொருள் ஒன்றுதான், ஒழுக்கம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான் என்ற பேதமற்ற நிலையை உணர முடிகின்றதோ, உணர்ந்து அவ்வழி ஒழுக முடிகின்றதோ, அவனால் மட்டுமே உண்மையான சமய நெறியைப் பற்றி ஒழுக முடியும்.
உண்மையான சமய நெறி என்பது உள்முகமான ஒழுக்கத்தையும், நேர்த்தியையும் குறிக்கின்றது. மாறாக புற விவகாரங்கள் உள்முகமான வளர்ச்சியை, முன்னேற்றத்தை அழித்து விடுகின்றன. தனக்குள் இருக்கும் உண்மையை, தெய்வீகத்தை, அதன் அருளை உணர முடிந்தவனால்தான் வெளியிலிருக்கும் உண்மையை உணர முடியும். எனவே எந்த சமயம் மனிதனின் உள்ளுக்குள் இருக்கும் மெய்ப்பொருளை, மெய்ப் பொருள் தன்மையை அவனுக்கு விளக்கிக் காட்டுகிறதோ ? எந்த சமயம் மனிதனின் உள்ளுக்குள் ஒழுங்கையும், நேர்த்தியையும் சுந்திரமாகச் செயல்படுத்தக் கற்றுக் கொடுக்கிறதோ ? அந்த சமயம்தான் உண்மையான சமயமாகும். அதன் வழி நிற்பவர்களே மனிதத் தன்மையோடு திகழ்பவார்களாகிறார்கள். மற்றவர்களெல்லாம் புறச் சமயவாதிகளே. அவர்களால் அவர்களிடமோ, இந்த சமூகத்திடமோ எந்தவிதமான வளர்ச்சியையோ, நல்ல மாற்றத்தையோ கொண்டு வர முடியாது.
தன்னை அறிந்தவனே தலைவனை அறிந்தவனாகிறான். தன்னை மனதளவில் தூய்மைப்படுத்திக் கொண்டவனோ !!! தலைவனாகவே ஆகி விடுகிறான்.