மழை
இ
விண்ணை மறைக்க வந்து
குவிந்தன கார்க்கால மேகக்கூட்டங்கள்
போர்க்கோலம் பூண்ட பெரும்
மத்த கஜங்கள் பொருதுவதுபோல், அவை
உரசிட விண்ணை துளைத்தது
கோட்டை வாசலின்மேல் ஒலிக்கும்
பேரோசை பேரிகைகள் ஒலிபோல்
விண்ணப் பிளக்கும் கோடை இடி;
வாளேந்திய காலாட்கள் படைகள்
வானில் வந்து மோதிட ஒன்றோடொன்று,
உராசிய வாட்கள் தந்த ஒளிபோல,
அங்கு விண்ணைப்பறித்தன கொடி மின்னல்கள்,
வீசிய பெரும் காற்றில் விண்ணில்
வந்தடைந்தன தூசியும் துரும்பும் சிறுமணல் துகளும்,
மேகத்தின் பின்னே தொக்கி ஒளிரும் ஆதவன்
கிரணங்கள் பட்டு அனல் கக்கும் போர்க்களமானதுவே;
தீவிர மண் வாசனை எங்கும் பரவிட,
தூறல் வந்தது, தீவிரமானது,, பெருமழையானது
மண்ணை நனைத்து எங்கள் மனம் குளிர
தெருவெல்லாம் பெருகி ஓடியது
எப்போதோ வெள்ளப்பெருக்கெடுக்கும் பாலாறுபோல்
கற்கால பெருமழை.