வஞ்சம் செய்வாரோடு கவிஞர் இரா இரவி

வஞ்சம் செய்வாரோடு!

கவிஞர் இரா. இரவி

வெள்ளைக் கொடியோடு வந்தவர்களைச் சுட்ட
வஞ்சகர்களை மன்னிக்க மனம் வரவில்லை!



மனிதாபிமானமற்ற செயல் புரிந்திட்ட
மனித மிருகங்களை மன்னிக்க விரும்பவில்லை!



தமிழ் இனத்தையே கூண்டோடு அழித்திட்ட
தரமற்ற மனிதர்களை மன்னிக்க ஒப்பவில்லை!



நம்ப வைத்து கழுத்தை அறுத்த கதையாக
நம்பி வந்தவர்களை மோசம் செய்தனர்!



போரில்லாப் பகுதி என்று அறிவித்து விட்டு
போர் புரிந்து கொன்றனர் வந்தரவர்களை!



முதியவர் பெண்கள் குழந்தைகள் என்று பாராமல்
மூர்க்கத்தனமாக கொன்று குவித்து மகிழ்ந்தனர்!



ஏன்? என்று கேட்க நாதி இல்லாமல் போனது
இந்த உலகமே வேடிக்கைப் பார்த்தது!



தமிழினம் அல்லாமல் வேறுஇனம் அழிந்திருந்தால்
தரணியில் பொங்கி எழுந்து இருப்பார்கள்!



மனிதாபிமானமற்ற முறையில் ஒரே நாளில்
மனிதர்களைக் கொன்று குவித்தனர் கொடூரர்கள்!



ஐ.நா. மன்றமும் ஆண்டுக்கணக்கில் விசாரிக்கின்றது
அவர்களை வஞ்சகர்களை கைது கூட செய்யவில்லை!



இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அவலம்
இலங்கையில் நடத்த முடிந்தது சோகம்!



நீரு பூத்த நெருப்பாக பூத்தே உள்ளது
நெஞ்சத்தில் வஞ்சகர்களின் வஞ்சம்!



மறந்திட நினைத்தாலும் மறக்க முடியவில்லை
மனதின் ஓரத்தில் வந்து தூக்கம் கலைக்கிறது.





குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை தராவிட்டாலும்
குறைந்தபட்சம் கைதாவது செய்யுங்கள்!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (3-Feb-18, 6:52 pm)
பார்வை : 94

மேலே