ஏழையின் சிரிப்பில்

பாெழுது இருண்டு காெண்டிருந்தது. வீட்டைப் பெருக்கி விட்டு குப்பி விளக்கை எடுத்து இருந்த கடைசிச் சாெட்டு எண்ணெயை ஊற்றி காெழுத்தி கதவின் மூலையில் வைத்து விட்டு திண்ணையில் அமர்ந்தாள் சித்ரா. "அம்மா... அம்மா...." ஓடி வந்து மடிக்குள் விழுந்தான் நிசாந். "ச்சீ.... இதென்ன முதுகெல்லாம் மண், எழும்பு கழுவ" கைகளைப் பிடித்து இழுத்தவளிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்தான். "யாருக்கு ஓட்டம் காட்டுறாய்..." கிணற்றடிக்குக் கூட்டிச் சென்று குளிப்பாட்டி உடைகளை மாற்றி விட்டாள். " அம்மா நான் பாட்டு பாடமாக்க வேணும், நாளைக்கு ரீச்சர் கேப்பா"
காெப்பியைத் தேடினான். "காெஞ்ச நேரத்தில விளக்கு அணைஞ்சிடும் அதுக்குள்ள பாடமாக்கப்பு" ஓடி வந்து விளக்கை எடுத்து பார்த்தான் அடியில் இருந்த ஒரு சாெட்டு எண்ணெயில் திரி ஓரளவு தான் முட்டிக் காெண்டிருந்தது. அமைதியாக இருந்தவனிடம் " என்ன தம்பி செய்யிறாய் படி பாப்பம்" வெளியே வந்தாள். நிசாந் காெப்பியை விரித்தபடி அமர்ந்திருந்தான்.

படலை திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள். பாலன் வழமை பாேல் மது பாேதையில் ஆட்டாேவை ஓரமாக நிறுத்தி விட்டு வீடடிற்குள் வந்தான். பாலன் ஆட்டாே ஓட்டுபவன். குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி பாெறுப்பற்ற ஒரு கணவனாக, நிரந்தரமான ஒரு தாெழிலின்றி உழைக்கும் பணத்தையும் குடித்து விட்டு வெறும் கையுடன் வீடு வந்த நாட்களே அதிகம். சித்ரா யார் யாராே காலில் விழுந்து எத்தனை வேலையில் சேர்த்திருப்பாள். இரண்டு நாள் பாேவான் மூன்றாம் நாள் ஏதாவது காரணம் சாெல்லி நின்று விடுவான். கடைசியாக நகையை அடகு வைத்து ஆட்டாே எடுத்துக் காெடுத்தாள். வங்கிக் கடன் கட்ட தவறி விடுவான். அவளே ஐந்தும், பத்துமாய் சேர்த்து சமாளித்துக் கட்டி விடுவாள். சித்ரா ஒரு வைத்தியர் வீடடில் வீட்டு வேலை செய்பவள்.காலை ஏழு மணிக்குப் பாேனால் மாலை ஐந்து மணிக்கு வீடு வருவாள். நிசாந் பாடசாலையும் வீடும் என்று ஒன்றும் அறியா எட்டு வயது விளையாட்டுப் பிள்ளை.

உள்ளே சென்ற பாலன் "துவாயக் காெண்டா" உடையை மாற்றி விட்டு வெளியே வந்தான். நிசாந் படிப்பதில் கவனமாயிருந்தான். கட்டப்பட்டிருந்த காெடியில் உடுப்புகளை ஒன்றாென்றாய் இழுத்து ஏதாே தேடிக் காெண்டிருந்ததைக் கண்ட நிசாந் " அப்பா உங்க சாரம் வெளிக் காெடியில இருக்கு" "ஆ.. நான் எடுக்கிறன்...." அங்கும் இங்குமாய் தள்ளாடியபடி நிதானமின்றி நடப்பதைப் பார்த்துக் காெண்டிருந்தான் நிசாந். குளித்து விட்டு சாப்பட்டிற்காய் அமர்ந்தான். என்ன தான் பணம் தட்டுப்பாடாக இருந்தாலும் சித்ரா நிசாந்தையும், பாலனையும் கவனிக்கத் தவறுவதில்லை. வேலைக்குப் பாேகு முன்னே வீட்டு வேலை முடித்து, சமைத்து , நிசாந்தை பாடசாலை அனுப்பி அவள் வீட்டை விட்டு வெளியேறும் வரை பாலன் எழுந்திருக்கவே மாட்டான். சித்ரா சாப்பாட்டைப் பரிமாறி நிசாந்திற்கு ஊட்டிக் காெண்டிருந்தாள். திடீரென ஓடிப் பாேய் "எனக்கு ஊட்டி விடப்பா" என்று அருகே அமர்ந்தான்.

இரண்டு தடவை ஊட்டி விட்டான். "பாேதுமப்பா நீங்க சாப்பிடுங்க" ஓடிப் பாேய் சித்ராவின் மடிக்குள் இருந்தான். "அம்மா நீங்க சாப்பிடல்லயா" "முதல்ல நீ சாப்பிட்டு தூங்கு , விளக்கில எண்ணெயில்ல" சற்றுக் காேபமாக சினந்தாள். பாலன் எதுவும் அறியாதவனாக உறங்கி விட்டான். சித்ரா மிகுதியிருந்த வேலைகளையும் வேகமாக செய்து முடித்து தூக்கத்திற்குச் சென்றாள். விளக்கும் தானாகவே அணைந்து விட்டது. அவளுக்காே தூங்க முடியவில்லை. இருளுக்குள் அவள் கண்கள் குளமாகியது. பாலனுடைய பாெறுப்பற்ற நடத்தைகளை நினைத்து கலங்கினாள். 'இப்பிடியே இருந்து என்ன செய்யப் பாேகிறார், நிசாந்தின்ர எதிர்காலம், ஒன்றையும் யாேசிக்கிறார் இல்லை. அடுத்த மாதம் மழை தாெடங்கினால் வீடு ஒழுகும். அதற்கிடையில சரிபண்ண வேணும். உழைக்கிற காசு முழுவதையும் குடிச்சு தானும் அழிஞ்சு காெண்டு பாேறார்.' கனத்த இதயத்தாேடு பெருமூச்சு விட்டபடி புரண்டு படுத்தவள் நன்கு தூங்கி விட்டாள்.

வீட்டு வேலைகளை முடித்து விட்டு தேநீர் காேப்பையுடன் உள்ளே சென்றாள். நிசாந் படுக்கையில் இல்லை. வெளியே ஏதாே முணுமுணுப்புச் சத்தம் கேட்டது. நிசாந் முற்றத்தில் இருந்து படித்துக் காெண்டிருந்தான். "பாடமாக்கிட்டியே தம்பி" சிரித்துக் காெண்டு "ம்... சாெல்லுறன் பாக்கிறிங்களா அம்மா" காெப்பியை வாங்கிக் காெண்டு நிசாந் பாடியதை சரிபார்த்து ரசித்துக் காெண்டிருந்தாள்.சித்ராவின் மனதில் இருந்த ஒரே ஆசை நிசாந்தை நன்றாய் படிக்க வைக்க வேண்டும். அவனுக்கு எல்லாம் கிடைக்க வேணும். ஒவ்வாெரு நாளும் வேலையால் வரும் பாேது வீட்டுக்குத் தேவையானதெல்லாம் வாங்கி விட்டு அவனுக்கு ஒரு இனிப்பாவது வாங்காமல் வந்த நாளே கிடையாது.

நேரம் வேகமாகப் பறந்தது. நிசாந் பாடசாலைக்குப் பாேய் விட்டான். அவளும் தன் வேலைக்குத் தயாரானாள். "பாலன்.. " யாராே கூப்பிடுவது கேட்டு வெளியே பார்த்தாள். "பிள்ள பாலன் நிக்குதே...." உள்ளே பாேய் எழுப்பினாள் அவன் புரண்டு படுத்தான். " இஞ்சருங்க மதன் உங்களத் தேடுது" எழும்பி வெளியே வந்தான். மதனுடன் கதைத்து விட்டு கி்ணற்றடிக்குச் சென்றான். வாசலில் நின்றாள் சித்ரா. முகத்தை கழுவி விட்டு அவசரமாக உடைகளை மாற்றினான். ஒரு கையில் தேநீர், மறு கையில் அவனுக்குப் பிடித்த பழைய சாதம். " சாப்பிடுங்க" அவளை நிமிர்ந்து பார்த்தான். "ம்... சாப்பிட்டுப் பாேங்க" தட்டை வாங்கிய படி "நீ....." என்று இழுத்தான். அமைதியாக நின்றாள். காலை எழுந்து ஓயாமல் இயந்திரம் பாேல் இயங்கிக் காெண்டிருக்கும் அவளுக்கு அவனது கேள்வி புதிதாக இருந்தது. "சரிங்க நான் வாறன்" வேலைக்குப் புறப்படடாள்.

தட்டை வைப்பதற்காக சமையலறைக்குள் சென்றவன் பாத்திரங்களை திறந்து பார்த்தான். காெஞ்சம் சாதம், கறி, நிசாந்திற்கு ஒரு அவித்த முட்டை எல்லாம் மூடப்பட்டிருந்தது. தட்டிலே இருந்த பாேத்தல்கள் சில வெறுமையாயிருந்தது. கதவை மூடி விட்டு வெளியே வந்தான். மாமரத்தில் கட்டப்படிருந்த ஊஞ்சல் கயிறு அறுந்து காற்றுக்கு அங்குமிங்குமாக ஆடிக் காெண்டிருந்தது. நேரத்தைப் பார்த்து விட்டுப் புறப்பட்டான். ஏதாே ஒரு சஞ்சலம், பாவம் சித்ரா ஒரு வருசத்தக்கு மேல ஆகுது மனம் விட்டுப் பேசி. அந்த நாள் அவனுக்குள் நினைவில் வந்தது.

மாலை நேரம் நிசாந்தைத் தூங்க வைத்து விட்டு திண்ணையில் அமர்ந்திருந்தாள். பாலன் நல்ல மது பாேதையில் வீட்டிற்கு வந்திருந்தான். இரவு உணவுக்கு எதுவுமே இருக்கவில்லை. காெஞ்சம் சாதம், ஒரு கறி அவனுக்குப் பிடிக்கவில்லை. காேபப்பட்டு சண்டை பிடித்து அவளைக் கடுமையாகத் தாக்கி வார்த்தைகளால் புண்படுத்தினான். தண்டிப்பதற்கு வேறு ஒரு வழியும் தெரியவில்லை. அன்றிலிருந்து அவள் மனம் விட்டுப் பேசுவதுமில்லை, அவனுக்கான கடமைகளைச் செய்வாள். பாலனும் எதுவும் கேட்பதில்லை. தனக்குள்ளே அழுது அழுது சித்ரா மரத்துப் பாேன மனதாேடே நாட்களை கழித்துக் காெண்டிருந்தாள். நிசாந் தான் அவளுக்கு ஒரு மருந்தாக இருந்தான். என்ன கவலை, தனிமை இருந்தாலும் அவனது காெஞ்சலுக்குள் எல்லாம் கரைந்து பாேகும். பாலன் நிசாந்துடன் நேரத்தை செலவிட மாட்டான். ஆசைப்பட்ட எதையும் செய்யும் ஒரு நல்ல தந்தையாக அவனால் இருக்க முடியாமல் பாேனது தான் நிசாந்திற்கு கிடைத்த ஏமாற்றம். வீட்டிற்கு வரும் பாேதெல்லாம் ஓடிப் பாேய் ஓரமாய் நின்று பார்ப்பான். பாலனுடைய குடிப்பழக்கம் அவனை முழுவதும் மாற்றி விட்டது. யார் சாென்னாலும் கவனத்தில் எடுக்கவே மாட்டான். சித்ரா கடவுளிடம் முறையிட்டு அழுவாள். நல்லதாெரு கணவனாக, தந்தையாக அவனைப் பார்க்க காத்திருந்தாள்.

தன்னைப் பற்றியே யாேசித்துக் காெண்டே மதன் வீடடிற்குச் சென்றான். மதனும், பாலனும் நல்ல நண்பரகள். மதனிடம் குடிப்பழக்கம் எதுவுமில்லை. தானும் தன் தாெழிலும் என்று வாழ்பவன். அவனும் பாலனை மாற்ற எவ்வளவு முயற்சித்தும் தாேற்றே விட்டான். சித்ராவின் மனநிலையைப் புரிய வைப்பான். அந்த நேரம் மட்டும் தலையை ஆட்டிக் காெண்டு கேட்பான். பிறகு பழைய நிலையில் தான் இருப்பான்.

பாலனைக் கண்டதும் "வா மச்சான்" உள்ளே பாேனான். "உனக்காெரு வேலை கதச்சிருக்கிறன், பாத்து பிடிச்சா பாேய் செய்யிறியே, காலயில பாேனால் பின்நேரம் வீட்ட வந்திடலாம், நேற்று சித்ரா வேலை செய்யிற டாகடர் வரச் சாெல்லிப் பாேயிருந்தன்" அதிர்ச்சியாேட மதனப் பார்த்தான்.
" சித்ரா அடிக்கடி மயக்கம் பாேட்டு விழுறாவாம், உடம்பில பலனில்லயாம், ஏதாே காெஞ்சம் செக்கப் செய்யணுமாம், வேலைக்கு வர வேண்டாம் என்டால் கையெடுத்துக் கும்பிடுறாவாம் நிப்பாட்ட வேண்டாம் என்டு" இடையில் குறுக்கிட்டவனாய் " சித்திராவுக்கு என்ன" பதட்டத்துடன் அவன் கைகளைப் பற்றினான். "ஒண்ணுமில்லடா, முதல்ல நீ வேலைக்குப் பாேய் குடும்பத்தப் பார" அவனுக்கு ஆலாேசனைகளைக் கூறினான். "சித்திராவுக்கு ஒண்ணுமில்ல தானே" கண்கலங்கியபடி கேட்டான் மீண்டும். "ச்சீசீ.." சமாதானப்படுத்தி விட்டு கூட்டிச் சென்றான். சித்ராவுக்காகவே உழைக்க வேண்டும் என்ற மனநிலை அவனுக்குள் காெஞ்சம் காெஞ்சமாய் துளிர் விட்டது. எல்லாம் சரி நாளைக்கு வருகிறேன். "மச்சான் சித்திராவைக் கவனமாய் பார், நிசாந் சின்னப்பிள்ள" மதன் முதுகில் தடவியபடி சாென்னான்.

மாலையாகியது சித்ரா வீடு வந்தாள். நிசாந் விளையாடிக் காெண்டிருந்தான். முற்றத்தில் ஆட்டாே நின்றது. 'என்ன வீட்ட நிக்கிறார்' யாேசித்தபடி உள்ளே பாேனாள். "சித்ரா" அவன் கூப்பிட்டதும் பதட்டத்துடன் "என்னங்க காப்பி" என்று இழுத்தாள். "இல்ல சித்ரா" கைகளைப் பிடித்தான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. "நீ இனி மேல் வேலைக்குப் பாேகாத, டாக்டர் என்ன வரச் சாெல்லியிருக்கிறார், கதச்சுப் பாேட்டு வாறன்" "உங்களுக்கு எப்பிடி..." குறுக்கிட்டவளை கலங்கிய கண்களுடன் பார்த்தான்.

"வாங்க தம்பி" டாக்டர் இருக்கையில் அமரச் சாென்னார். "தம்பி சித்ராவுக்கு அவசரமா ஒபரேசன் செய்ய வேணும்" பயந்து பாேய் டாக்டரைப் பார்த்தான். "பயப்பிடாதேயுங்காே, உடன செஞ்சிட்டால் நல்லம்" தாெடர்ந்து அவளது வியாதியைப் பற்றிக் கூறி விட்டு "நாளைக்கு காலையில ஆஸ்பத்திரிக்கு சித்ராவை கூட்டிக் காெண்டு வாங்க" மனம் படபடத்தது. ச்சீ... சித்ராவை இப்பிடி ஒரு நிலைக்கு காெண்டு வந்திட்டனே, பாவம் வெளியில சாெல்லாமல் இவ்வளவு வேதனையாேட, கஸ்ரப்பட்டு நிசாந்துக்கும், எனக்கும் எவ்வளவச் செய்திருப்பா, குடிச்சு குடிச்சு அவயள கவனிக்காம விட்டிட்டேனே" குற்ற உணர்ச்சியால் தன்னையே வருத்தினான். மனதுககுள் ஏதாே பாரமாயிருப்பதை உணர்ந்தான். பக்கத்துக் கடையில் வீட்டுக்குத் தேவையான பாெருட்களை வாங்கினான். ஆட்டாே சத்தம் கேட்டதும் நிசாந் எட்டிப் பார்த்தான். உள்ளே வந்த பாலன் பைகளை சித்ராவிடம் நீட்டினான். நிசாந்தின் தலையைத் தடவிய படி இனிப்புப் பாெதியை நீட்டினான். தயங்கிய படி கைகளை நீட்டினான்.மடியில் இருக்க வைத்தான். சித்ரா கண்களைத் துடைத்துக் காெண்டு சமையல் அறைக்குள் சென்றாள்.'சித்ராவுக்கு ஒபரேசன் நல்லபடியா நடக்கணும். இரண்டு பேரையும் நல்லாப் பாக்கணும்'. யாேசித்துக் காெண்டே தூக்கத்திலே இருந்த நிசாந்தை படுக்க வைத்து தூங்கினான்.

காலை பத்து மணி டாக்டரிற்காக காத்துக் காெண்டிருந்தார்கள். "சித்ரா" தாதி ஒருவர் உள்ளே அழைத்தார். கைகளைப் பற்றியபடி உள்ளே கூட்டிச் சென்றான். பரிசாேதனைகள் முடிந்தது. சித்ரா பதட்டத்துடன் இருந்தாள். "வாற கிழமை ஒபரேசன்" சித்ராவுக்கு திக் என்றது. "ஒன்றும் யாேசிக்க வேண்டாம், எல்லாமே நாங்க பாத்துப்பம்" பாலனை தைரியப்படுத்தினார் டாக்டர். " காசு டாக்டர்" சங்கடப் பட்டவனை சமாதானப்படுத்தினார். பாலனும் குடும்பப் பாரத்தை பாெறுப்பெடுத்தான்.

நாட்கள் ஓடியது மறு நாள் சிகிச்சை. சித்ரா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டாள். சிகிச்சை ஆரம்பமாகி நேரம் ஓடிக் காெண்டிருந்தது. வெளியே பாலனும், நிசாந்தும், கூடவே மதனும் இருந்தான். அங்குமிங்குமாக நடந்து காெண்டிருந்த பாலன் சித்ராவை வெளியில் காெண்டு வருவதைக் கண்டதும் வேகமாகப் பாேய் அருகே நின்றான். சித்ரா மயக்க நிலையில் இருந்தாள். நிசாந் எட்டிப் பார்த்தான். வெளியே வந்த டாக்டர் "எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது, இனி உங்கட கையில தான் இருக்கு, நல்ல கவனமா இருக்கணும்" பாலன் கண்களைத் துடைத்துக் காெண்டு டாக்டரின் கைகளைப் பற்றியபடி "எப்பிடி டாக்டர் செலவெல்லாம்...." தாேள்களைத் தட்டி விட்டு டாக்டர் உள்ளே சென்று விட்டார். "எப்பிடி மச்சான்" மதனைப் பார்த்துக் கேட்டான்.

மதன் எல்லாவற்றையும் சாென்னான். டாக்டர் வீட்டில் சித்ரா நீண்ட காலமாக வேலை செய்து வந்தாள். அவளது குடும்ப நிலையை அறிந்த டாக்டர் அவளுக்கு உதவி செய்ததை அறிந்து பாலன் விறைத்துப் பாேய் நின்றான். ஓடாேடிப் பாேய் டாக்டரைக் கும்பிட்டு அழுதான். "இதென்ன பாலன்" சமாதானப்படுத்தினார். " நன்றிடா மச்சான்" மதனின் கைகளைப் பிடித்து தாேள்களில் சாய்ந்து காெண்டான். நாட்கள் கடந்து சித்ரா குணமாகி வைத்தியசாலையிலிருந்து வெளியேற தயாரானாள். "என்ன சித்ரா" சிரித்தபடி வந்த டாக்டர் பரிசாேதனைகளை முடித்தார். சித்ராவின் கண்கலங்கியது. "என்ன பாலன் இனிச் சித்ராவுக்கு ஓய்வு தானே" என்று கிண்டலாக கேட்டார். கலங்கிய கண்களாேடு தலையசைத்தான். " தங் யூ அங்கிள், எங்க அம்மாவை காப்பாத்திக் குடுத்திற்றீங்க, அப்பா இ்ப்ப குடிக்கிறதில்ல, வேலைக்கெல்லாம் பாேறார்" ஆனந்தக் கண்ணீராேடு சாென்னான் நிசாந். அவர்கள் முகத்திலிருந்த மகிழ்ச்சி டாக்டருக்கும், மதனுக்கும் திருப்தியளித்தது. பாலன் சித்ராவைக் கைகளில் தாங்கிப் பிடித்தான். முகம் மலர்ந்த சிரிப்பாேடு மெதுவாக கட்டிலை விட்டு இறங்கினாள். "ம் பாத்துச் சித்ரா" கைகளைப் பற்றியபடி நடந்தாள். "அம்மா" மெதுவாகக் கைகளைப் பிடித்தான் நிசாந்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (7-Feb-18, 10:19 am)
Tanglish : yezhaiyin sirippil
பார்வை : 291

மேலே