பணம் செல்வம் வர தாந்திரிக ரகசியங்கள் -----புத்தகம்
தாந்திரிகம்- யோகம், போகம், அர்த்தநாரீஸ்வரம் ௨
இந்தப் புத்தகம் இந்து மற்றும் பௌத்த தாந்திரிக மரபுகள் தத்தமக்கென்று தனி தத்துவ அடையாளங்களற்று ஒருமையடைந்த வடிவில் நேபாலில் உள்ள சாதகர்களால் எவ்விதம் கடைபிடிக்கப்படுகின்றன, அவை அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன, சமுதாயத்தில் அவை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பனவற்றை விரிவாகப் பேசுகிறது. தாந்திரிக சாதனை பற்றிய விரிவான விவரணையையும் தருகிறது. ஆனால் அவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை. இந்திய அநவீன பெருங்கலாசாரம், அதன் கூறாக உள்ள தாந்திரிகம் என்னும் எதிர் கலாசாரம்: இவை மேலை நவீன கலாச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பேசப்படும்போது தனி மனித மற்றும் சமூக விடுதலை என்ற கேள்விக்கு எத்தகைய பதிலை வைத்திருக்கிறது என்பதை உணர்த்த மட்டுமே இந்தப் புத்தக வாசிப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளேன். சுருக்கமாகச் சொன்னால், அநவீன இந்திய தாந்திரிக மரபு அர்த்தநாரிஸ்வர வடிவில் மூன்று உண்மைகளை உணர்த்துகிறது: மனிதன் தன்னில் தெய்வத்தைக் காணலாம்: அத்தகைய காட்சியில் தன் வாழ்வை தெய்வீகமானதாக இனங்காணலாம். ஆணாகவும் பெண்ணாகவும் உள்ள இந்த தெய்வங்கள் ஓருருவில் கூடிக் களித்தல், அவனுக்கு முரண்களை சமன்வயப்படுத்தும் உந்துதல் தருகின்றன. இந்த உலகம் இத்தெய்வங்களின் நித்திய கூடலின் நிகழ் வெளிப்பாடு என்ற நம்பிக்கை, உலகை இன்பமும் கொண்டாட்டமும் நிறைந்த ஒன்றாகச் சுட்டுகிறது:- பிரிந்து கூடிக் களிக்கும் தெய்வீக லீலை கணம்தோறும் நிகழும் ஒன்று என்ற நம்பிக்கை, சாதகனை நிகழ்கால வாழ்வின் முரணனுபவங்களைத் தன்னுள் சமன்வயப்படுத்திக் களிக்கும் உந்துதல் தருகிறது. இந்த தாந்திரிக சாதனை எந்த சமயத்துக்கோ தெய்வத்துகோ உரியதல்ல- பிரக்ஞையின் அடிப்படையில் சமூக, மற்றும் பண்பாட்டு கட்டமைப்புகளுக்கு அப்பாற்பட்டவனாதலால் ஒவ்வொரு மனிதனும் அனைத்துக் கூறுகளையும் தன்னுள்ளடக்கிய தன் அகத்தில் நிகழ்த்தி, சுகவழியில் காண வேண்டிய உச்சத்தை தாந்திரிகம் உலகளாவிய மானுடத்துக்கும் உரியதாக முன் வைக்கிறது. தன் பார்வையில் தான் காணும் எதையும் கூறுபடுத்துவது நவீனம் என்றும், தனக்கு ஏற்பாக இல்லாத கூறுகளை ஆதிக்கம் செலுத்தி ஆளவும், அது முடியாதபோது அல்லது தேவைப்படாதபோது அடக்கி ஒழிக்கவும் முனைவது நவீனத்துவ அடிப்படையில் அமைந்த மேலைக் கலாசாரம் என்றும் சொல்கிறார் பிரேம் சரண் (ஐரோப்பாவின் வரலாற்று இடைக்காலம் முற்றுப் பெற்று நவீனம் பிறந்தபோது அதற்கு முதல் பலியாக அமைந்தது பெண்கள்தான்: பல பத்தாயிரம் பெண்கள் சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு கொளுத்தப்ப்பட்டார்கள்- இதைத் தொடர்ந்து இன்றும் நவீனம் தன் கால் பட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக இன ஒழிப்புப் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது. வரலாற்றளவில் உலகத் தொடர்பு குன்றிய நேபாலில் பௌத்தமும் இந்து சமயமும் தாந்திரிக ஒருமைப்பாடு கண்டு இன்றும் மக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கும், ஐரோப்பிய பாதிப்புக்கு பெருமளவு உட்படுத்தப்பட்ட இலங்கையில் அதே பௌத்தமும் இந்து சமயமும் பெரும்போரில் லட்சக்கணக்கான மக்களைக் காவு கொடுப்பதற்கும் உள்ள வேறுபாடு என்று எதைச் சொல்ல முடியும்? நவீனத்துவம், அதன் அடிப்படையில் விளைந்த இனவாதம், சகிப்புத்தன்மை இழத்தல் என்பன ஏனைய பிற காரணங்களோடு முக்கியமானவையாக இருக்கலாம்- இங்குள்ள இரு சமயங்களிலும் தாந்திரிக மரபு எவ்வளவு பரவலான பயன்பாட்டில் உள்ளது என்பதும் ஆய்வுக்குரியது. இந்திய தத்துவ மரபு முடங்கிப் போன ஒன்றல்ல- அது தன்னைக் காலம்தோறும் புதுப்பித்துக் கொண்டே வந்திருக்கிறது. தாந்திரிகம் உள்ளடக்கிய பக்தி மரபு, இதன் அங்கமாக இருக்கிறது. மரபு எதையெல்லாம் புறத்தில் வைக்கிறதோ, அவற்றை அனுபூதி அடிப்படையில் ஒருங்கிணைக்கும் எதிர்கலாசாரமாக பக்தியும் தாந்திரிகமும் இயங்கி வந்துள்ளன. இந்த இந்திய தத்துவ மரபு இந்து அல்லது பௌத்த, சமண சமயங்களுக்கு மட்டும் முழுமுதல் உரிமையுடைய ஒன்றல்ல – இசுலாமும் கிருத்தவமும் இந்த மரபுக்குத் தம் பங்களிப்பைக் கொடுக்கலாம். ஆனால், நவீனத்தின் தாக்கம் இந்த மரபுக்கு இன்று ஒரு சவாலாக இருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்த மரபு தன் எதிர்கலாசார வெளிக்கு எவ்வளவுக்கு இடம் தருகிறது என்பதைக் கொண்டே அதன் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று தோன்றுகிறது. பக்தியை மூடநம்பிக்கையாகப் பார்க்கும், காமத்தை உடல் சார்ந்த விழைவாகக் கட்டமைக்கும், குடிமைச் சமூகத்தை ஒற்றைத் தன்மை கொண்ட ஒழுக்க விதிகளால் சமைக்கும், தனிமனித மனவளத்தை அவள் சமூக நியதிகளுக்கு உட்படுவதைக் கொண்டு தீர்மானிக்கும் நவீனத்துவத்தின் பிளவுபட்ட பார்வைக்கு பலியாகும் ஒவ்வொரு கணமும் இந்த மரபு தன் அடையாளத்தை மட்டுமல்ல, அர்த்தத்தையும் இழக்கிறது என்றே சொல்ல வேண்டும்.