மருத்துவத்தின் மகத்துவம் பாகம் 3
மருத்துவத்தின் மகத்துவம் பாகம் 3:
மருந்துகளின் பக்கா விளைவுகள்
பொதுவாக ஒரு மருத்துவர் ஒரு நோயாளிக்கு ஒரு மருந்து கொடுக்கும் பொழுது அந்த மருந்தினால் நோயாளிக்கு(மேம்போக்காக) என்ன விளைவு வரும் என்பதை மட்டுமே ஞாபகத்தில் வைத்துக்கொண்டு எழுதி கொடுப்பார். பக்க விளைவுகள் பற்றி அவ்வளவாக கருத்தில் கொள்வதில்லை. ஏனெனில் ஒரு மருந்தின் பக்க விளைவுகள் மட்டும் பக்கம் பக்கமாக எழுதலாம் அவ்வளவு பக்க விளைவுகள் இருக்கும். எடுத்துக்காட்டாக வாந்தி வராமல் தடுக்கும் மாத்திரையின் பக்க விளைவுகளில் ஒன்று வாந்தி ஆகும். வலிப்பு வராமல் தடுக்கும் வலிப்பு மாத்திரையின் பக்க விளைவுகளில் ஒன்று வலிப்பு. வயிற்று வலியை போக்கும் மருந்தின் பக்க விளைவுகளில் ஒன்று வயிற்று வலி என்று மருந்துகளின் பக்க விளைவுகள் எல்லாம் சிரிப்பையும் சிந்தனையையும் ஊட்டுபவையாக இருக்கும். இரண்டாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் பொழுது ஒவ்வொரு மருந்து மாத்திரையின் விளைவுகள் பக்க விளைவுகள் படிக்கும் பொழுது மருந்துகளின் பக்க விளைவுகளை பார்த்து சிரித்ததுண்டு, சிந்தித்ததும் உண்டு. ஆனால் ஆழமாக ஆராய்ந்தது இல்லை.
ஏன் ஒரு மருந்திற்கு இத்தனை பக்க விளைவுகள் இருக்கிறது? என்று மருத்துவம் எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறது என்றாலும் அதற்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. மருந்தென்றால் 1008 பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும் அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று விட்டதுண்டு. ஒரு நோயாளி வருகிறார் அவருக்கு வாந்தி வயிற்று வலி என்று வைத்துக்கொள்வோம், மருத்துவர் வாந்தி தடுக்கும் மாத்திரை மற்றும் வயிற்றில் அமிலம் சுரப்பதை கட்டுப்படுத்தும் மாத்திரை கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்(அது சரியா தவறா என்பதை இன்னொரு பதிவில் பார்ப்போம்).வாந்தி தடுக்கும் மாத்திரை என்ன செய்யும் என்றால் நேராக மூலையில் உள்ள CTZ என்று சொல்லப்படும் ஒரு இடத்திற்கு செல்லும் அங்கே இருக்கும் ரிசெப்டர்(ஆண்டெனா போன்ற ஒரு அமைப்பு) எப்படி ஆண்டெனாவில் சிக்னல் கிடைத்தால் டிவியில் படம் தெரியுமோ அதுபோல இந்த ரிசெப்டாரில் சிக்னல் கிடைத்தால் வாந்தி வரும். அந்த ரிசெப்டாரில் சென்று வாந்தி தடுக்கும் மருந்து உக்கார்ந்துகொள்ளும், அதனால் வாந்தி ஏற்படுத்தும் சிக்னல் இந்த ரிசெப்டாருக்கு கிடைக்காமல் போய்விடும், பின்பு வாந்தி வராது. இதுதான் மேம்போக்காக மருந்தின் விளைவை பார்ப்பது.
இப்போது கொஞ்சம் விரிவாக பார்ப்போம். வாந்தி தடுக்கும் மாத்திரை நேராக மூளைக்கு சென்று.. என்று குறிப்பிட்டேன், அது தவறு. முதலில் இரைப்பைக்கு செல்லும் அங்கிருந்து கல்லிரலுக்கு செல்லும், இது ஒரு உணவுப்பொருள் இல்லையே வேறு எதோ ஒரு விஷம் அல்லது உடலுக்கு ஒவ்வாத பொருள் என்று கல்லிரல் செயல்பட ஆரம்பிக்கும். அதாவது அந்த மருந்தை உடலில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கும். enzymeகளை சுரக்கும். தேவையான enzymeகளை கல்லிரல் சுரப்பதற்குள் அந்த மருந்து கல்லிரலை விட்டு வெளியேறிவிடும். ( தப்பித்து வந்த மருந்து ரத்தத்தின் மூலம் உடம்பில் உள்ள அணைத்து பகுதிகளுக்கும் செல்லும். எங்கெல்லாம் அது உக்கார அமைப்பான ரிசெப்டார் உள்ளதோ அங்கெல்லாம் உக்காரும். அந்தந்த பகுதிகளில் அந்தந்த ரிசெப்டார்கள் பாதிக்கப்படும். .மேலும் அந்த ரிசெப்டார் போல இருக்கும் அண்ணன்தம்பி ரிசெப்டார்களிலும் சென்று உக்கார்ந்துகொள்ளும். ஒரே ரிசெப்டார்க்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேலை இருக்கும். ஒரே இடத்தில் வெவ்வேறு வேலை அல்லது வெவேறு இடத்தில வெவ்வேறு வேலை இருக்கலாம். அந்த பல வேலைகளில் ஒரு வேலையை தடுக்க அந்த மருந்து கொடுக்க பட்டிருக்கும் அந்த குறிப்பிட்ட இடத்தில மட்டும் அது விளைவு மற்ற எல்லா இடத்திலும் ஏற்படுவது பக்க விளைவுகள் அது எல்லாம் மருந்திற்கு தெரியாது. பின்பு இந்த விளைவுகள் எல்லாம் செய்துகொண்டிருக்கும் சமயம் சைடு பய் சைடு கல்லிரல் தன் வேலையில் கருத்தாக இருக்கும் கஷ்டப்பட்டு மேலும் enzymeகளை சுரந்து அந்த மருந்தை வெளியேற்றும்(இதனால் கல்லிரல் எந்த அளவு கஷ்டப்படும் என்பதை சொல்ல இன்னொரு பதிவு தேவைப்படும்). கல்லிரலால் முழுமையாக முடியவில்லை என்றால் மருந்தை சீரணம் மட்டும் செய்து சிறுநீரகத்திற்கு அனுப்பி விடும். ஒரு மருந்து ஏன் பல விளைவுகள் கொண்டதாக இருக்கிறது என்று சுருக்கமாக சொல்ல முயன்றுள்ளேன்.
ஒரு மருத்துவன் தன்னிடம் வரும் நோயாளிகளை நுகர்வோராக பார்க்காமல் தன்னுடைய சொந்தபந்தம், நண்பர் போல பார்த்தால் உண்மையில் (ஆனால் சொந்த பந்தம் நண்பர் வந்தால் கூட நுகர்வோரை பார்ப்பது போல இப்போதெல்லாம் பார்க்க படுகிறார்கள்) இத்தனை பக்க விளைவுகள் விளைவிக்கும் மருந்துகளை கொடுப்பாரா? அல்லது conservative ஆக அதாவது முன் பதிவுகளில் சொன்னது போல "சக்கரை நோய்க்கு மன அழுத்ததத்தை தவிர்த்து நல்ல பழக்க வழக்கங்கள் கடைபிடி, யோகா தியானம் போன்றவை செய் சர்க்கரை குறையும் ஏனெனில் மருந்துகளின் பக்க விளைவுகளே உன்னை கரைக்கு அந்த பக்கம் தள்ளி விடும் என்று சொல்வாரா அல்லது மருந்தென்றால் 1008 பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும் வேறு வழியில்லை செத்தாலும் இந்த மாத்திரைதான் நீ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வாரா?
மருத்துவம் எனக்கு சரியாகத்தான் சொல்லி கொடுத்திருக்கிறது நானும் சரியாகத்தான் கற்றுக்கொண்டேன் சொல்லி கொடுத்ததை செய்கிறேன் என்ற நம்பிக்கையில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மருந்துகளின் தன்மை,குணம் முக்கியமாக மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் எல்லாம் மறந்தால் தான் ஒரு மருத்துவன் தன்னிடம் வரும் நுகர்வோருக்கு(நோ மோர் நோயாளி ஏனெனில் consumer ப்ரொடெக்ஷன் ஆக்ட் ல தான் போட்ருக்காங்க மருத்துவத்தை) தன் இஷ்டம் போல அல்லது மெடிக்கல் ரெப்களின் இஷ்டம் போல அல்லது நோயாளிகளின் மன்னிக்கவும் நுகர்வோரின் இஷ்டம் போல மருந்துகளை எழுத முடியும். அப்படி மறக்க செய்ய என்ன செய்ய வேண்டும்? என்று குள்ள நரி கூட்டம் யோசித்தது. மருந்துகளின் விளைவு(effect not side effects) மட்டுமே சொல்லி கொடுப்பதற்கும் மருத்துவனுக்கு தேவையானதை பூர்த்தி செய்யவும், பேரம் பேசவும் டை மற்றும் பை யுடன் வரும் நுகர்வோர்களை ஏற்பாடு செய்தது. அதன் விளைவு( பக்க விளைவு அல்ல ) மருத்துவம் வியாபாரம் ஆனது. கற்றது காற்றில் போனது. பக்க விளைவுகள் மறந்து போனது. மருத்துவத்தின் மகத்துவம் மக்கி மண்ணோடு மண்ணாக போய் கொண்டிருக்கிறது.
மருந்துகள் என்பது இருபக்கம் கூரான கத்தியை போன்றது. அது நோயைத் தாக்குமோ இல்லையோ கண்டிப்பாக நோயாளியை தாக்கும். எனவே முடிந்த அளவு (ஆங்கில) மருந்துகளை தவிர்க்க வேண்டுகிறேன். உடனடி பக்க விளைவுகள் நாட்பட்ட பக்க விளைவுகள் என்று பல வகையில் விளைவுகள் வரும். காலப்போக்கில் கல்லிரல் செயல் இழந்து போகும் வாய்ப்பும் உள்ளது( கல்லிரலுக்கு ஒரு லிமிட் உண்டு) சிறுநீரகம்(முக்கியமாக பைந் கில்லர் நிறைய நாட்கள் எடுத்தால் ) செயல் இழக்க வாய்ப்புள்ளது .இவையெல்லாம் நாட்பட்ட விளைவுகள். ஒரு மருத்துவன் வியாபாரி போல இல்லாமல் உயிர் காக்கும் உன்னத சேவை செய்யும் சேவகனாக தன்னிடம் வரும் நபர்களை தன்னை போல ஒருவனாக நினைத்து படித்த அனைத்தையும் மனதில் கொண்டு முடிந்த வரை மருந்துகள் கொடுக்காமலும், நோயாளி மருத்துவர் மருந்து கொடுக்க வில்லை என்றாலும் தீர்வு கொடுத்துவிட்டார் என்று சந்தோசமாக வீடு திரும்பினால் மருத்துவம் தன் மகத்துவத்தை திரும்ப பெற வாய்ப்புள்ளது.
பின் குறிப்பு :
ஆங்கில மருந்துகள் பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்த வரை கருத்துக்கள் கூறியிருக்கின்றேன். தகுந்த மருத்துவ ஆலோசனை இன்றி கட்டுரையை அப்படியே கடைபிடித்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே மருந்து ஏதும் எடுத்துக்கொண்டிருந்தால் மருத்துவர் ஆலோசனை இன்றி நிப்பாட்ட வேண்டாம். ஆலோசனை பெற்று பின் படி படி யாக நிப்பாட்டலாம். ஆயுர்வேத, ஹோமியோபதி போன்றவற்றில் பக்க விளைவுகள் கம்மி என்று கேள்வி பட்டிருக்கிறேன். விருப்பம் உள்ளோர் அந்தந்த மருத்துவரை பார்த்து ஆலோசனை பெறலாம்.