இயற்கை யாவும் இன்பமயம்

உதய கதிரும் உலவும் நிலவும்
மிதக்கும் முகிலும் வியப்பே ! - நிதமும்
விழிக்கு விருந்தாய் விளங்கிடும் வானின்
எழிலைப் பருகிட இன்பு .

வயலும் வரப்பும் வருடும் வளியும்
மயக்கும் மலரும் வனப்பே ! - இயற்கை
அளித்த கொடையாம் அருவி அழகில்
களிக்கும் மனமும் கனிந்து.

வளரும் இரவில் மதியின் ஒளியில்
குளத்தில் மலர்ந்த குவளை - உளத்தைக்
கவரும்; பகலில் கமலம் விரிய
உவகை பெருகும் ஒளிர்ந்து .

ஒலிக்கும் கடலில் உருண்டுவிளை யாடிப்
பொலிவாய் அலைகள் புரளும் ! - வலித்த
கணத்தில் நுரைகளைக் கக்கித் திரும்பும்
இணக்க முடனே இனிது .

கருத்த முகில்திரள கண்டுமயி லாட
விருந்தாய்த் துளிகள் விழுமே ! - மருட்டும்
மனத்தை நனைத்து மகிழ்வுறச் செய்து
வனப்பைக் கொடுக்கும் மழை .

உயர்ந்த மலைகள் உறைபனி போர்த்தி
மயங்கிக் கிடக்கும் வடிவாய் ! - அயர்ச்சி
விலகும்; அமைதி மிளிர அகமும்
மலர்ந்து சிரிக்கும் வரம் .

அடர்ந்த வனமும் அழகிய ஆறும்
கடலும் விரிவானும் கண்டால் - தொடரும்
இனிமை சுகங்கள் இதயத்தை மீட்டக்
கனியும் இயல்பாய்க் கவி .

(இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள் )

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Feb-18, 11:22 pm)
பார்வை : 47

மேலே