இழக்கோ நறுமாவின் கொய்தளிரன்ன நிறம் - முத்தொள்ளாயிரம் 56
இன்னிசை வெண்பா
களியானைத் தென்னன் இளங்கோஎன்(று) எள்ளிப்
பணியாரே தம்பார் இழக்க - அணியாகம்
கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின்
கொய்தளிர் அன்ன நிறம். 56 முத்தொள்ளாயிரம்
தெளிவுரை:
வெற்றிக் களிப்புடைய யானைப் படையைக் கொண்ட பாண்டியன் இளவரசன்தானே என்று ஏளனம் செய்த பகைமன்னர்கள் அவனுக்குப் பணியவில்லை;
அவர்களுடன் போரிட்டு வென்றதனால், அவர்கள் தங்கள் நாடுகளை இழந்தனர்.
அத்தகைய பாண்டிய இளவரசனின் அணிகள் பூண்ட உடலைக் கைகளால் தொழுதவளாகிய (தலைவியாகிய) நானும் நறுமணம் பொருந்திய கொய்த மாந்தளிர் போன்ற என் அழகிய உடலின் நிறத்தை இழக்க வேண்டுமோ?
களியானை – கள் குடித்த களிப்புடைய யானை; மதம் பிடித்த யானை; போரில் வெல்லும் களிப்புடைய யானை,
தென்னன் – பாண்டியன், இளங்கோ – இளவரசன்; வயதில் இளையவன்,
எள்ளி – ஏளனம் செய்து, பணியார் – பாண்டியனைப் பணியாத பகை மன்னர்கள்,
தம்பார் – தங்களுடைய நாடுகள்,
அணி ஆகம் – அணிகலன்கள் பூண்ட பாண்டியன் உடல்,
கைதொழுதேனும் – கைகளால் தொழுதவளாகிய நானும்,
இழக்கோ – இழக்க வேண்டுமோ?, நறுமாவின் கொய்தளிர் – நறுமணம் பொருந்திய மாமரத்தின் கொய்த இளந்தளிர்