யார்க்கிடுகோ பூசல் இனி - முத்தொள்ளாயிரம் 57

வழுவிலெம் வீதியுள் மாறன் வருங்கால்
தொழுதேனைத் தோள்நலமும் கொண்டான் - இமிழ்திரைக்
கார்க்கடல் கொற்கையார் காவலனும் தானேயால்
யார்க்கிடுகோ பூசல் இனி. 57 முத்தொள்ளாயிரம்

தெளிவுரை:

குற்றமற்ற எம் தெருவினுள் பாண்டியன் வருகை புரியும் போது தொழுத எனது தோள் நலனைப் பற்றிக் கொண்டான்;

ஒலிக்கும் அலைகளைக் கொண்ட கரிய கடலிடத்துக் கொற்கைக்கும் பாதுகாவல் செய்பவனும் அவனே என்பதால் இனி யாரிடம் சென்று இக் குறையை எடுத்துச் சொல்வேன்?

விளக்கவுரை:

நாட்டைப் பாதுகாக்கும் மன்னன் என் தோள் நலனைக் கவர்ந்தான்; இது வேலியே பயிரை மேய்ந்த கதையாயிற்று. இனி என் குறையை எவரிடமும் எடுத்துச் சொல்ல முடியாது எனத் தலைவி வருந்துகிறாள்.

பாண்டியன் அழகில் மயங்கிய தலைவி தன் தோள் நலனை (அழகை) இழந்தாள் என்பது வியப்பான செய்தி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Feb-18, 9:08 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

சிறந்த கட்டுரைகள்

மேலே