முதுமொழிக் காஞ்சி 33
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நாணில் வாழ்க்கை பசித்தலிற் றுவ்வாது. 3
துவ்வாப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் நாணழிந்து உண்டு வாழும் வாழ்க்கை பசித்தலின் நீங்கி யொழியாது.
பதவுரை:
நாண்இல் வாழ்க்கை – வெட்கங் கெட்டு உண்டு வாழும் உயிர் வாழ்க்கை,
பசித்தலின் - பசித்தலாகிய துன்பத்தின், துவ்வாது - நீங்கி யொழியாது.
நாணாவது நல்லோர் தமக்கொவ்வாத காரியத்தைக் கண்டவிடத்து அடையும் வெட்கம்:
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. 1011 நாணுடைமை
இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.
வெட்கங்கெட்டு உயிர்வாழ்தலால் உண்டாகின்ற துன்பம் பசித்தலால் உண்டாகின்ற துன்பத்தின் வேறாயதன்று: அதனோடு ஒத்ததே.
துன்ப அளவால் இரண்டும் ஒக்குமாயினும், பசிக்குப் பரிகார முண்டு, அழிந்த நாணுக்கு உயிர் விடுவதன்றி வேறு பரிகாரமில்லை.
ஆகவே 'உயிரினும் சிறந்தன்று நாணே' என்பது பெறப்படும். படுதலால், 'நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப் பொருட்டால், நாண் துறவார் நாணாள் பவர்' என்பது கருத்தாம்.