அச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 9
![](https://eluthu.com/images/loading.gif)
"அப்பா, ஆஷ்லே பேசுகிறேன், உங்கள் நிலையத்தின் மூன்று அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என தகவல் வந்துள்ளது, பூர்டோன்வில்லே நிலையத்தில் ஏதோ வித்யாசமான தண்டனையை அலெக்ஸுக்கு நிறைவேற்றிவிட்டு அங்கிருந்து அவனை விடுதலை செய்து அவனை ரயிலில் ஏற்றிவிட்டுவிட்டு அங்கிருந்து திரும்பி வந்துகொண்டிருந்த ஹாரிஸ், மோரிஸ், லூயிஸ் என்ற மூன்று காவலாளிகளும் கோயின் டக்ளஸ் சாலை சந்திப்பில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வண்டியோடு எரிக்கப்பட்டிருப்பதாகவும் தீயணைப்பு மற்றும் அவசர மருத்துவ பிரிவு தீயை அணைத்து உடலை கைப்பற்றி வைத்திருப்பதாகவும் செய்தி வந்துள்ளது" என்றாள் ஆஷ்லே.
"அறிந்தேன் ஆஷ்லே, இப்போது தான் எனது தலைமை நிலையத்தில் இருந்து எனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு உடனடியாக பணியில் சேர ஆணை வந்தது, நானும் கிளம்பிக்கொண்டிருக்கிறேன், இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக அங்கே வந்து சேர்ந்துவிடுவேன், ஹாரிஸ் என்பவர் தான் அங்கே முதன்மை அதிகாரியாக இருந்தார், அவர் மிகவும் கண்டிப்பானவர், மிகவும் தைரியசாலி திறமைசாலி ஆனால் அவரை எப்படி...எனக்கே ஒன்றும் புரியவில்லை. இப்போது நீ எங்கு இருக்கிறாய்?" என்றார் கென்னடி.
"இப்போது தான் நபியர்வில்லே கட்டுப்பாட்டு அறையில் இருந்து புறப்படுகிறேன், ஆனால் ஒரு விஷயம், அலெக்ஸுக்கு அவர்கள் கொடுத்த தண்டனை மிக கொடியது அப்பா, அந்த தண்டனை அநியாயமானது, அதுபோல தண்டனை அநியாயமாக ஒரு பாவப்பட்ட நபருக்கு கொடுத்தால் இப்படி தான் நடக்கும். ஆனால் அப்பா, எனக்கு ஒரு சந்தேகம் தான். அலெக்ஸை விட்டுவிட்டு வரும்போது தான் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கிறது. இதனால்......" இழுத்தாள் ஆஷ்லே.
"ச்ச ச்ச.... அவன் அப்படி ஒரு கொடூரமான ஆள் இல்லை, மிகவும் சாந்தமானவன், ஹாரிஸ் மிகவும் கொடுமைக்காரர், அவரால் பலபேர் பல நேரங்களில் கொடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகி இருக்கிறார்கள், அது மட்டும் அல்ல, ஒரு சிறிய குற்றத்திற்காகக்கூட அவர் என்ன நினைக்கிறாரோ அந்த தண்டனையை கொடுக்க நினைப்பார், அதற்கேற்றாற்போல காய் நகர்த்துவார். அவரது அசாதாரண மனப்பாங்கு, குற்றம் செய்யாதவனை கூட தான் தான் குற்றம் செய்தேன் என ஒத்துக்கொள்ள வைத்துவிடும். அந்த அளவு புத்தி கூர்மையான வார்த்தை ஜாலக்காரர். ஆனால் அவரை கொல்லும் அளவுக்கு இப்போது பெரிய எதிரி யார் என யூகிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு எதிரிகளை சம்பாதித்து வைத்துள்ளார்." என்றார் கென்னடி.
"அப்பா, என்ன இருந்தாலும் ஒரு காவல் அதிகாரியாக எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அலெக்ஸ் தான் சமீபத்திய நேரத்தில் அவரால் பாதிக்கப்பட்டவன், இப்போது நாங்கள் என்ன செய்யலாம் என எனது சக அதிகாரியான எம்.ஜே., உங்கள் ஷெரிங்க்டன்னில் தான் பயிற்சியில் ஈடுபட்டுள்ளாள். உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன், அவள்தான் இப்போது அங்கிருந்து கோயின் டக்ளஸ் சாலை சந்திப்பை நோக்கி வந்து கொண்டிருக்கிறாள். அவளது நிலைப்பாட்டையும் அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளையும் பற்றி கேட்டறிந்து உங்களிடம் சொல்கிறேன், நீங்கள் இப்போது நேராக விபத்து பகுதிக்கு வருவீர்களா, இல்லை நிலையத்திற்கு சென்று முறைப்படி பொறுப்பை ஏற்றுவிட்டு இங்கே வருவீர்களா?" என்றாள் ஆஷ்லே.
"இல்லை ஆஷ்லே, நான் நேராக விபத்து பகுதிக்கு தான் வருகிறேன், அதுமட்டும் அல்ல, நீ சொல்வது சரிதான், எம்.ஜே. வோடு பேசி அவளது நிலைப்பாட்டிற்கு ஏற்றாற்போல செய், ஏனென்றால் இது எங்களின் காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கும் இடம். அதுமட்டும் அழல், கொல்லப்பட்டிருக்கும் காவல் அதிகாரிகளும் எங்கள் நிலைய அதிகாரிகள்." என்றார் கென்னடி.
"அப்பா, இந்த செய்தியை நீங்கள் ஜொஹானிடம் தெரிவிக்கவும், ஏனென்றால் அவன் தான் மிகவும் வருத்தப்படுவதாக கூறினீர்கள்" என்றாள் ஆஷ்லே.
"அதுவும் சரி தான், நான் சொல்லிக்கொள்கிறேன், நீ கவனமாக இரு, இது நீ புலனாய்வு செய்யப்போகும் முதல் கொலை வழக்கு. மிகவும் கவனமாக தடயங்களை சேகரி. நானும் உனக்கு உதவுகிறேன்" என்றார் கென்னடி.
"சரி அப்பா" என்றபடி தொலைபேசி உரையாடலை துண்டித்தாள் ஆஷ்லே.
பின்பு எம்.ஜே. விற்கு அழைப்பு விடுத்தாள் ஆஷ்லே.
"எம்.ஜே. எங்கே இருக்கிறாய் இப்போது? நான் இன்னும் பத்து நிமிடங்களுக்குள் அங்கே வந்துவிடுவேன், நீ வந்துவிட்டாயா?" என்றாள் ஆஷ்லே.
"நானும் இன்னும் பத்து பதினைந்து நிமிடங்களுக்குள் வந்துவிடுவேன். இது நாம் கையாளப்போகும் முதல் குற்ற வழக்கு, நாம் மிக நேர்த்தியாக கையாள வேண்டும், ஒவ்வொரு தடயத்தையும் மிக துல்லியமாக கணிக்க வேண்டும்" என்றாள் எம். ஜே.
"நீ சொல்வது சரி தான், இது உங்கள் நிலைய எல்லைக்குள் நடந்திருப்பதால் நீ தான் முதன்மை முடிவுகளை எடுக்க வேண்டும், உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்கிறேன், இப்போது முதலில் நாம் என்ன செய்யவேண்டும்?" என்றாள் ஆஷ்லே.
"நான் ஏற்கனவே காரியத்தில் இறங்கிவிட்டேன், அலெக்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் சென்றுகொண்டிருக்கும் வழித்தடத்தில் இங்கிருந்து புறப்பட்டு போகும் அனைத்து ரயில்களிலும் அலெக்ஸை தேடச்சொல்லி இருக்கிறேன். எந்த ரயிலில் இருந்தாலும் உடனே அந்த ரயில் நிலைய அதிகாரிகளை விட்டு அவனை பாதுகாவலில் வைக்கச்சொல்லி இருக்கிறேன். அடுத்தகட்ட நடவடிக்கைகளை பிறகு பார்க்கலாம்" என்றாள் எம்.ஜே.
பதறிப்போனாள் ஆஷ்லே.
"எதற்காக அலெக்ஸை நாம் பாதுகாவலில் வைக்க வேண்டும், அவனே பாவம் இல்லையா, கண்டிப்பாக இப்படி செய்திருக்க மாட்டான், அவன் மிகவும் சாது, நலலவன் என என் அண்ணன் சொல்லி இருக்கிறான், அது மட்டும் அல்ல. அவன் தனது தந்தை மற்றும் தங்கையை சமீபத்தில் தான் இழந்து அனாதையாக துன்பப்படுகிறான், அவன் தந்தை இறந்தது கூட அவனுக்கு தெரியாது. அவனை ஏன் பாதுகாவலில் வைக்க வேண்டும், கண்டிப்பாக அவன் அவனது ஊருக்கு சென்றுகொண்டிருப்பான்" என்றாள் ஆஷ்லே.
"ஆஷ்லே, இது நமது கடமை, இப்போது தானே சொன்னாய் இது எங்கள் நிலைய கட்டுப்பாட்டில் நடந்திருக்கும் கொலை என்று. நீ உதவி செய், ஆனால் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்காதே, என்னை பொறுத்தவரை எந்த தடயத்தையும் விட்டுவிடக்கூடாது என்று தெளிவாக இருக்கிறேன்" என்றாள் எம்.ஜே.
"உன் நடவடிக்கைகளில் குறுக்கிட்டதற்கு மன்னித்துவிடு எம்.ஜே. கண்டிப்பாக உனக்கு அனைத்து வகையிலும் உதவுகிறேன்" என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள் ஆஷ்லே.
இதற்கிடையே கென்னடி ஜொஹானுக்கு தொடர்பு கொண்டார், "ஜொஹான், அலெக்ஸை விடுவித்துவிட்டார்களாம், இப்போது தான் தகவல் வந்தது, ஆனால் சிறிய அசம்பாவிதம், அவனை கைது செய்து காவலில் வைத்திருந்த அதிகாரி....ஏற்கனவே உன்னிடம் கூறி இருந்தேனே, ஹாரிஸ், அவரை யாரோ கொலை செய்துவிட்டதாக எனக்கு செய்தி வந்துள்ளது, அதனால் அவருக்கு அதுத நிலையில் இருக்கும் என்னை விடுமுறையை ரத்து செய்துவிட்டு பணிக்கு திரும்புமாறு ஆணை வந்துள்ளது. நான் இப்போது பணிக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன், அது மட்டும் அல்ல, இந்த கொலை எனது நிலைய எல்லைக்குள் நடந்திருப்பதால் எனது தலைமையில் தான் விசாரணை நடக்கும், நீ அலெக்சியோடு தொடர்புகொண்டு பேசிப்பார். நான் பணிக்கு செல்கிறேன். நீ எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாவை மறக்காமல் கேன்சல் செய்துவிடு" என்றார் கென்னடி.
"என்னப்பா சொல்கிறீர்கள்? ஹாரிஸ் கொல்லப்பட்டிருக்கிறாரா? என்னால் நம்பவே முடியவில்லை அப்பா, இதனால் அலெக்ஸுக்கு ஏதும் நெருக்கடி இருக்குமா?" என்றான் ஜொஹான் பதற்றமாக.
"சொல்ல முடியாது ஜொஹான், சந்தேகம் அவன் மேல் அதிகமாக இருக்குமாயின் பிரச்சனைகள் அலெக்ஸுக்கு வரக்கூடும். எதுவாக இருப்பினும் நான் கொலை நடந்த இடத்திற்கு போனதும் நிலைமையை பார்த்துவிட்டு மீண்டும் அழைக்கிறேன். இப்போது நீ எங்கே இருக்கிறாய்?" என்றார் கென்னடி.
"மாண்ட்ரியலில் இறங்கி ஏற்கனவே அலெக்ஸை தொடர்புகொண்டேன், அவனது அலைபேசி சற்று முன்பு தான் ஆன் செய்யப்பட்டிருந்தது, அவனுடன் பேசினேன். கரே காண்டியாக் நிலையத்தில் இருந்து ரயில் ஏறி இரண்டு மணி நேரம் ஆகிறது என்று சொன்னான், நான் அவனிடம் மான்ரியல் வந்திருப்பதாக சொன்னேன், அதற்குள் அவனது அலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது, அவனது அலைபேசியில் சார்ஜ் இல்லை என நினைக்கிறேன், சரி அப்பா, அவனை நான் வான்கூவர் போனபின் சந்தித்துக்கொள்கிறேன். நீங்கள் சற்று கவனமாக இருங்கள்." என்றான் ஜொஹான்.
"சரி, நீ வீட்டிற்கு வா, உனது பதற்றத்தில் மெர்சியை இன்னலுக்கு உள்ளாக்காதே, உனது தங்கையின் பழைய கார் வீட்டில் உனது உபயோகத்திற்கு வைத்திருக்கிறேன், பார்த்துக்கொள், நான் நிலவரத்தை உனக்கு சொல்கிறேன், அனைத்திற்கும் மேலாக இந்த வழக்கில் உனது தங்கையும் துப்பறியும் பிரிவில் இருக்கிறாள், அவளிடம் பேசி வாழ்த்துக்கள் கூறு" என்று சொன்னார் கென்னடி.
"சரி அப்பா கண்டிப்பாக பேசுகிறேன்" என்று சொல்லிவிட்டு அலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டு அஷ்லேவிற்கு கால் செய்தான் ஜொஹான்.
"ஆஷ்லே, என்ன செய்கிறாய், எனக்கு தெரியும், ஒரு பெரிய வழக்கில் நீ ஈடுபட்டிருக்கிறாய் என்று, இது உனது முதல் கொலை விசாரணை வழக்கு, நல்லபடியாக செய்து நல்ல பேர் வாங்க வேண்டும் என உன்னை நான் மனமார வாழ்த்துகிறேன்." என்றான் ஜொஹான்.
"நன்றி ஜொஹான், அப்பா உன்னிடம் அலெக்ஸ் பற்றி சொல்லிவிட்டார் அல்லவா?" என்றாள் ஆஷ்லே.
"ஆமாம், சொன்னார், அனால் அவர் சொல்வதற்கு முன்னதாகவே அவனுக்கு எதேச்சையாக கால் செய்தேன், அவனை தொடர்பு கொள்ள முடிந்தது, பேசினேன். அவனை விடுவித்ததாகவும் அவனது ஊருக்கு போய்க்கொண்டிருப்பதாகவும் சொன்னான், அவனது தந்தை இறந்த விஷயத்தை சொன்னேன், மிகவும் வருந்தினான், பின்பு கோபப்பட்டான், அவனை சமாதானப்படுத்தினேன், அதற்குள் அவனது கைபேசி சார்ஜ் இல்லாமல் அணைந்துவிட்டது என நினைக்கிறேன். கடைசியாக அவன் கேர் லாஸிலே நிலையத்தை அடைய பத்து நிமிடங்கள் இருப்பதாக கூறினான், அங்கிருந்து அலெக்ஸ்சாண்ட்ரியா தடத்தில் செல்லும் ரயில் எண் 84 ஐ பிடித்து செல்லப்போவதாக கூறினான்" என்றான் ஜொஹான்.
"அப்படியா, நீ எப்போது அவனுக்கு கால் செய்தாய்" என்றாள் ஆஷ்லே.
"ஏன்? ஒரு மணி நேரம் முன்பு" என்றான் ஜொஹான்.
"நல்லது, அவன் பயணத்தில் இருக்கிறான், ஷெரிங்க்டன்னில் நடந்த கொலைக்காக சந்தேகத்தின் பெயரில் அலெக்ஸை மீண்டும் விசாரிக்க பாதுகாவலில் வைக்க அந்த ஊரின் காவல் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். ஆனால் இப்போது அவன் பயணத்தில் இருக்கிறார், அதனால் அவர் மேல் சந்தேகம் வர வாய்ப்பில்லை" என்றாள் ஆஷ்லே.
"மிகவும் நல்லதாக போனது ஆஷ்லே, சரி, நீ எப்போது மாண்ட்ரியல் வருவாய்?" என்றான் ஜொஹான்.
"தெரியவில்லை, என்ன திட்டம் என்று பிறகு சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தாள் ஆஷ்லே.
அந்த நேரம் அவள் கொலை நடந்த இடத்தை எத்தி இருந்தாள்.
மிகவும் கொடூரமாக தான் இருந்தது அந்த காட்சி.
முழுதும் எறிந்த நிலையில் ஒரு செவ்ரோலே டாஹோ, அதிலிருந்து முழுதும் எறிந்த நிலையில் மூன்று பிணங்கள், அடையாளம் கூட காண இயலாத நிலையில் எரிந்து சுருங்கிய அந்த உடல்கள், தீயணைப்பு வீரர்களின் விரைவான வேலைகள், அவசர மீட்பு குழு என அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.
அப்போது தான் எம்.ஜே. வந்து சேர்ந்தாள்.
"எம்.ஜே., உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்" என்று அவள் வந்ததும் வராததும் அவளிடம் பேசத்தொடங்கினாள் ஆஷ்லே.
"சொல் ஆஷ்லே, ஏதும் துப்பு கிடைத்ததா, எப்போது வந்து சேர்ந்தாய்?" என்றாள் எம்.ஜே.
"இப்போது தான், ஒரு ஐந்து நிமிடங்கள் இருக்கும், நான் இப்போது தான் எனது சகோதரன் மூலம் அறிந்தேன், ஒரு மணி நேரம் முன்பு அலெக்ஸ் கேர் லாஸிலே நிலையத்தை அடைந்திருக்கிறான், அங்கிருந்து அலெக்ஸ்சாண்ட்ரியா நிலையம் செல்லும் வண்டி எண் 84 ஐ பிடிக்கப்போகிறான் எனவும் சொன்னான்." என்றாள் ஆஷ்லே.
"வெரி குட் ஆஷ்லே, நல்ல ஒரு தகவல், சரி, நீ அங்கே தீயணைப்பு படை மற்றும் அவசர பேரிடர் மீட்பு குழு என்ன தகவல் சொல்கிறார்கள் என கேள்" என்றபடி வயர்லெஸ்ஸை எடுத்து தகவலை அலெக்ஸ்சாண்ட்ரியா ரயில் நிலைய காவல் அதிகாரிக்கு சொன்னாள் எம்.ஜே.
"ஷெரிங்க்டன் விங், ட்ரைனிங் கேண்டிடேட் 445 மேரி ஜாய் ஆன் லைன், ரயில் எண் 84 அலெக்ஸ்சாண்ட்ரியா அடைந்துவிட்டதா?" என்று கேட்டாள் எம்.ஜே.
அதற்கு பதில் "இன்னும் ஆறு நிமிடங்களில் வந்துவிடும்" என்று வந்தது.
"நான் உங்களுக்கு ஒரு புகைப்படம் ஸ்கேன் செய்து அனுப்பியுள்ளேன், அதை கொஞ்சம் பாருங்கள், அந்த ரயிலில் அந்த நபர் இருப்பார், அவரை மேலும் பயணிக்க அனுமதிக்காமல் அங்கேயே காத்திருக்க செய்யுங்கள், பிடித்து வையுங்கள், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை நான் பிறகு சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு விசாரித்துக்கொண்டிருக்கும் அஷ்லேவை நோக்கி சென்றாள் எம்.ஜே.
திகில் தொடரும்.
பகுதி 9 முடிந்தது.