அச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 10

"தோராயமாக எதனை மணி நேரங்களுக்கு முன்னதாக நடந்திருக்கக்கூடும்?" அங்கு வந்திருந்த மீட்புக்குழுவினரிடம் கேட்டாள் ஆஷ்லே.

"அதிகபட்சம் ஒன்றிலிருந்து ஒன்றேமுக்கால் மணி நேரம் முன்பு நடந்திருக்கலாம், ஆனால் ஊர்ஜிதம் இல்லை, ஏனென்றால் கொன்றுவிட்டு நீண்ட நேரம் கழித்து கூட காரோடு எரித்திருக்கலாம், இல்லை என்றால் வேறு இடத்தில கொன்று இங்கே எரியூட்டப்பட்டிருக்கலாம், நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன, எதுவுமே போஸ்ட்மார்ட்டம் செய்தயின் தான் தெரியும்" என்றனர் அங்கே இருந்த மீட்புக்குழு நிபுணர்கள்.

"ஆஷ்லே, இங்கிருக்கும் மக்களிடம் விசாரித்துப்பார், கார் எப்படி எரிந்தது, தானாக தீப்பிடித்து எரிந்தது போல இருந்ததா, இல்லை யாரேனும் தாக்கினார்களா, தாக்கினார்கள் என்றால் கும்பலாகவா தனி மனிதனா, ஆணா பெண்ணா, பார்த்தவர்கள் இருந்தால் பல கோணங்களில் கேள், ஏதாவது ஒரு துப்பு கிடைத்தால் கூட போதும், நான் அக்கம் பக்கம் ஏதும் தடயங்கள் இருக்கின்றனவா என்று பார்க்கிறேன்" என்றாள் எம்.ஜே.

"ம்ம், சரி, நான் விசாரிக்கிறேன், நீயும் தடயங்கள் சேகரிக்க முயற்சி செய், உனது நிலைய அதிகாரிகள் எப்போது வருவார்கள், யார் இந்த வழக்கை கையாளப்போகிறார்கள்?" என்றாள் ஆஷ்லே.

"எனக்கு தெரிந்து ஹாரிஸ் தான் நிலைய முதன்மை அதிகாரி, அவர் இல்லாத பட்சத்தில் இது சற்று அபாயமான வழக்கு, தீவிர விசாரணைகள் மேற்கொள்ளவேண்டி இருக்கும், அதனால் இதை ஹாரிஸுக்கு அடுத்த நிலையில் உள்ள கென்னடி என்ற அதிகாரி தான் கையாள்வார் என நினைக்கிறேன், அதுமட்டும் அல்ல, அந்த அதிகாரி விடுமுறையில் இருக்கிறார், அந்த விடுமுறையை கூட ரத்து செய்துவிட்டு பணிக்கு திரும்புமாறு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது, அதனால் அவர் தான் இந்த வழக்கை கையாள்வார் என தெரிகிறது." என்றாள் எம்.ஜே.

"ஓ அப்படியா, மிக்க நல்லது, அவர் என் தந்தை தான், ஆனால் இதை உனக்குள் வைத்துக்கொள், ஏனென்றால் அவர் என் தந்தை என்பது உங்கள் நிலையத்தில் யாருக்கும் தெரிய வேண்டாம் என சொல்லி இருந்தார்" என்றாள் ஆஷ்லே.

"ஓஹோ, இது ஒரு நல்ல செய்தி தான், ஏனென்றால் மற்ற அதிகாரிகள் யாரவது விசாரித்தால் நமது ஈடுபாட்டை அதிகம் விரும்பமாட்டார்கள், ஏனென்றால் நாம் பயிற்சியில் தான் இருக்கிறோம், ஆனால் உனது தந்தை என்பதால் நமது கருத்துக்களுக்கும் யோசனைகளுக்கும் செவி கொடுப்பார் இல்லையா?" என்றாள் எம்.ஜே.

"ஆமாம், நீ யோசிப்பது சரி தான், சரி, நீ தடயங்களை சேகரிக்க முயற்சி செய், நான் விசாரிக்கிறேன், நம்முடைய பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்றாள் ஆஷ்லே.

"கண்டிப்பாக" என்று சொன்னபடியே தடயங்களை சேகரிக்க தொடங்கினாள் எம்.ஜே.

சற்று நேரத்தில் எறிந்த சடலங்கள் மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய கொண்டுசெல்லப்பட்டன.

இதற்கிடையே.....

கென்னடி பணிக்கு வந்து சேர்ந்தார். வந்தவுடன் எம்.ஜே. மற்றும் ஆஷ்லே நடந்தவற்றை கூறி, சேகரித்த தடயங்கள் பற்றியும் விசாரித்த தகவல்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.

"சரி, ஆஷ்லே, நீ உனது நிலையத்திற்கு செல்லலாம், இப்போது வரை இந்த சம்பவம் எங்கள் நிலைய கட்டுப்பாட்டு எல்லையில் இருப்பதால் உனது ஈடுபாடு தேவைப்படாது. தேவைப்படும் பட்சத்தில் நாங்கள் அழைக்கிறோம்" என்றார் கென்னடி.

"மிஸ்டர் கென்னடி, நான் சொல்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம், ஆஷ்லே மிகச்சிறந்த அறிவாளி, தடவியலில் எங்கள் குழுவின் டாப்பர், அதனால் தாங்கள் சிறப்பு கோரிக்கை ஒப்புதல் பெற்று நமது புலன் விசாரணையின் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளலாம், எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் மகள் உங்களோடு பணியில் ஈடுபடுவது எவ்வளவு சிறப்ப" என்றாள் எம்.ஜே.

"எம்.ஜே...உனக்கு தெரியுமா ஆஷ்லே எனது மகள் என்று" வியப்புடன் கேட்டார் கென்னடி.

"நான் உங்கள் மகள் ஆஷ்லேவின் தோழி மிஸ்டர் கென்னடி, பதட்டம் அடைய வேண்டாம், இதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன், உங்களுடன் பணிபுரிவதில் நானும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" என்றாள் எம்.ஜே.

"நீ சொல்வது சரி தான், ஆனால் சிறப்பு ஒப்புதல் போடும் வரை ஆஷ்லேவை விசாரணையில் உறுப்பினராக ஈடுபடுத்துவது நல்லதல்ல, அதனால் இப்போது ஆஷ்லே செல்லட்டும், நாம் அதிகாரப்பூர்வமாக நாளை அல்லது நாளை மறுநாள் அழைத்துக்கொள்ளலாம், நாளை மறுநாள் புத்தாண்டு வேறு, அவள் வீட்டிற்கு செல்வாள், நீயும் வீட்டிற்கு செல்வாய் என நினைக்கிறேன், அதன்பின்பு பார்த்துக்கொள்ளலாம்" என்றார் கென்னடி.

"அதுவும் சரிதான் மிஸ்டர் கென்னடி" என்றாள் எம்.ஜே.

"அப்பா..." ஆஷ்லே முடிப்பதற்குள், "பணியில் இருக்கும்போது மிஸ்டர் கென்னடி என்று சொல்" என்றார் கென்னடி.

"சாரி மிஸ்டர் கென்னடி, இப்போது நான் புறப்படுகிறேன், எனது பணி முடியும் நேரம். உங்கள் நிலைய எல்லைக்குள் இருப்பதால் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள், இது நான் சேகரித்த விஷயங்கள்" என்று கூறி கையில் இருந்த காகிதக்கோப்புகளை கொடுத்தாள் ஆஷ்லே.

"ஆஷ்லே, தவறாக நினைக்கவேண்டாம், உனது நல்லதுக்கு தான், கண்டிப்பாக கூடிய விரைவில் விசாரணை உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக உன்னை சேர்த்து அறிக்கை அறிவிக்கிறோம்" என்றாள் எம்.ஜே.

"எனக்கு புரிகிறது, மிஸ்டர் கென்னடி சொல்வதும் சரி தான். அது மட்டும் அல்ல, எனது தந்தை எப்படி எனக்கு நல்லன அல்லாதவற்றை செய்வார்?" என்றபடி அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டாள் ஆஷ்லே.

"ஆஷ்லே கார் கிளம்பியதும் எம்.ஜே.விடம் மேலும் சில விஷயங்களை கேட்டுக்கொண்டார் கென்னடி.

"தோராயமாக எத்தனை மணிக்கு நடந்திருக்கக்கூடும்? இங்கே சொல்பவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு வெட்டப்பட்டு எரியூட்டப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு முடிவுக்கு வர முடியாது, தீவிரமாக விசாரிக்க வேண்டும்" என்றார் கென்னடி.

"ஆமாம் மிஸ்டர் கென்னடி, அலெக்ஸ் என்ற கைதிக்கு தண்டனை நிறைவேற்றிவிட்டு விடுவித்துள்ளனர். பூர்டோன்வில்லே நிலையத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டு அந்த கைதியை காரே காண்டியாக் ரயில் நிலையத்தில் சீட்டு வாங்கி ரயில் ஏற்றிவிட்டுவிட்டு
திரும்பும்போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதுமட்டும் அல்ல, அவர்கள் மூவரும் இந்த சந்திப்புக்கு வரும்போது இந்த சந்திப்பில் இருந்து எதற்காக இந்த சாலை பணிகள் நடக்கும் சாலைக்கு போகக்கூடிய சேவை சாலையில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை, இந்த இடத்தில அரை மணி நேரத்திற்கு மேல் வண்டி நின்றிருக்கிறது, வண்டியில் இருந்து மூன்று காவலர்கள் மாறி மாறி இறங்கி ஏறி இருப்பதை வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு சாட்சிகள் சொன்னார்கள், காவல் வாகனம் என்பதால் யாரும் கண்டுகொள்ளவில்லை என நினைக்கிறேன், ஆனால் திடீரென கார் எரிந்துகொண்டிருப்பதாக தகவல் பேரிடர் மீட்பு குழு தகவல் பெற்றிருக்கிறது, பின்பு இங்கே வந்து பார்த்திருக்கின்றனர், எந்த வேற்று ஆளும் வந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை, ஆனால் இவர்கள் ஏன் நெருப்பு பிடித்தவுடன் இறங்கி ஓட முயலவில்லை என எனக்கு தோன்றியது, அதனால் நான் எறிந்த நிலையில் இருந்த அந்த பிணங்களை கண்டபோது அவர்களின் உடல் எலும்புகள் வெள்ளை நிறத்தில் இருந்தது. அதனால் அவர்கள் காற்று அடைக்கப்பட்ட அல்லது காற்று குறைவான இடத்தில எரிக்கப்படவில்லை என்பதை யூகித்தேன். ஏனென்றால் காற்று அடைக்கப்பட்டிருக்கும் இடங்களில் எரியூட்டப்பட்டால் எலும்புகள் சாம்பல் நிறத்திற்கு மாறி விடும். அதுமட்டும் அல்ல, அவர்களின் எலும்புகள் இருந்த நிலை, எனக்கு இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர்களின் கைகளும் கால்களும் எரிந்து சுருங்கி எழும்பாமல் இருந்தன. அதுமட்டும் இல்லாமல் அவர்களின் கை எலும்புகள் மாறி இருந்தன, முன்னால் உட்கார்ந்திருந்த நபரின் கை பின்னால் இருந்த ஆளின் உடலோடு இருந்தது. இதை மீட்பு குழுவில் இருந்த மருத்துவ நிபுணர் சொன்னார், எலும்புகள் சரியாக பொருந்தவில்லை என்று, அப்போது கண்டறிந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் மண்டை ஓடு பார்க்கும்போது அவர்களின் வாய் திறக்கப்படாமல் இருந்தது. அவ்வளவு எரியும் போதும் கத்தாமல் இருப்பது முடியாத காரியம், அதனால் அவர்களின் வாய் கட்டப்பட்டிருக்க வேண்டும், அதுமட்டும் இல்லாமல் அவர்களின் வாயில் சாம்பல் இல்லை, இதன் மூலம் அவர்கள் இறந்தபின்னே எரியூட்டப்பட்டிருக்கிறார்கள்...எனது சிந்தனைப்படி இவர்களை வலுக்கட்டாயமாகவோ இல்லை என்றால் இவர்கள் எங்காவது ஆள் அரவம் அற்ற பகுதியில் வரும் வரையில் கொலைகாரன் இவர்களை தொடர்ந்து வந்திருக்க வேண்டும். அவர்களை வெளியே இழுத்து தாக்கியோ வெட்டியோ இருக்க வேண்டும், அப்போது கத்தாமல் இருக்க அவர்களின் வாயை கட்டி இருக்க வேண்டும், தாக்கி கொன்றபின் அவர்களை வெட்டி இருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் வெட்டி கொன்றிருக்க வேண்டும், பிறகு அவர்கள் அனைவரையும் வெட்டப்பட்ட உடல் பாகங்களை சேகரித்து காரினுள் போட்டிருக்க வேண்டும், பின்பு அவர்களின் மேலும் காரின் மேலும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய எரிபொருட்களை உபயோகப்படுத்தி எரியூட்டி இருக்க வேண்டும், ஏனென்றால் சில ரத்தக்கறைகள் காரில் இருந்து சற்று தொலைவில்....அதோ அங்கே இருக்கிறது" என்றாள் எம்.ஜே.

"எம்.ஜே, மிகவும் திறமையாக தடயங்களை கொண்டு என்ன நடந்திருக்கும் என்று யூகிக்கிறாய், ஆனால் அந்த ரத்தக்கறை கொலை செய்யப்பட்டவர்கள் தான் என்பது கண்டுபிடிக்க வேண்டும், அது கொலையாளியின் ரத்தக்கறையாக கூட இருக்கலாம்" என்றார் கென்னடி.

"ஆமாம், நான் அந்த ரத்த மாதிரியை சோதனைக்கு அனுப்பி உள்ளேன், அது மட்டும் இல்லை, எனக்கு அலெக்சின் மேல் தான் சந்தேகம் இருக்கிறது, ஏன் என்றால் அவனை விசாரிக்கும்போது வெஸ்ட்மின்ஸ்டரிலும் சரி ஷெரிங்க்டன்னிலும் சரி, ஒத்துழைக்காமல் காவலர்களை தாக்கியும் மிகவும் மோசமாகவும் நடந்து கொண்டிருக்கிறான், அவனது தண்டனையும் மிக கொடூரமானது, அவனது தங்கை மற்றும் தந்தையின் இழப்பால் கூட இப்படி ஒரு மனா இறுக்கத்தில் இப்படி செய்திருக்கலாம், ஆனால் அவன் பயணித்துக்கொண்டிருப்பதாக செய்தி கிடைத்தது. இன்னும் சிறிது நேரத்தில் அலெக்ஸ்சாண்ட்ரியா ரயில் நிலையம் அடைந்து விடுவான் என அறிந்தேன், அவனை அங்கேயே நிறுத்த சொல்லி இருக்கிறேன், நான் செய்தது சரி தானே?" என்றாள் எம்.ஜே.

"பயணிக்கும்போது அவனை ஏன் நாம் தொந்தரவு செய்ய வேண்டும்?" என்றார் கென்னடி.

"இல்லை மிஸ்டர் கென்னடி, அவனை காரே காண்டியாக் நிலையத்தில் ரயில் ஏற்றிவிட்டு இவர்கள் இந்த இடத்தை அடைய அரை மணி நேரத்திற்கு குறைவாகவே ஆகும், அந்த ரயில் நிலையத்தில் இருந்து அலெக்ஸ்சாண்ட்ரியா நிலையம் சென்றடைய ஒன்றரை மணி நேரம் ஆகவும், ரயிலில். ஒவ்வொரு கால் மணி நேரத்திற்கு ஒரு ரயில் அலெக்ஸ்சாண்ட்ரியாவிற்கு இருக்கிறது. அப்படி ஆனால் அவன் இந்நேரம் அலெக்ஸ்சாண்ட்ரியா அடைந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகி இருக்க வேண்டும். ஆனால் இன்னும் அவன் போய் சேர அற்று நிமிடங்கள் ஆகும் என எனக்கு செய்தி வந்தது. அந்த நேரத்தாமதம் தான் என்னை சந்தேகமடைய செய்கிறது." என்றாள் எம்.ஜே.

அந்த நேரம், அலெக்ஸ்சாண்ட்ரியா ரயில் நிலைய காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து....

திகில் தொடரும்

பகுதி 10 முடிந்தது.

எழுதியவர் : முபாரக் (21-Feb-18, 3:32 pm)
சேர்த்தது : முபாரக்
பார்வை : 232

மேலே