மரமாபிமானம் -6

மெல்ல மெல்ல ஒளியை இழந்து இருண்டு போயிருந்தது வானம். அப்போது, பிய்ந்து போகும் நிலையில் இருக்கும் காலணிகளை அணிந்த இரு கால்கள் மெதுவாக நடந்து கொண்டிருந்தன. மெதுவாக நடந்தாலும் கால்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு திசைகளில் அவனை இழுத்ததால் அந்த மனிதன் தடுமாறி தடுமாறி நடந்து கொண்டிருந்தான். தடுமாற்றமான நடையிலேயே தெரிந்தது அந்த மனிதன் குடி போதையில் நடக்கின்றான் என்பது. நடந்து கொண்டிருந்த அந்த இரு கால்கள் ஓரிடத்தில் நின்றது. கால்கள் நின்ற அந்த இடத்திற்கு எதிரில் கழுத்தறுபட்டு காய்ந்தநிலையில் காணப்பட்டது ஒரு அறுவடையான நெல்வயல். சிறிது நேரம் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்த அந்த கால்கள் மெதுவாக காலணிகளை கழட்டிவிட்டு அந்த வயலில் இறங்கி நடந்து சிறிது தூரம் சென்று நின்றது. நின்று கொண்டிருந்த அந்த கால்களுக்கு சொந்தமான மனிதன் மெதுவாக வயலில் முட்டிபோட்டு அமர்ந்தான். தொங்கிய நிலையில் கிடந்த அவன் தலை திடீரென குலுங்கி குலுங்கி அசைந்தது அழுகுரல் ஓசையுடன்.

அந்த வயல், மரநேசனின் மாந்தோப்பிற்கு பக்கத்திலிருக்கும் நிலமாகும். வெளியில் சென்று வீடு திரும்பிய மரநேசன் அந்த மனிதன் வயலில் முட்டிபோட்டுக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருப்பதைக் கண்டு சிறிது நேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு ஏதோ சிந்தித்தவன் ஏதும் செய்யாமல் முள்வேலி கதவைத் திறந்து தன் மாந்தோப்பிற்குள் சென்றுவிட்டான். பாவம், மரநேசனுக்கு அப்போது தெரியவில்லை அந்த மனிதனுக்கு ஏற்பட்ட நிலைமை அவனுக்கும் ஏற்படப்போகிறது என்பது.

அழுது கொண்டிருந்த அந்த மனிதன் தன் கடைசி கண்ணீர்த்துளிகளை முழுவதையும் அறுவடை செய்யப்பட்ட அவனது நிலத்தில் ஊற்றிவிட்டு அந்த நிலத்திலேயே சரிந்து இறந்துபோனான்.
அந்த மனிதன் வேறு யாருமில்லை. சில நாட்களுக்கு முன் சரபேஸ்வரனின் வீட்டில் அவனால் மிரட்டப்பட்டு தன் பூர்விக நிலத்தை சரபேஸ்வரனுக்கு விற்றவன். அன்று அவனுடன் வந்தவன் அவனின் மகன்.

அவன் இறந்து விழுந்த சில நேரங்களில்… வயக்காட்டிலிலுள்ள சந்து பொந்துகளில் ஒளிந்துகிடந்த எலிகள் எல்லாம் வெளியே பாய்ந்து அவன் சடலத்தை நோக்கிவந்தன. வறுமையின் மரண அடியால் மூர்ச்சையாகிவிட்டானோ இந்த உழவனென்று கருதி.. தங்களையே அவனுக்கு உணவாக பரிமாறிடவேண்டும் என்ற தியாக எண்ணத்தில் பாய்ந்து வருவதுபோல் இருந்தது அந்த காட்சி. ஆனால் பாய்ந்து வந்த எலிகள்...பசியால் துடித்தவனுக்கு ருசியான பலகாரம் கிடைத்தாற்போல் கடித்து குதறத்துவங்கின அவன் உடலை. வறட்சி காலங்களில் உழவர்களால் வேட்டையாடப்பட்டதற்கு பழிவாங்குவதைபோல் இருந்தது அந்த எலிகளின் குதறும் வேகம். இதையெல்லாம் எந்த சலனமுமின்றி மேலே இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்……. சந்திரன்.

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (22-Feb-18, 8:03 pm)
பார்வை : 49

மேலே