மாணவர்கள் நாடகம் சினிமா பார்க்கக்கூடாது சாணக்கியன் கட்டளை

சாணக்கியன் என்ற பிராஹ்மணன் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான். உலகம் வியக்கும் முதல் பொருளாதார நூலான அர்த்தசாஸ்திரத்தை யாத்தான்; பல நீதி மொழிகளை புகன்றான். மகத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து அலெக்ஸாண்டரின் படைகளை நடுநடுங்க வைத்தான். ஆனால் வியப்பான விஷயம் என்ன வென்றால் ஒரு குடிசையில் வாழ்ந்தான். விருப்பு வெறுப்பற்ற ஒரு யோகி போல வாழ்ந்ததால் யாருக்கும் கட்டளை இடும் துணிவு அந்த பிராஹ்மணனுக்கு இருந்தது.



அவன் செப்பாத விஷயம் இல்லை; பேசாத பொருள் இல்லை. சாணக்கிய நீதி என்னும் நீதி நூலில் அவன் மொழிவதாவது:



முட்டாளாக இருக்கும் மந்தமான மாணவர்களுக்குக் கற்பிக்கும் , புத்திசாலியான ஆசிரியர்க ளும் துன்பமே அடைவார்கள்;

கெட்ட பெண்களைக் கவனித்துக் கொள்வோர் நிலையும் அஃதே;

கெட்டவர்களுடன் நட்பு பாராட்டுவோரும் பரிதாபத்துக்கு உரியவர்களே;

சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 4



மூர்க்க சிஷ்ய உபதேசேன துஷ்ட ஸ்த்ரீபரணேன ச

துக்கிதைஹி ஸம்ப்ரயோகேன பண்டிதோஅப்யவஸீததி



xxx





மாணவர்கள் நாடகம் (சினிமா) பார்க்கக்கூடாது!



மாணவர்கள் Make-up மேக் அப் போட்டு அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது; ஆடல் பாடல், நாடக ( தற்காலத்தில் திரைப்படம்) நிகழ்ச்சிகளில் ஈடுபடக் கூடாது; காமம் க்ரோதம் (கோபம்) இருக்கக்கூடாது.





ஒரு மாணவன் கீழ்க்கண்ட எட்டு விஷயங்களைக் கைவிட வேண்டும்:

காமம் , கோபம், பேராசை, கேளிக்கை நிகழ்ச்சிகள், அலங்காரம் (மேக்- அப்), ஆடல், நாடக நிகழ்ச்சிகள், அதிக தூக்கம், மற்றவர்களைப் புகழ்ந்து வாழுதல் (காரியம் நடப்பதற்காக இச்சகம் பேசுதல்)

காமம் க்ரோதம் ததா லோபம் ஸ்வாதம் ச்ருங்காரகௌதுகே

அதி நித்ராதி ஸேவே ச வித்யார்த்தீ ஹ்யாஷ்ட வர்ஜயேத்



சாணக்கிய நீதி 11-10



xxx



வாத்தியாருக்கு நன்றிக்கடன்



ஆசிரியர் ஆனவர் உனக்கு ஒரு அக்ஷரம் (எழுத்து) சொல்லிக் கொடுத்தவர் ஆகட்டும்; அப்படியும் கூட அவருக்கு நன்றிக் கடன் செலுத்த உலகில் ஒரு பொருளும் இல்லை.

ஏக மேவாக்ஷரம் யஸ்து குருஹு சிஷ்யம் ப்ரபோதயேத்

ப்ருதிவ்யாம் நாஸ்தி தத் த்ரவ்யம் யத் தத்வா சான்ருணீ பவேத்

சாணக்கிய நீதி 15-1



((பெண்கள், பெற்றோர்கள், ஆசிரியர் ஆகியோரை இந்துமத இலக்கியங்கள் உயர்த்தி வைக்கும் அளவுக்கு உலகில் வேறு எந்த இலக்கியமும் உயர்த்தி வைக்கவில்லை; அப்படி இருந்தால் அவை எல்லாம் நமக்கு 1000, 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டவையே.

விருந்தோம்பல், தூது, அமைச்சர், அரசன், கொடி, முரசு, கோ மாதா , தானம், தவம் – முதலிய விஷயங்களும் உலகில் எந்த நாட்டுப் பழைய இலக்கியங்களிலும் கிடையாது. இவை எல்லாம் இந்தியாவே உலகின் பழைய நாடு, இந்தியாவே உலகிற்கு நாகரீகத்தைப் பரப்பிய நாடு என்பதற்குச் சான்று பகரும். ரிக் வேதத்தின் கடைசி பாடல், இன்று ஐ.நா. முதலிய அமைப்புகளின் நோக்கமாக இருக்கின்றது. இத்தகைய உயர் சிந்தனை மலர, ஒரு சமுதாயம் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பின்னரே உதிக்கும்.

xxx



ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது



ஒரு ஆசிரியரிடம் செல்லாது, புத்தகத்தில் இருந்து மட்டும் படித்தவன், ஒரு சபையில் சோபிக்க முடியாது; ஒரு பெண் கள்ளக் காதல் கொண்டால் எப்படியோ அப்படித்தான் இதுவும்!



புஸ்தகேஷு ச யா அதீதம் நாதீதம் குருஸந்நிதௌ

ஸபாமத்யே ந சோபந்தே ஜாரகர்பா இவ ஸ்த்ரியஹ

சாணக்கிய நீதி 17-1

ஒரு பெண், பெரிய பெரிய ஆட்களுடன் எல்லாம் படுத்து இருக்கலாம்; இருந்த போதிலும் அதை பொது இடங்களில் பேச முடியாது பேசினால் குட்டு வெளிப்பட்டுவிடும்; அது போலவே புத்தகத்தை மட்டும் படித்துப் பொருள் அறிபவன்; பொது சபைகளில் நாலு பேர் கேள்வி கேட்டால், திரு திருவென முழிப்பான்; அவன் குட்டு வெளிப்பட்டுவிடும்; ஆசிரியர் கற்பித்து இருந்தால், அவரே தடை எழுப்பி விடைகாணக் கற்றுக் கொடுத்து இருப்பார்.



ஆசிரியர்- மாணவர் உறவு பற்றி 2300 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லியிருக்க முடியாது.

அலெக்ஸாண்டரின் குரு அரிஸ்டாடில் (Aristotle)- அரிஸ்டாடிலின் குரு பிளாட்டோ (Plato) — பிளாட்டோவின் குரு சாக்ரடீஸ் (Socrates)- அவர் சாணக்கியனுக்கு ஒரு நூற்றாண்டு முன்னர் வாழ்ந்தார். அவருடைய கேள்வி கேட்டுப் பதில் காணும் முறையும் (Socratic Method) அவருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் உபநிடதத்தில் உள்ளது. அவரும் ஏசு கிறிஸ்துவும் உபநிடதங்களைக் கற்றது அவர்களின் உபதேசங்களில் வெள்ளிடை மலை என விளங்குகிறது.





(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

லண்டன் ஸ்வாமிநாதன்

எழுதியவர் : (23-Feb-18, 12:02 pm)
பார்வை : 113

சிறந்த கட்டுரைகள்

மேலே