இறைவன்
முன்னொரு காலத்தில்
பேச்சின் முதல் தீண்டலை
என் உதடுகள் தரிசித்த போது
நான்
புனித மலையின் மேலேறி நின்று
இறைவனிடம் சொன்னேன்..
"எசமானனே.. நான் உன் அடிமை..
உன் மறைந்த நினைப்பே எனக்கு ஆணை..
உன்னை நான் எப்போதும் பணிந்திருப்பேன்..!!"
இறைவன் மறுமொழி ஏதும் கூறாமல்
ஒரு பெரும் புயலைப் போல்
என்னைக் கடந்து சென்றார்..
ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னர்
நான்
மீண்டும் புனித மலையில் ஏறி
மீண்டும் இறைவனிடம் சொன்னேன்..
"படைத்தவனே.. நான் உன் படைப்பு..
களிமண் கொண்டு நீ என்னை உருவாக்கினாய்..
நான் உனக்கே உரிமையானவன்..!!"
இறைவன் மறுமொழி கூறாமல்
ஆயிரம் சிறகுகள் போல்
கடந்து மறைந்தார்..
இன்னொரு ஆயிரம் ண்டுகள் கடந்ததும்
புனித மலையில் ஏறி
நான் மீண்டும்
இறைவனிடம் சொன்னேன்..
"தந்தையே.. நான் உங்கள் மகன்..
கருணையினாலும் அன்பினாலும்
நீங்கள் எனக்குப் பிறப்பளித்தீர்கள்..
பக்தியினாலும் வழிபாட்டினாலும்
நான் உங்களை அடைவேன்..!!"
இறைவன் மறுமொழி கூறாமல்
மலைச்சாரல் பனிமூட்டம் போல்
விலகி மறைந்தார்..
மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் கடந்ததும்
மீண்டும் புனித மலையில் ஏறி
நான் இறைவனிடம் சொன்னேன்..
"இறைவா..
நீயே என் நோக்கம்..
நீயே என் நிறைவு..
நான் உன்னுடைய நேற்று..
நீ என்னுடைய நாளை..
நான் பூவுலகில் உன்னுடைய வேர்..
நீ வானுலகில் என்னுடைய மலர்..
சூரியனின் முகத்தின் முன்னால்
நாம் இருவரும் இணைந்து வளர்வோம்..!!"
இறைவன் என்னை நோக்கிக் குனிந்து
என் காதுகளில் இனிய சொற்களைக் கூறி
தன்னை நோக்கி வரும் நதியை
கடல் ஆரத் தழுவிக் கொள்வது போல்
என்னை அரவணைத்து எடுத்துக் கொண்டார்..
மலையிலிருந்து
நான் கீழே இறங்கி வந்த போது
இறைவன் எங்கும் நீக்கமற
நிறைந்திருந்தார்..