வேதப்பிரமாணம்
வேதத்திலுள்ள சொற்களைக்காட்டி ஒரு பொருளைக் கூறுதல்.
எ-டு : இமவான் மகளான பார்வதிதேவி சிவபெருமானையே கணவனாகப் பெறவேண்டித் தவமியற்றிய போது, தேவிக்கு அருள்புரியக் கருதிய பெருமான் ஒரு மாணி வடிவத்துடன் அவளிடம் சென்று, அவள் தன் மணாளனாகக் கொண்டுள்ள இறைவன் பல்வேறு குறைகளையுடையவன் எனவும் அவன் அவளுக்கு ஏற்ற கணவன் ஆகான் எனவும் பழிப் பதைப் போலப் புகழும் சிலவற்றைக் கூறுகையில், “சிவபெருமானுக்குத் தந்தையும் இல்லை; தாயு மில்லை; பிறந்த இடம் கூட அறியமுடியாதே” என்ற போது, அதனை மறுத்துக் கூறும் தேவியின் கூற்றுப் பின்வருமாறு :
“மாணி! உன் உள்ளத்தையே இழந்து என் மணாளனுடைய குற்றங்களை அடுக்கிக் கூறிய நீ, அவ்விறைவனைப் பற்றிய ஓர் உண்மையைக் கூறிவிட்டாய். அவன் பிறப்பிடமும் தந்தையும் தாயும் அறிதற்கியலாதவன் என்று நீ கூறியது மிகப்பெரிய உண்மை. பிரமனுக்கும் தானே காரணமானவனுக்குப் பிறப்பிடம் வேறொன்று யாண்டையது?”
இக்கூற்றில், “முன்னம் பிரமனைப் படைத்தவனும் அவனுக்கு வேதங்களைக் கூறியவனும் எவனோ, அவனே இறைவன்” என்ற வேதத்தின் சொற்களைப் பிரமாணமாகக் கொண்டு கூறிய கருத்து விளக்கம் பெறுவதால், இது வேதத்தைப் பிரமாணமாகக் கொண்டு வந்த அணியாயிற்று. இங்கு வேதம் விழையும் ஒரு கருத்து விழுமிதாகச் சொல்லப்பட்டது