அம்மா

எனக்கு சோறூட்ட -
நிலாவுக்கு ஒரு வாய் தந்தாய்
விண்மீன்களை -
கண் சிமிட்டச் செய்தாய்.
பக்கத்து பங்களா
கூர்க்கா - பூச்சாண்டியானான் !
கலா வீட்டு மீ... மீ...
என் தயிர் சோற்றில்
பசியாறியது.

உன் இடுப்பில் - அமரச் செய்து
காட்சிகளை -
விரிவாகக் காட்டினாய் !
சந்தையில் வாங்கிய -
சூடான கடலையை
ஊதி, ஊதித் தந்தாய்.
நான் சலிக்காமல் - இருக்க
இடையிடையே - என்
கன்னத்தில் முத்தமும் தந்தாய்

உன் முந்தானைப் பிடி -
எனது முதல் ஊன்று கோல்.
உன் சேலைத் தலைப்பு -
நான் விரித்த முதல் குடை.
உன் மடி - நான் உறங்கிய
முதல் பஞ்சு மெத்தை.
உன் விரல் பிடித்து
நடக்கையில் - நீ
நான் படித்த முதல் புத்தகம் !

அகம் மலர்ந்த -
கன்னக்குழிச் சிரிப்பு !
பழைய - அரைக்காசு
குங்குமப் பொட்டு !
சீராக வகிடெடுத்து -
பின்னலிட்ட
அரையடி கூந்தல் !
ஒற்றை மல்லிகைக்கு
அதில் கொஞ்சம் இடம் !

வருடங்கள் உருள -
வயோதிகம் தோலை
சுருக்கியது !
கருங்கூந்தல் -
நிறம் மாறியது !
பேரன், பேத்திகளால்
பாட்டியானாய் !
மூட்டு வாதம், ஆஸ்துமா
உனக்குள் குடியேறியது !

விடியலில் நடந்த
விபத்தால் - நீ
படுக்கையில் விழ !
எங்களுக்கு -
பாரமென நினைத்து
மரணத்தை அழைத்தாயோ !
காலைச் சூரியன்
எழுவதற்குள் - கோலமிட்ட
நீ !
கால்விரல் கட்டி -
நாசியில் பஞ்சிட்டு -
காலன் வாகனத்தில்
பயனித்தாயோ !

என் கர்ப்பகிரகமே !
உனக்கு சேவை செய்ய
அடுத்த பிறவியில் - நீ
எனக்கு சேயாக வா !!!
அன்றி -
என் மகள் உருவில்
மீண்டும் தாயாக வா !

எழுதியவர் : சு ஈ பிரசாத் (6-Mar-18, 5:18 am)
Tanglish : amma
பார்வை : 865

மேலே