குறும்பா நாற்பது

1

காலியானாதை நிரப்புவதும்
நிரப்பியதைக் காலிசெய்வதுமாய்
நிகழ்கிறது வாழ்க்கை.

2

தூக்கம் தொலைத்தவர்களும்
தூக்கம் தொலைந்தவர்களும்
ஒன்றா என்ன?

3

ஒன்று; மன்னித்துவிடு.
அல்லது அறைந்துவிடு
புலம்பி என்ன பயன்?

4

உதவுகிறவனைத் தடுக்காதே
ஏமாளியாகவே இருக்கட்டும்;
கருணை சுரப்பு அபூர்வம்

5

பித்தர்களாய்த்தான் இருக்கிறோம்
ஏதோ ஒன்றில்
எல்லோரும் பித்தர்களே.

6

எல்லாக் கவனமும்
கவனம் இன்மையில்தான்
முடிகிறது.

7

ஒவ்வொரு நேரம் கருணையும்
ஒவ்வொரு நேரம் வன்மமும்
எண்ணையும் தண்ணீரும் எப்படி?





8

விடுவதா? தொடர்வதா?
இரண்டில் ஒன்றா?
எதுவோ ஒன்று.

9

அழைப்பை மறுக்கலாம், வெறுக்கலாம்
அன்பை எங்கே விரட்டுவது?

10

நேர்த்தி என்பது
நேர்த்தியில் தோன்றவில்லை
நேர்த்தியின்மையில் தோன்றுகிறது!

11

எல்லாம் சரியாய் இருக்கிறது என்பது பொய்
எல்லாம் சரியாய் இல்லை என்பதும் பொய்

12

நடுவு என்பது
சரியின் பக்கம் சரிவது
சரி என்பது
நடுவு நிலை.

13

மயில் இறகு போடாது
பிடுன்கென்றவன்
வன்முறையாளன் தானே?

14

மயிலுக்குப் போர்வை தந்தவனும்
முல்லைக்குத தேர் தந்தவனும்
வள்ளல்களா? கோமாளிகளா?

15

என்னுடைய பதில்களுக்கான கேள்வி
யாரிடம் இருக்கிறது?



16

இப்போது வருவதில்
உனக்கு, ஒரு கணக்கு இருக்கிறது
உனக்கு மட்டும் லாபம் என நினைக்கிறாய்;
எனக்குந் தான் லாபம்.

17

என்ன பேச வேண்டும்
என்பதை வரையறுப்பதில்
மௌனம் குறிக்கிடுகிறது.

18

அர்த்த பேதங்களை
அலசும் மனத்தால்
நிம்மதி தொலைகிறது.

19

வார்த்தைகள் காயப்படுத்தும்
வார்த்தைகள் நியாப்படுத்தும்
வார்த்தைகளில் இல்லை மனம்.

20

வார்த்தை பலிபீடங்களில்
அர்த்தங்களை காவு கொடுத்து விடாதீர்!

21

பதற்றம் கொள்ளும்
தருணங்களும்
இருக்கத்தானே செய்கிறது.

22

சிலம்பின் பால்களில்
சிதறியது
முத்துக்களா? வாழ்க்கையா?

23

சீதையை
நெருப்பாலும் எரிக்கமுடியவில்லை.
சீதையை மட்டுமா?

24

பாஞ்சாலியின் சேலையை
உருவிய போது
உருவியது பாஞ்சாலி மானமல்ல!

25

இரவை விடியவைக்க
விழித்திருப்பதா?
தூங்குவதா?

26

நிம்மதி என்பது
இருளிலா? வெளிச்சத்திலா?

27

வருத்தங்களையும், கோபங்களையும்
சேகரிக்காதே.
குப்பைகள் எதற்கு?

28

எந்தக் கணக்கில்
எது சரியாயிருக்கிறது?
சரி என்பதொரு பாவனை.

29

நீளம் தாண்டிய எல்லோராலும்
உயரம் தாண்ட முடிகிறதா?
ஏன்? என்னால்?

30

வரிகளை நிரப்பு
அர்த்தங்களை அமர்த்து
யாரோ ஒருவன் நோபல் தருவான்.

31

அவனவனும், எப்போதாவது
ஒரு சமாதானத்திற்கு வரவேண்டியுள்ளது.
வேறு, என்ன செய்து தொலைப்பது?



32

நல்லது, நடக்கும் என்பது
நம்பிக்கை.
நடந்ததை
நல்லதென்று நினைத்துக்கொள்.

33

ஏதோ ஒரு தொந்தரவு
இருக்கத் தான் செய்யும்.
வாழ்க்கை வேண்டுமா?
மரணம் வேண்டுமா?

34

எளிதில் கடந்துபோ
கடக்க முடியவில்லையா?
கவிழ்ந்து விடுவாய்.

35

மஞ்சளில் தானே தொடங்குகிறோம்
அப்புறம் ஏன்
அசம்பாவிதங்கள்?

36

எது தூண்டுதல்?
எது இடையூறு?
வரையறுக்க முடியுமா?

37

எது தொல்லை?
தூக்கமா?
வேலையா?

38

அனுபவங்கள்
அனுமானங்கள்
செயநேர்த்திகள்
போதுமா?



39

போதவில்லை என்பது
பொருளின் அளவல்ல
மனசின் அளவு

40

முடிக்க வேண்டுமெனில்
எதையாவது சொல்லி
எதையாவது செய்து தான்
முடிக்க வேண்டும்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (10-Mar-18, 10:23 am)
பார்வை : 55

மேலே