தேர்தல் நோய்
தேர்தல் நோய் எங்கள் கிராமத்தையும் தாக்கியது...
கரைபுரண்டு வந்தன
கரைவேட்டிச் சட்டைகள்!
காலனைக் கண்ட
அதிர்ச்சியில் குரைத்தன
வீதி நாய்கள்!
நாளைய விடிவெள்ளியே...
வருக! வருக!
குருட்டு மக்களாய்
மீண்டும் இருட்டையே
வரவேற்றோம்!
கட்சிக்கொடி தோரணத்தில்
காக்கை உட்கார்ந்தால்...
கல்லெறிந்தோம்!
அது மீண்டும் வீழ்ந்தது
எங்கள் தலையில்!
வாக்காளர் மீன்களாய்
வாக்குறுதி தூண்டிலை
விழுங்கினோம்!
வெட்டப்படும் ஆடுகளாய்
இன்னும் பட்டிக்குள்ளேயே
அடைபட்டிருக்கும் அவலம்!
தலைவனுக்கு பட்டுச்சால்வை
போர்த்தினோம்!
காற்றில் பறந்தன
விவசாயிகளின் கோவணம்!
இலவசங்களின் வசீகரத்தில்
வீழ்ந்தோம்!
அடிப்படை வசதிகள்கூட
ஐந்தாண்டு திட்ட கனவுகளில்!
தாலிக்கு
தங்கம் வாங்கினோம்!
விற்றும் போதவில்லை
மது அழித்த கணவனின்
மருத்துவச் செலவிற்கு!
அரசியல் வியாதியின்
முடி உதிர்ந்த மண்டைக்குள்
பூந்தோட்ட மூளையை
யாசித்தோம்!
ஆனால்..,
அந்தக் கரசல் காட்டில்
முளைத்த கற்றாழையின்
முட்கள் தைத்தது
சாமானிய மக்களின்
வாழ்க்கையை!
புதிதாய் பூத்த
புரட்சி மலர்களை
அழித்தோம்!
காகிதப் பூவிற்குள்
வாசத்தை எதிர்பார்த்து
காத்துக்கிடக்கும்
நாசித்துவாரங்கள்!
உரிமைகளை விற்று
கல்லறைப் பத்திரங்கள்
வாங்கினோம்!
இன்று...
இறப்புச் சான்றிதழ்கூட
கையூட்டுப் பெற்றே
தரப்பட்டது!
இனி...
ஊருக்கு வெளியிலிருக்கும்
அய்யானரை
நம்பிப் பயனில்லை!
விழிப்புணர்வு தீ வளர்த்து
நாங்களே அழிக்கிறோம்
அரசியல் பேய்களை!!!!