உயிர்க் காதலே

உயிர்க் காதலே...!

கரையேது மில்லாக் கருணை யினாலே
உரைசெய்ய வாய்த்த உயர்செம் பொருளே!
நிறைவாய் நீள்விசும்பு நீர்த்துளி காற்றில்
மறைவாய் இலங்குதீ மண்ணுயிர்க் காதலே!

மண்ணுக்குள் மணியாக மருந்தாக, மனக்
கண்ணுக்குள் கருத்தாக கனிவாக, நெஞ்ச
எண்ணத்துள் எளிதாக புதிராக, உள்ளத்தின்
வண்ணத்தே எழுந்தேன் சுவைமிகுங் காதலே!

நீரோடும் சோலையதில் நிழல் கொடுத்தே
வேரோடு பரந்து விரிந்த பசுந் தருவுனதுத்
தாளோடு சேர்ந்தெழவே இயலா தயெனை
தயையோடு தழுவுகிற தனியாத காதலே!

யோகப் பிழம்பாகி யாக்கைத் தீயெழவே
போகப் பசியாற போசனம் செய்தொழிந்த
யாகப் பொருளான வேததிசை நான்கின்
தேகவரமாக பூத்தமலர் தாதுமென் காதலே!

காற்றிடை கூடிநல்லாசிக் கூட்டிடை குலவி
பற்றெனப் பாவிமிக பரிவுடனேமேவி துகில்
சுற்றெனச் சூடிசுகந்த நற்பொடி தூவிய மதி
முற்றுமுன் திருவடியணிந்த சுவைக்காதலே!

ஞானவெ ளியினிலே கானக்குயி லெனவே
ஊனநிலையறவே உயிர்பேணும் எழிலழகே
வேணுகான மெனநாளும் நீயும்நானுமிசைத்
தேனும் பாகுமென தோய்ந்த உயிர்க்காதலே!

எழுதியவர் : இராக. உதயசூரியன். (15-Mar-18, 3:15 am)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 159

மேலே