நிலா ஊர்

நிலா ஊர்

சாதிப் புயலில்
ஒதுக்கப்பட்டவர்கள்...
கரையுமின்றி
கறையுமின்றி
துடுப்புமின்றி
நகர்கிறது
ஓடமே குடிசையாக...
குடிசையே
ஓடமாக
நிலா காட்டும்
திசையில்
மரநிழலில்
சற்று
இளைப்பாறிட.

வெள்ளம் வரும்
போது
புலம் பெயர்வர்
ஆதாரமின்றி
ஆதாரும் இன்றி.

வறியவர்
என்றாலும்
விருந்தினருக்காக
விட்டு
வைத்திருக்கிறார்கள்
ஓடத்தை.

ஒவ்வொரு
தேர்தலின் போதும்
வாக்குறுதிகளை
கேட்டு கேட்டு
இவர்கள்
புளி போடாமல்
சமைக்கப் பழகி விட்டனர்.


விரைவாக
வளரும் நாடாக
நாடாள்பவர்கள்
பறை சாற்றிக்
கொண்டாலும்
பள்ளிக்கூடங்கள்
எல்லாம்
இவர்களுக்கு
இன்னமும்
நிலா ஊரே.

என்றாலும்
இவர்களை
இயற்கை
நச்சுக்காற்றின்றி
வைத்திருக்கிறது.
அல்லது
இயற்கையை
இவர்கள்
நச்சுக்கலக்காமல்
வைத்திருக்கிறார்கள்.


கல்வி கற்காத
இவர்கள்
கற்றுத்தந்த பாடம்
'வாழ்க்கை வாழ்வதற்கே'
என்பது
மட்டுமே.


- சாமி எழிலன்
16 03 2018

எழுதியவர் : சாமி எழிலன் (16-Mar-18, 12:52 pm)
சேர்த்தது : Saami Ezhilan
Tanglish : nila oor
பார்வை : 73

மேலே