சீக்ரம் வாப்பா

“சீக்ரம் வாப்பா”
மகளின் வாய்மொழிந்த
இந்த மந்திர சொற்கள்
வேதமாகி உபநிடதம்
உரைத்துக்கொண்டிருந்தது…
நெடுநாள் கழித்து
ஊர் திரும்பும்
தகப்பனின் செவிகளில்...!

விழித்திரையில் விழுந்த
காட்சிகளில் இலயித்திடாமல்
வசியப்பட்டு போயிருந்தது
தகப்பனின் உள்ளம் …
ஒரு மாய அலைவரிசையில்
மகள் புரிந்த
சேணிலை உணர்வாட்சியால் …!

விண்ணேறி முகிலுரசி
நீளம் தாண்டி
நிலம் கடக்க
வேகமாய் விரைந்தது
வானூர்தி…!

விமானப்பயணம் கூட
வில்வண்டி பயணமாகத்தான்
தெரிந்தது..
மகளை காணத்
தவித்துக்கொண்டிருந்த
அத்தகப்பனுக்கு…!

எத்தனையோ வலிமிகுந்த
பிரிவுகளையும்
நெகிழ்வான சந்திப்புகளையும்
பார்த்து பார்த்து
சலித்துப்போன
வானூர்தி நிலையத்திற்கு...
இந்த அப்பாவி தகப்பனின்
அவசரம் ஒரு பொருட்டாய்
தெரியவில்லை…

முதல் மழையா
முதல் தாய்ப்பாலா
முதல் குற்றால குளியலா
முதல் நிலாச்சோறா
எப்படி இருக்கும்
மகளின் முதல் ஸ்பரிசம்..!

கனவுகள் ஊற்றிக்கொண்டு
பிரகாசமாய்
எரிந்து கொண்டிருந்தது
அந்த தகப்பனின்
உயிர் தீபம்…!

சாலையைக் கடக்கும்
வரைகூட நிலைப்பதில்லை
பல ஆசைக்கனவுகளின்
ஆயுட்காலம்…
விதிமீறல்கள்
விளையாட்டாய் போன
இத்தேசத்தில் …!

அவசரமாய் பிரிந்துபோனது
கனவுகள் சுமந்த
அத்தகப்பனின் உயிர் …
எந்த அவசர ஊர்திக்கும்
அவசரம் தராமல்…

தூரத்தில் வீசப்பட்ட
அவன் அலைபேசி மட்டும்
கதறிக்கொண்டிருந்தது
“சீக்ரம் வாப்பா”
“சீக்ரம் வாப்பா” என்று…!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (16-Mar-18, 2:36 pm)
பார்வை : 85

மேலே