விழித்திருப்பவனின் கனவு
விழித்திருப்பவனின் கனவு
========================
வாருங்கள்,
உறக்கத்திலோ, உங்களில் பிறரிடமோ, பிதற்றியோ, மதுக்கோப்பையிலோ, எதிலோ என கிடைத்துவிட்டத் தருணம், புலம்பி, சுமை தொலைத்துக் கொண்டிருக்கும் கனவுகளை,
ஏக்கத்திற்குள் ஒளித்து வைத்துவிட்டு, எதையும் சொல்ல நாதியற்றவர்களிடம் அழைத்துப்போகிறேன் வாருங்கள்
அங்கு கனவுகளுடைய எல்லை எத்தனை விசாலமாக விரிந்து கிடக்கிறது தெரியுமா,
பூக்களுடைய கனவு எதுவாக இருக்கும்
ஒருநேர சோற்றை கனவாக்கிக் கொண்டிருக்கும் தெருமுனை யாசகன், சிறு குழந்தையாக இருக்கலாம், யாரோ இடும் முதல் ஐம்பது பைசாக்களில் தொடங்கும் அவனுடைய கனவு, இனி எத்தனை ஐம்பது பைசாக்களில் முடியும்
பிறருடைய அழகானக் கனவுகளை நம்மிடம் சொல்லும்போது
அதை நம்மால் அவர்களுக்குக் கொடுக்கமுடியுமென்றால்,
அந்தக் கனவு, எத்தனை சுவாரஸ்யமானதாக இருக்கும்
மனித சாலையில், பெருங்கனவொன்றை லட்சியமாக்கி, அங்கும் இங்குமாக திரிந்துகொண்டிருக்கிறவர்களின் இலக்கை கேட்டிருக்கிறோமா?
அதிகாலை, வீடுவீடாய் பேப்பர்ப்போடும் சிறுவன் முதல் நெடுஞ்சாலையில், குறுஞ்சாலைகளில், நகர நெரிசல்களில், போக்குவரத்து வாகனங்களை இடைமறித்து, எதையோ கூவிக் கூவி விற்றுக்கொண்டிருக்கும் முதியவர்கள் வரை, அப்படி என்னதான் கனவு ம்ம் ??
சற்று நேரமொதுக்கி, ஒரு பார்வையற்றவனின் கனவை, ஒரு ஊமையின் கனவை, ஒருமுதிர் கன்னியின், ஒரு முதிர் மங்கனின் கனவை, கேட்க முடிகிறதா? உணர முடிகிறதா? ரசிக்க முடிகிறதா?
பிளாட் பாரத்தில் பார்த்திருக்கலாம், எங்கோ பணி எடுத்துவிட்டு, கிடக்க இடமின்றி அடங்காத சிறு கந்தல் போர்வைக்குள்,மானம் மறைக்க முயன்றுத் தோற்று, கடுங்குளிரில் சுருண்டுக் கிடக்கும் சில அன்னாடங் காய்ச்சிகளின் கால்கள். அங்கே, நல்ல போர்வை ஒரு கனவு
மேட்டுப்பாளையம் ரோட்டுல தினசரி நாலு விபத்துகளேனும் நேரும், விபத்துக்குட்பட்டவர்களில் யாரோ, அதிக நாட்களாக, அதுவழி பயணப்பட்டிருப்பவராகவே இருக்கலாம். டூ வீலரில் கடக்கும்போது, ஒருவரையொருவர் பார்த்தும், பேசாமலும் கூட கடந்தவர்களாக இருக்கலாம். அடிப்பட்டு விழுந்தவருடைய
மூச்சுத் துடிப்பின் கடைசிக் கனவு எதுவாக இருக்கும் ??
இன்னும் முடியாத கடனின், கடமையின் கனவாக அது இருக்கலாம்.
========================================================
விளையாடிய இடத்தில்
குழந்தைகளுக்குள் சண்டை ஏற்பட்டுவிட்டது
அதைப்பெரிது படுத்திக்கொண்டு
பேசாமல் இருக்கிறான்
பக்கத்து வீட்டுக்காரன்
போன வருஷ திருவிழாவில்
ஒன்றாக கூடியிருந்தோம்
இதோ இந்த வருடம் திருவிழா
அடுத்த வாரம் வருது
உறவினர்களை அழைத்துவிட்டான்
எங்களுடன்
இன்னும் பேசவில்லை
இந்த திருவிழா மூலமாகவேனும்
இணைந்துவிடலாம்
என்றிருந்தேன்
எப்போது பேசுவார்களோ ம்ம்
அம்மாவோ அப்பாவோ கனவில் வந்ததாகச் சொல்லி
ஒவ்வொரு அழைப்புகளின்போதெல்லாம்
எதையாவது யோசித்து
அக்கா அழுவா
நீ அழுறதா இருந்தா
இனி நான் உன்கூட பேசமாட்டேன்னு
அவகிட்ட சொல்லிருப்பேன்
எனக்குத் தெரியும்
எவ்வளவுதான் பேசினாலும்
அந்த வார்த்தைகள்
அவளை ஆறுதல் படுத்தப்போவதில்லை
போன முறை அழைத்தபோது
அம்மாவைப்பற்றிய
சில குறிப்புகள் சொல்லியிருந்தாள்
வாசப்படியில உக்காந்த்துக்கிட்டு
பழைய நியூஸ் பேப்பரில்
எதையோ கிறுக்கிக் கொண்டிருக்கிறாள்
நான் பற் துலக்கிக்கொண்டே
வாசலைக் கடக்கையில்
என்னம்மா பண்ற ன்னு
தலையில் அடித்தவாறு
சிரித்துக்கொண்டே கேலி செய்கிறேன்
அதற்கு
எவ்விதமான
எதிர் உணர்வும் இல்லாமல்
""இல்ல நேத்து கொரியர் காரன் வந்திருந்தான்
பார்சலைக் கொடுத்துட்டு
டெலிவரி பேப்பர்ல
கையெழுத்துக்கேட்டான்
அதான் கைய்யெழுத்து போட பழகிட்டிருக்கேன் ன்னு"
கொஞ்சமா சிரிச்சுக்கிட்டே
வெள்ளந்தியாக சொல்லும்போது
சொல்ல நினைத்த எதையும்
யாரிடமேனும் சொல்லியிருக்கலாம்
எதையுமே சொல்லாமல்
வாழும்வரை
மௌனமாகவே வாழ்ந்துவிட்டு
ஒரு நிச்சலனத்தில்
எல்லோரையும்
ஆழித் துயரில் அடித்துக் கிடத்திவிட்டு
எங்கேயோ
அதுலோகம் சென்றவளுடைய
உணர்வுகளை, கனவுகளைப்பற்றி
அவள் தோழிகளிடம்
கேட்டுக்கொண்டிருக்கிறேன்
மனைவியின், காதலிகளின், நண்பர்களின்,
அம்மாக்களுடைய
குரல்களைக் கேட்கிறபோதெல்லாம்
அவளுடையக் குரல்
இப்படித்தான் இருக்குமோ என்று
நினைத்து
ஏதும் பேசாமல் விலகிக் கொள்கிறேன்
நத்தைக்கூடுபோல்
போகின்றவிடமெல்லாம் சுமந்து போகிற
என் கனவை கேட்டால்,
என்ன சொல்லுவார்கள் அதை இரசிப்பவர்கள்
===========================================
இப்படி இப்படி,
விதவிதமான கனவுகளுடன்
எனக்கொரு கனவு இருந்தது,
கேட்டீர்களானால், எல்லோரும் சிரிக்கின்ற கனவு அது
=================================================
நீலம் எனக்கொரு மிகவும்பிடித்த கனவு
நீலக்கடல் விளிம்பு,
ஒதுங்கிய பாறைகளில்
வேகமாக அறைந்து திரும்பும்
இரவின் நீல அலைகள்,
நுரைக் குமிழிகள் அடைப்பட்ட மணற்குழி,
சிப்பிகளை
அதுசுமந்து போகும் சிறுநண்டுகள்
எத்தனை அழகு
இரசித்துக் கொண்டிருக்கிறேன்
முக்காலங்களிலும்
எதேதோவென
என் மறந்து தொடரும் புதிய கனவுகள்
கடலோடங்களோடு
ஆக்கிரமிக்கின்றன
தொலை தூரத்தில்
சிறுவர்கள்
பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள்
அன்னார்ந்து
வானம் பார்க்கிறேன்
திசை அறியாது
எங்கோ பயணப்படும் அறுந்த காற்றாடிகள்,
உயரப்பறக்கும் வானம்பாடிகள்,
கடலைவிட
பறந்து கிடக்கிறது நீலவானம்
நனவோடையா கனவோடையா தெரியவில்லை
இன்னும் சற்று நேரத்தில்
நீலத்தை அடர்த்தி செய்யும்
நிலவோடை,
கருத்த இரவு,
அவ்வப்போது
சிமிட்டி மறையும் மினுக்கூட்டங்கள் என
எல்லாம் வந்துவிடும்
இந்தச் சூழலை,
விடியலுக்கென
திரும்புகின்ற நிமிடங்களை,
எதையாவது யோசித்துத் தாமதிக்கலாம்
ஒரு நினைவுக் குரலொன்றின் கடிதம் வாசிக்கிறேன்
அடைத்துவைத்த வார்ட்ரோபை
எப்போது திறந்தாலும்
அப்போதெல்லாம்
நறும்பும்
புத்தாடை வாசம்போல
அவனுடைய
குரலால்
சிரிப்பால்
பேச்சுகளால் மயங்கிக்கிடக்கிறபோது
கிறக்கத்தை
கிச்சுகிச்சு மூட்டி எழுப்பிவிடும்
நகைச்சுவை
தெரிந்திருக்கவேண்டும்
நீலவிழிகளும், கூரிய பார்வையும்
வேண்டும்,
அணைக்கும்போது
ஈர்க்கொண்ட மார்பினிடை
முகம் சாயும் அளவு,
அவனின் உயரம் வேண்டும்
நேர்த்தியாக
உடை அணிதல் வேண்டும்
சுருள் கேசமும்
அடர் மீசையும் வேண்டும்
என
இன்னும்
என்னெல்லாமோ
இங்குதானே
அவள் நேசிக்கின்றவனை
அவள் வாழ்க்கையின் கனவை சொல்லிக் கொண்டிருந்தாள்
கொஞ்சம் அன்பு குடுடா ன்னு கேட்கும்
அவளோட
அந்த ஆசைகளுக்கு முன்னால
இதோ இப்போதும்
""விழுந்து தொலைகிறேன்""
நேருதலுக்குப் பேரு
இறந்த கனவுன்னு சொல்லிக்கலாமா
நேரமாகிட்டு
டியூஷன் முடிஞ்சிருக்கும்
குழந்தைகள்
ஆளுக்கொரு பக்கம்
என் கைகளைப் பிடித்துக்கொண்டதால்
அவள் கேட்ட எதையும்
வாங்கிட்டுப்போக முடியல
இனி இவர்கள் வகை
இன்னைக்கு மாடு கண்ணு போடுமுன்னு பாட்டி சொன்னாளே
அதை பார்க்கணும்பா
கொட்டகைக்கு உங்ககூட நாங்களும் வாரோம்ப்பா
ஹாஹ் ஹாஹ் ஹாஹ் சரி சாமி
அங்க்க்க்க அந்த கரண்டு கம்பத்துல
பட்டம் ஒண்ணு
சிக்கிக் கெடந்துச்சே பா
அத யாரு எடுத்துட்டு போயிருப்பாங்க
தெரியலையேடா
மூஸா பூதம் வச்சிருக்கிற
பென்சில் பாக்ஸ் வாங்கணும்
கார்த்திக்கு
சாதிகாக்கு
எல்லோருக்கும் ஒவ்வொண்ணு குடுக்கணும்
வெண்ணிலாக்கு மட்டும்
குடுக்கவேக் கூடாது
அவ அன்னைக்கு
தக்ஷினோட ரெயின் கோட்டுல கிறுக்கி வச்சுட்டா
அப்படி சொல்லக்கூடாது தங்கங்களா அவளும் பிரென்ட் தானே
க்ளாஸ் ரூம் பின்னாடி ஒரு நாய்க்குட்டி
கால் அடிப்பட்டுக் கெடந்துச்சு
அதைக்காணோம்
ஜன்னல் வழியா எட்டி எட்டிப் பார்த்தும் காணோம்
எங்க போயிருக்கும்
யாரு கொண்டு போயிருப்பா ப்பா
நம்ம ஒரு பப்பி வாங்கிக்கலாம் சாமி
பூவிக்கிற ராசாத்தி பாட்டிக்கு வீடில்லப்பா
மழை அடிச்சா எங்க போவாங்க
பாவம்
நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப்போலாமா பா
சரி சாமி கூட்டிக்கிட்டுப்போலாம்
தெனோ எங்கள ஸ்கூல் பஸ் ஏத்தி விடுவாருல்ல
பாலா அண்ணா
அவருக்கு பஸ் கதவை சாத்துறப்போ கை சிக்கிடுச்சு
கட்ட விரல்ல அடி, இப்போ எப்படி இருக்காரோ
நாளைக்கு விசாரிக்கலாம் டா கண்ணுகளா
அய்யய்யோ
ஆக்டிவிட்டி பண்ணனும்பா :/ சார்ட் வாங்கல,
மிதுனா கடை பூட்டிடும்ப்பா, சீக்கிரம் போணும்பா
இப்போ வாங்கிக்கலாம் சாமி
மிதுனா வீட்ல
ஸ்விம்மிங் பூல் இருக்குப்பா
நம்ம வீட்ல எப்போப்பா கட்டப்போறோம்
கட்டிக்கலாம் சாமி
குழந்தைகளோட கனவுகளுக்கிடையே
என் அன்பினால் உறைப்பட்டுக் கிடக்கிறான், அணைத்துருக்கும்
ஒரு நாள், ஒரு இரவு என அவன் கனவுகளை எல்லாம், ஒரு சிகரெட்டோடும், ஒரு பியர் பாட்டிலோடும், என்னுடன் மட்டுமே பகிரணும்னு காத்துக்கிட்டிருக்கான், ""தசரதன் ராஜி"". விலையிடமுடியாத அவன் கனவுகள் விரியும் முன்ன, அவனுக்கான நேரமும் என் கனவு
கனவுகள் - கால சுழற்சி
காதலின் கனவு
காமத்தின் கனவு
கல்யாணக் கனவு
கடமையின் கனவு
இறந்த கனவு
தொடரும் கனவு
புதிய கனவு
அப்பாவின் கனவு
அம்மாவின் கனவு
பிள்ளைகளின் கனவு
நண்பனின் கனவு
சுற்றத்தின் கனவு
கனவுகள் முக்காலங்களால் சுழலப்பட்ட கால சுழற்சி
""நேற்று காலை,
குளிக்கப்போகும் முன்பு
உலர்ந்த தேங்காய் எண்ணெய் உணர்த்தியது
இன்னும் குளிர்க்காலம்
முடியவில்லை என்பதை ,
நாளையாவது உருகுமா என்றுப் பார்க்கிறேன் ""
கனவுகள் - No End