வனம்
வனம்
======
அடர்ந்திருந்தால்
கண்களுக்கு யௌவனம்.
நிலத்தின் நீர்த்தேவை போக்க
இயற்கை வகுத்துள்ள
வரைபடங்கள் அடங்கிய ஆவணம்
வன தாயின் நீர் மார்புகள்
சுரத்தலில் காக்கப்படுகிறது
உயிர்களனைத்தினதும் சீவனம்,
நீர் நூல்கொண்டு
நதி துணிகள் நெய்யாத
வன நெசவாளிகள் இல்லையெனில்
நாம் உடுத்துவதற்கும் இல்லை கோவணம்.
சிறைபிடிக்கப்பட்ட சீதை
அசோக வனத்தில் சோகப்பட்டதாய்
பூவனமென்னும் பெயரில்
முற்றத்திலும் ,மொட்டைமாடிகளிலும்
குறுகிப்போய் கண்கலங்கும் வனங்கள்
தன் ஆதி நிலைக்கு
அடியெடுத்துவைக்கும் காலமொன்றில்
மறுபடியும் சுத்தக் காற்றை சுவாசிக்கும்
இந்த புவனம்.
கோடரி உற்பத்தியாளர்களை
ஊக்குவிக்கும் அவசரத்தில்
சிதைகின்ற வனங்களிலும்
செலுத்தவேண்டும் கவனம்.
வனம் புவனத்தின் தாய்.
வசந்தத்தின் பாய்.
கட்டாந்தரையாய்க் கிடக்கும்
வன தாயை அரவணைக்கா நீங்கள்
அவளின் மேனியில்காயங்கள்
செய்யாதிருந்தாலே போதும்
வசந்தத்தால் தனக்குத்தானே
பாய் நெய்து நம்மையும் அதில்
உறங்கச் செய்வாள்.
வாருங்கள் வனங்களை நேசிப்போம்
அதன் வாசத்தை வாசிப்போம்,
வாழ்க்கையை யௌவனமாக்குவோம்.
=====
மெய்யன் நடராஜ்
*உலக வனநாள் இன்று.