வன லீலை

இந்திய வரலாறு குறித்து டி.டி. கோசாம்பி அளிக்கும் சித்தரிப்பை படிக்கும்போது மெதுவாக நம் மனதில் ஒரு சித்திரம் உருவாகி வரும். இந்திய வரலாறென்பது வனத்திற்கும் பிற நிலப்பகுதிகளுக்கும் இடையேயான தொடர்ந்த போராட்டம் தான். கோசாம்பி இதை ஒரு கொள்கை போலவே முன்வைக்கிறார். அது செவ்வியல் மார்க்சியத்தின் கொள்கை. சேகரப்பண்பாடுX உற்பத்திப்பண்பாடு, மேய்ச்சல் பண்பாடுX வேளாண் பண்பாடு என மார்க்ஸியம் எப்போதுமே இருமைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

மழைக்காடுகள் நிரம்பிய ஒரு பெரும் நிலப்பரப்பு கோசாம்பி காட்டும் அதிபுராதன இந்தியா. அங்கு வனத்தாவரங்கள் போல, மிருகங்கள் போல பரஸ்பரத் தொடர்பற்ற பழங்குடிச் சமூகங்கள் வாழ்கின்றன. உயிர் வாழ்தல், பரவிப் பெருகுதல் ஆகியவற்றுக்காக அவை காலப்போக்கில் தங்களுக்குள் போரிட ஆரம்பித்தன. போர் மூலம் உறவாடிக் கொண்டு தங்களை விருத்தி செய்து கொண்டன.

வனம் நடுவே வனத்தின் ஒரு பகுதியாக இருந்த `ஊர்’ வளர்ந்து நாடுகளாகியது, நகரங்களாகியது. நகரங்களும் சாம்ராஜ்யங்களும் மேலும் மேலும் உக்கிரமாக வனத்துடன் போர் புரிந்தன. வனம் இயற்கையின் ஆயுதங்களுடன் களத்தில் இருந்தது. நகரம் கலாச்சாரத்தின் ஆயுதங்களுடன் . தேவ அசுர யுத்தங்களையும், ராமாயண மகாபாரதக் கதைகளில் வரும் பெரும் போர்களையும் எல்லாம் கோசாம்பி இப்படித்தான் புரிந்து கொள்கிறார்.

யோசிக்கப் புகுந்தால் இம்மனச்சித்திரத்தை முழுமைப்படுத்தும் தகவல்கள் நம்முன் வந்து குவிந்தபடியே இருக்கும். நமது நாடோடிக் கதைகளில் பாதி விறகுவெட்டிகளின் கதைகள் தான். நமது கதாபாத்திரங்கள் ஊரில் இருந்து (மன்னனாலோ கொடுமைக்கார சித்தியாலோ) புறக்கணிக்கப்படும்போது காட்டுக்குத்தான் ஓடுகின்றன. துறவிகள் `அனைத்தை’யும் துறந்து காட்டுக்குச் செல்கிறார்கள். மன்னர்கள் காட்டுக்கு வேட்டைக்குச் செல்கிறார்கள். `காடழித்து நிலம் பெருக்கி’ வளம் சேர்க்கிறார்கள்.

கலாச்சாரம் பகல் என்றால் காடுதான் இரவு. வாழ்க்கைக்கு எதிரானது அது; எனவே சுடுகாடும்கூட. மனிதன் என்பதற்கு நேர் எதிரான சொல்லாக நம் மனதில் காட்டுமிராண்டி என்ற சொல் உறைந்துள்ளது.’நாடா கொன்றோ காடா கொன்றோ’ என்கிறாள் அவ்வை. நிலத்துக்கு நலம் சேர்ப்பது மக்களே என்கிறாள்.

அதே சமயம் `வனவளம்’ தான் நமது நகரங்களை போஷித்து வந்துள்ளது. மலையிலிருந்து வரும் அருவி முதல் அகிலும் சந்தனமும் வரை நகரங்களை நோக்கிப் பெய்தபடியே இருந்தாக வேண்டியுள்ளது. காட்டிலிருந்து ஒரு தொப்புள் கொடி நகரத்தை வந்து பிணைத்துக் கொண்டு அதனூடாக உதிரமும் அமுதமும் தந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பெருங்காவியங்களில் பெரும்பாலானவை காடும் நாடும் உரையாடியதன் விளைவுகள். ஆதி காவியங்கள் முதல் `பிருகத் கதா’ வரை இதற்கான ஐதீகப் பின்புலத்துடன்தான் நம்முன் உள்ளன.

ஆனால், காடு நோக்கித் திரும்பும் பார்வை தொழிற்புரட்சியின் விளைவான நகர்மயமாக்கம் இந்தியாவை தழுவிக்கொண்ட பிறகுதான் தொடங்கியது. காடழிவையும் நகர்மயமாதலையும் பல கோணங்களில் அணுகும் நாவல்கள் இந்திய மொழிகளில் உள்ளன. காட்டை அழித்து வேளாண் நிலத்தை உருவாக்குவதை இயற்கைக்கும் மனிதனுக்குமான போராட்டமாகச் சித்தரிக்கும் நாவல்கள் ஒருவகை. எஸ்.கெ.பொற்றெக்காட்டின் ‘விஷக்கன்னி’ [மலையாளம்] சிறந்த உதாரணம். காட்டை ஒரு சொத்தாக , மூலதனமாக மட்டுமே பார்க்கும் இப்பார்வையையே மகாஸ்வேதா தேவியின் `காட்டின் உரிமை’ நாவலிலும் காண்கிறோம். காடு எளிய பழங்குடிகளிடமிருந்து பிடுங்கப்படுவதை சித்தரிக்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் காலகட்டத்தில் எழுதப்பட்ட விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் `ஆரண்யக்’ இதிலிருந்து அலாதியாக வேறுபட்டு நிற்கும் பெரும் படைப்பு. தமிழில் த.நா. குமாரசாமியால் `வனவாசி’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டு 1968ல் சாகித்ய அகாதமியால் பிரசுரிக்கப்பட்ட இப்புதினம் பிறகு மறுபதிப்பு வராவிட்டாலும் தமிழ்ச் சூழலால் கூர்ந்து படிக்கப்பட்டு உள்வாங்கப்பட்ட ஒன்று.



1938ல் வங்க மொழியில் வெளியான இந்நாவலை அக்கால கட்டத்தின் பொதுவான கருத்தியல் உத்வேகங்களுடன் ஒப்பிட்டால் பெரும் வியப்புதான் ஏற்படும். அது இந்திய `நவீனமய’ மாதலின் காலகட்டம். மதிப்பீடுகள் மாற்றியமைக்கப்பட்டன. மதம் உருக்கி மறுவார்ப்பு செய்யப்பட்டது. கிராமங்கள், சாலைகள் மூலம் இணைக்கப்பட்டன. தகவல் தொடர்பு ஊடகங்கள் உருவாயின. ஒருங்கிணைந்த மைய அரசு உருவாயிற்று. இயந்திர யுகம் மீது அலாதியான காதல் பிறந்த காலம். இயந்திரம் மனிதனை மீட்கும் என்ற நம்பிக்கை மாற்று மதம் போல பரவிய காலகட்டம். சகல சக்தியாலும் இயற்கையை சுரண்டுவதே கலாச்சாரத்தின் இயல்பான இயங்குமுறை என்ற ஐரோப்பிய தொழில்யுக நம்பிக்கை இங்கு வேரூன்றியது அப்போது.

நவீனயுக மதம் (ராஜா ராம் மோகன் ராய்) நவீன கலைகள் (தேவேந்திர நாத் தாகூர்) நவீன இலக்கியம் (பங்கிம் சந்திர சட்டர்ஜி) நவீனப் பொருளாதாரம் (மகாலானோபிஸ்) என்று நவீன யுகத்தின் எல்லா முகங்களிலும் முக்கிய ஆளுமைகள் உருவானது வங்க மண்ணில்தான். மொத்த கலாச்சாரமே ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி பதற்றத்துடன் உத்வேகத்துடன் முன்னேறியபோது நேர் எதிராக திரும்பி நடந்தது. இந்நாவல். ஆரண்யக் `ஊரில்’ இருந்து `காட்டுக்கு’ செல்பவனின் கதை. ]

ஆரண்யக் 1932 முதல் பிரபாஷி என்ற வங்க இதழில் தொடராக வெளிவந்தது. பிகார் அருகே உள்ள பாகல்பூர் பகுதி காடுகளில் 1020களில் கொஞ்சநாள் விபூதி பூஷண் பந்த்யோபாத்யாய பணியாற்றினார். அந்நினைவுகள் அவரை தொடரவே இந்நாவலை அவர் எழுதினார். கதைநடக்கும் காலகட்டத்தில் இந்தியாவின் பெரும்பகுதி காடுகளாக இருந்தது. காடுகளை அழிப்பது முன்னேற்றமாக கருதப்பட்டு அந்த சிந்தனை பிரிட்டிஷாரால் இந்திய மனத்திலும் கட்டமைக்கப்பட்டது. 1970 வரைக்கும்கூட எந்தவித மனச்சங்கடமும் இல்லாமல் இந்திய அரசும் சமூகமும் தேவைக்கெல்லாம் காடுகளை அழித்தனர். இந்தியக்காடுகளில் 70 சதவீதம் இந்த ஐம்பது வருடங்களில் அழிந்து விட்டன என்பது வரலாறு. வனவாசி அந்த அழிவின் சித்திரம்

விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய இந்தியாவின் மாபெரும் நாவலாசிரியர்களில் ஒருவர். 1894ல் பிறந்த 1950ல் மறைந்தார். அவரது சுயசரிதைத்தன்மை கொண்ட நாவலான பாதேர் பாஞ்சாலி மற்றும் அதன் நீட்சியான அபராஜிதோ ஆகியவை சத்யஜித் ரேயால் மூன்று படங்களாக எடுக்கப்பட்டு உலகப்புகழ்பெற்றன. [பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார்] திரைப்படங்களை விட பல மடங்கு அழகியவை அவரது நாவல்கள்.தமிழில் பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ ஆகியவற்றை ஆர்.ஷண்முகசுந்தரம், த.நா.குமாரசாமி ஆகியோர் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.

மகானந்த பந்த்யோபாத்யாய என்ற ஏழை பௌராணிகரின் மகனாக பிறந்த விபூதிபூஷன் கல்கத்தாவில் சுரேந்திரநாத் கல்லூரியில் இளங்கலை பயின்றார். இளவயதில் கௌரிதேவி என்ற பெண்ணை மணாந்தார். குழந்தைப்பேறின்போது கௌரிதேவி மரணம்டைந்தார். அது விபூதிபூஷனின் பல கதைகளில் ஆழமான அகக்கொந்தளிப்பாக வெளிப்படுகிறது.
அதன்பின் ரமா சட்டோபாத்யாய என்ற பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஒரே மகன், தாராதாஸ். ஆசிரியராகவும் தோட்டநிர்வாகியாகவும் பணியாற்றிய விபூதிபூஷன் காட்டின்மேல் அபாரமான காதல்கொண்டிருந்தார். தினமும் பல கிலோமீட்டர் நடப்பது அவரது வழக்கம். செடிகள் பறவைகள் குறித்து மிகவிரிவான குறிப்புகள் எழுதி வைத்திருந்தார்.



*

வனவாசி நாவலின் கட்டமைப்பு இதன் அடிப்படைத் தரிசனத்துக்கு மிக உவப்பானதாக உள்ளது. நகரத்தில் குமாஸ்தா வாழ்வு வாழும் ஒருவன் தன் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வங்காள – பிகார் எல்லையில் உள்ள வனப்பிரதேசமொன்றுக்குச் சென்று தங்கியிருந்த நாட்களை நினைவுகூரும் விதமாக அல்லது தொடர்ந்து அந்நினைவுகள் அவனில் மீண்டபடியே இருக்கும் விதமாக, இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. வனம் நம்முள் உறையும் ஓரு பழைய `ஞாபகம்’ என்று இந்நாவல் கூறுகிறது போலும்.

கதை சொல்லியான சத்யாசரன் லுப்துலியா என்ற வனப்பகுதிக்கு ஒரு ஜமீன்தாரின் குமாஸ்தாவாக செல்ல நேர்கிறது. அக்காடு முழுக்க அவருக்குச் சொந்தமானது. அதை விவசாய நிலமாக மாற்றும் பொருட்டு விவசாயிகளுக்கு குத்தகைக்குப் பங்கிட்டு கொடுப்பதே அவன் பணி. உண்மையில் `வனவாசி’ காட்டுவது படிப்படியாக கையேறப்பட்டு அழிக்கப்படும் வனத்தின் சித்திரத்தையேயாகும். பிற்பாடு ஆழமான குற்றஉணர்வுடன் கதைசொல்லி நினைவு கூரும் துயரம் படர்ந்த கானகமே நாம் காண்பது. ‘என்னுடைய கைகளில் குருதி படிந்திருக்கிறது. இயற்கையின் ஆடரங்கை நான் என் கைகளாலேயே அழித்தேன்’ என்று அவன் பின்னாளில் எண்ணிக்கொள்கிறான்.

முதலில் காடு சத்யாசரனுக்கு முற்றிலும்பிடிக்கவில்லை. முதலில் அவன் அறிவது அதன் லௌகீகமான சிக்கல்களை. எங்கும் நடந்தே செல்லவேண்டும்.சரியான வழிகள் இல்லை. காட்டுமிருகங்களின் ஆபத்தும் உண்டு. அந்த இடத்தில் மனம் நிலைத்ததும் அவனை உக்கிரமான தனிமை வந்து மூடிக்கொள்கிறது. ‘தனிமை என் நெஞ்சை கல்லாக இறுகவைத்தது’ என்கிறான். பல்லாயிரம் சதுரகிலோமீட்டருக்கு விரிந்து பரந்து பல்லாயிரம் பல லட்சம் உயிக்குலங்களுடன் துலங்கும் காடு அவனுக்கு துணையாக ஆகவில்லை என்ற வசீகரமான மர்மத்தில் இருந்தே வனவாசி நம்மை சிந்திக்கச் செய்கிறது

ஏனென்றால் அவன் நகர மனிதன். அவன் என்பது அவனுடைய பிரக்ஞைதான். அது நகரின் காட்சிகளில், உறவுகளில், சிந்தனைகளில், கலைகளில் இருந்து வடிவமைக்கப்பட்டது. காட்டில் அவந் அன்னியனாகவே இருக்கிறான். காட்டை அவனால் வேடிக்கை பார்க்கவே முடிகிறது. ஆனால் சிலநாட்களில் காட்டின்வேடிக்கையும் பழகிப்போகிறது. காடு மிகச்சாதாரணமாக ,மிக மெல்ல, தன் மகத்தான மௌனத்துடன் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அவன் சலிப்புற்ற சாட்சியாக அந்த மலைக்கட்டிடத்தில் இருக்கிறான்

இன்னும் சிலநாட்களில் காடு அவனுக்குள் நுழைகிறது. அவனுடைய மனம் அறியாமலேயே ஆழ்மனம் காட்டுடன் தன்னை இணைத்துக்கொண்டுவிட்டது. அவன் வனவாசியாக ஆகிவிட்டதை அவன் அறிவதே இல்லை. இப்போது அவன் அங்கே இருக்கவில்லை, அங்கே வாழ ஆரம்பிக்க்கிறான். அவனது அந்த பரிணாமத்தை நாம் உணர்வதே இந்நாவலின் கதைபோக்கு. பின்னர் அவன் காட்டைவிட்டு வெளியே செல்லநேர்கிறது. இப்போது நகரத்தில் அவன் ஒன்ற முடியவில்லை. அவன் அகத்தில் காடு இருக்கிறது.

வனவாசி காட்டுவது ஒரே ஒரு மழைக்காலம் கொண்ட நடுநிலக் காடு. அதன் மடியில் கதைசொல்லி வந்திறங்கும்போது அது பூத்து மலர்ந்து அவனை எதிர்கொள்கிறது. நகரவாசியின் மன விலக்கத்துடன் வந்து சேரும் கதாநாயகனை காடு மெல்ல மெல்ல தன் பெரும் அழகுத் தோற்றத்தைக் காட்டி வசீகரித்து மடியில் அமர்த்திக் கொள்கிறது.

`ஆரண்யக்’ தாவரங்களினாலான நாவல். பலவகையான செடிகளும், பூக்களும் அதில் தங்கள் போக்கில் வளர்ந்து பூத்து மறைகின்றன. மழைக்காட்டின் பயங்கரம் இல்லாத வசீகரமான எளிய காடு இது. அட்டை இல்லாத நூலகப்பதிப்பாக இதை வாசித்த வண்ணதாசன் இதன் அட்டையைக் கண்டபோது அதுபச்சையாக இல்லாதது கண்டு மனமுடைந்ததாக சொல்லியிருக்கிறார்.

இந்நாவலில் கால நகர்வு வனத்தில் நிகழும் பருவ மாற்றங்களினூடாக சித்தரிக்கப்படுவதுதான் இதன் உச்சகட்ட காவியத் தன்மை. பசுமை நிரம்பிய காடு வரண்டு உலர்ந்து கருகி காட்டுத்தீ படர்ந்து பின் புதுமழையில் தளிர்த்து அடரும் காட்சி மனித விழிகள் முன் ஒரு பிரபஞ்ச சலனமே நிகழ்ந்து விடுவதுபோல பிரமை கூட்டுகிறது.

நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் கீழே, இருண்டு சூழ்ந்து விரிந்த காட்டின் ஒலிகளை கேட்டபடி குதிரைமீது போகும் கதாநாயகனின் சித்திரம் ஒரு கனவு போல நாவலில் பலமுறை வந்து நம் மனதில் ஆழப் பதிகிறது. காடு அவன் முன் காட்சிவெளியாக நிகழ்கிறது. நிலவில், அதிகாலையில், எரியும் மதியத்தில் , சிவந்தணையும் அந்தியில் புதிய தோற்றங்களுடன் வந்தபடியே இருக்கிறது. ஆரண்யக் அடிப்படையில் ஒரு வனதரிசனம்.

ஆரண்யத்தில் மனிதர்கள் நிறையவே வருகிறார்கள். ஆனால், அவர்கள் வெறும் மனிதர்கள்தான், கதாபாத்திரங்களல்ல. கதாபாத்திரங்களின் அகமோதல், பரிணாம வளர்ச்சி அவற்றுக்கு இல்லை. அவர்கள் அந்த இயற்கையின் உள்ளே பிற உயிர்களைப் போல உயிர் வாழ்வதற்காக ஒவ்வொரு கணமும் கடுமையாக உழைக்கிறார்கள்.

சத்யாசரனின் வேலைஎன்பது காட்டுநிலத்தை குடியானவர்களுக்கு பிரித்துக் கொடுத்து அவர்களை காட்டை அழித்து விவசாயம்செய்யவைத்து குத்தகையை வாங்கி ஜமீன்தாருக்குக் கொடுப்பது. ஒவ்வொரு குடியானவரும் ஒவ்வொரு வகை. இரவுபகலாக பக்தியில் மூழ்கி பட்டினிகிடக்கும் ராஜூ பனாரே ஓர் உதாரணம். கதைத்தொடர்ச்சிக்காக முயலாமல் நிகழ்ச்சிகளை கிட்டத்தட்ட ஒரு தினவிவரணை போல சொல்லிச்செல்கிறார் விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய. கதாபாத்திரங்கள் எளியமனிதர்கள்.

விதிவிலக்கு இரண்டு கதாபாத்திரங்கள். காடு முழுக்க பலவிதமான பூச்செடிகள் கொண்டு வந்து நட்டு வைப்பது தவிர வேறெதிலும் நாட்டமில்லாத யுகல பிரசாத் என்ற பித்தன். நடனமாடுவது தவிர வேறு எதுவும் அறியாத சிறுவனான தாதுரியா என்ற இடையச் சிறுவன். இவர்களையும் அதே இயற்கையின் மடியில் இயல்பாக உலவவிட்டு ஒரு கவித்துவமான முரண் சித்திரத்தை விபூதி பூஷண் உருவாக்குகிறார்.

யுகலபிரசாத், தாதுரியா இருவரும் இரு எல்லைகள். காட்டை இருவகையில் உள்வாங்கிக் கொள்பவர்கள். யுகலபிரசாத் படித்தவர், வங்காளி. நாகரீகம் அறிந்தவர். இந்தக்காடு அழியும் என அவர் அறிவார் அவர் காட்டுக்குள் வாழவில்லை, காட்டை கண்டபடி காட்டுக்கு வெளியே வாழ்கிறார். அவருக்கு காடு கவிதையாக இசையாக அனுபவமாகலாம். காட்டுக்குள் அவர் பரப்பும் மலர்ச்செடிகள் அவருக்கும் காட்டுக்குமான காதல் போன்றது. பின்னர் காட்டுக்குள் குதிரையில் செல்லும் சத்யாசரன் காடெங்கும் யுகலபிரசாத் நட்ட செடிகள் மண்டிப்பரந்திருப்பதைக் காண்கிறான். அவரது காதலாக காட்டில் பரவிய அந்த மலர்வெளி அவருக்கும் காட்டுக்கும் இடையேயான அகத்தொலைவுக்கும் சான்றுதான்.

ஆனால் தாதுரியா அப்படி இல்லை. அவனும் காடும் வேறல்ல. எந்தக்காட்டுமிருகமும் காட்டின் எதிர்காலம் பற்றி எண்ணுவதில்லை. காட்டை பேணவும் வளர்க்கவும் முனவதில்லை. காடு அதன் தாய்மண். மூச்சுக்காற்று. உணவு. கனவு. அது காட்டில் வாழ்ந்து காட்டில் மறைகிறது. தாதுரியாவின் உடல் வழியாக செல்லும் நடனம் காட்டுக்குள் காற்று நுழையும்போது மரங்கள் ஆடும் நடனமேதான். மிருகங்களுக்குள் காதல் நுழையும்போது நிகழும் நடனம்தான். அது காட்டின் நடனம். தன்னை ஒரு குதூகலமாக அவனூடாக வெளிப்படுத்துகிறது காடு.

ஆனால் காடு அது மட்டும் அல்ல. சென்ற உடனேயே அதைக் கண்டுகொள்கிறான் சத்யாசரன். சோறுபொங்கும்போது அந்த மணத்தை உணர்ந்தே சோறு கிடைக்கும் என்று நடந்து வந்து சேரும் மக்கள். காட்டின் விளையாட்டில் பட்டினி இருந்துகொண்டே இருக்கிறது. உயிர்கள் அனைத்துமே பசியால் சுழற்றியடிக்கப்படுகின்றன. உணவுக்காக ஒவ்வொரு கணமும் போராடிக்கொண்டிருக்கின்றன. வேனிற்காலத்தில் அடிமண் வரள காட்டின் ஒவ்வொரு இலையும் தாகத்தால் வரண்ட நாக்குகளாக மாறி துடிதுடித்து உதிர்கிறது

வனவாசி காட்டும் இன்னொரு காடும் உள்ளது, கதைகளின் காடு. நாவலெங்கும் காட்டுமனிதர்கள் உருவாக்கிய எளிமையான கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன. காட்டைச் சந்திக்கும் மானுடப்பிரக்ஞை அந்த கதைகளை முளைக்கவைக்கிறது. அதுவும் ஒரு மண்தான். காடு அங்கும்தான் விதைகளை விரவுகிறது. காட்டுமிருகங்களை வேட்டைக்காரர்களிடம் இருந்து காப்பாற்றும் எருமைத்தெய்வத்தின் கதையை முதலில் கேட்கும்போது அதன் எளிமையில் சத்யாசரன் வியந்து போகிறான். கூடவே சிறு ஏளனமும் அடைகிறான். மெல்ல மெல்ல அந்தக் கதைகள் வழியாகவே அவன் காட்டின் அந்தரங்கத்துக்குள் நுழைகிறான்.

இறுதியில் கதாநாயகன் காட்டின் சாராம்சத்தை அல்லது மையத்தை கண்டு கொள்கிறான். ராமாயண காலத்தைவிடப் பழைய வரலாறு கொண்ட காட்டு அரச வம்சமான சந்தாலர்களின் ஒரு பிரிவான தோபரு வம்சத்து மன்னர் தோபரு பன்னாவையும், அவர் மகள் பானுமதியையும் மகன் ஜகருவையும் அவன் சந்திக்குமிடம் இந்நாவலின் முக்கியமான ஒரு இடமாகும். 1862ல் நடந்த சந்தால் கலவரத்திற்கு தலைமையேற்று பிரிட்டிஷாரிடம் போராடித் தோற்ற பன்னா தன் வயோதிகத்தை காட்டுக்குள் குடிசை கட்டி மாடுமேய்த்து கழிக்கிறார். பன்னாவின் குடிலில் அமர்ந்து அவர்களது வம்ச மகிமையை கேட்கும் கதாநாயகன் நாமறிந்த வரலாற்றின் மறுபக்கத்தைக் கண்டு கொள்கிறான்.

ஒரு காலத்தில் வங்கக்காடுகள் முழுக்கவே அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தன. அவர்களுடைய மூதாதையர் சமாதிகள் வேரூன்றிப் பரந்த பெருமரங்களுக்கு அடியில் மலர்களால் மூடப்பட்டு தூங்குவதை அவன் கண்டான். அவர்களது புராதன அரண்மனை இடிபாடுகளாக கிடப்பதைக் கண்டான். காட்டுக் கூலிக்காரி போலிருந்த பானுமதியின் அழகிய முகத்தைப் பார்த்தபடி நிலவில் நடந்தபோது அவளை மணந்தாலென்ன என்ற எண்ணம் ஒரு கணம் கதை சொல்லிக்கு வந்தது. ஆனால், அவள் ஒரு ராஜகுமாரி, தான் ஒரு எளிய மானுடன் என்று உணரும் விவேகத்தை காட்டு வாழ்க்கை அவனுக்கு வழங்கியிருந்தது.

காடு மெல்லமெல்ல பின்வாங்கும் சித்திரம் வனவாசி வழியாக உருவாகிறது. ஒரு திரைச்சீலை சரிந்து மறைவதுபோல, ஒரு ஏரி வற்றுவதுபோல. அதன் மனிதர்கள் அதன் கதைகள் அதன் மன்னர்கள் அதன் நினைவுகள் அனைத்தும் அழிந்து இல்லாமலாகின்றன. சந்தால்கள் மெல்லமெல்ல மறைவார்கள். அந்த இனத்தின் உடல்கள் எஞ்சும், உள்ளே நவநாகரீகம் மட்டும் குடியேறும். அப்போது ஒருநாள் தங்கள் இனம் காடுகளை ஆண்டது என்பதை அவர்கள் நினைக்க மாட்டார்கள். தங்களை ‘நாகரீகத்தின்’ வால்நுனியில் கடைசிக்கண்ணியாக பொருத்திக்கொள்வார்கள்

பானுமதியின் முகத்தை கண்டபடி நிலவொளியில் நடக்கும்போது சத்யாசாரன் கண்டுகொண்டது அதையே. அவளிடம் அவன் கேட்கும் வினாக்கள் எல்லாமே அதைத்தான் சொல்கின்றன, அவளுக்கும் நிகழ்காலத்துக்கும் தொடர்பில்லை. தோற்கடிக்கப்பட்டு பின்வாங்கிவிட்ட ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவள் அவள். ஒரு ஆழ்நினைவு, ஒரு கனவு.

*

பதினேழாம் நூற்றாண்டுக்குப்பின்னர் ஐரோப்பிய இலக்கியத்தில் இயற்கைவாதம் என்ற அழகியல்-தத்துவக் கோட்பாடு உருவாகி ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது. இயற்கைவழிபாடே அதன் அடிப்படை மனநிலை. இறைச்சக்தியின் செய்தியை இயற்கை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கிருந்தது. இயற்கைக்கு மாறான மனநிலைகளை உதறி மீண்டும் அதனுடன் இணையும் மனநிலையை அடைந்து அதில் ஈடுபட்டு வாழும்போது இயற்கை தன் ஆசியை நமக்களிக்கும் என்றும் அதுவே உண்மையான ஆன்மீகமாக இருக்கும் என்றும் இவர்கள் நம்பினார்கள்.

பிரிட்டனிலும் பிரான்ஸிலும் உருவாகி வலுப்பெற்ற இந்த கருத்தின் உலகளாவிய பிரச்சாரகர்கள் என்று வேர்ட்ஸ்வர்த் முதலிய கற்பனாவாதக் கவிஞர்களைச் சொல்லலாம். பின்னர் வால்ட்டேர் ,ரூசோ போன்றவர்களிலும் எமர்சன், தோரோ போன்றவர்களிடமும் விரிவானதோர் கருத்தியலாக இது வளர்ந்தது. எமர்சன், தோரோ போன்றவர்களின் எழுத்துக்கள் வழியாக இந்தியா முதலிய நாடுகளின் சிந்தனையாளர்களிடமும் ஆழமான பாதிப்பைச் செலுத்தியது. தமிழில்கூட ந.பிச்சமூர்த்தி முதல் தேவதேவன் வரையிலான கவிஞர்கள் அந்தப்பாதிப்பை சாட்சியப்படுத்தியிருக்கிறார்கள்.

இயற்கைவழிபாட்டாளர்களில் ஒருசாரார் ‘பண்படாத புனிதன்’ [Noble savage] என்ற கருத்தை உருவாக்கினர். ஜான் டிரைடனின் ஒரு கவிதையில் இருந்து உருவான இச்சொல் பின்னர் ஒரு முக்கியமான கருத்தாக்கமாக வளர்ந்தது. கிறித்தவத்தின் கருதுகோள்களுக்கு எதிராக, பண்டைய பாகன் வழிபாட்டுமுறைகளின் சாரத்தில் இருந்து உருவாகி வந்த இச்சொல்லின் உருவாக்கத்திலும் கிறித்தவ இறையியல்அடிப்படையே இருந்தது என்பது ஒரு முரண்நகை.

மனிதப் பண்பாடு ஆதிபாவத்தால் உருவானது, மனிதர்கள் பாவத்தில் கருத்தரிக்கப்பட்டவர்கள் என்ற கொள்கை கிறித்தவத்தால் நிலைநாட்டப்பட்டது. அதைமறுத்து மனிதர்கள் இயல்பில் நல்லவர்கள் என்றும் ‘நாகரீகம்’ என்று சொல்லப்படும் பிற்கால மானுட அமைப்பு மூலமே அவர்கள் சுயநலம், பேராசை, பரஸ்பர ஐயம் போன்ற உணர்வுகளை அடைந்தார்கள் என்றும் ‘பண்படா புனிதன்’ கொள்கை குறிப்பிடுகிறது. இதனை அவனே உணர்ந்தபின்னரே மனிதன் ஆன்மீகமீட்பு குறித்த கருத்துக்களை உருவாக்கிக் கொண்டான். அந்த இரு கருத்துநிலைகளுக்கும் நடுவே போராடுவதாக மனித அகம் மாறியது. பண்படாத மனிதன் இந்த இரு கருத்துநிலைகளுக்கும் முற்பட்டவன். அவனிடம் பாவம் இல்லை ஆகவே மீட்பும் அவனுக்கு தேவையில்லை.

இந்தக்கொள்கை சார்ந்து உருவான கருத்துக்களை பொதுவாக பண்படாமைவாதம் [Primitivism.] என்று குறிப்பிடுவது வழக்கம். இந்தக் கோட்பாடும் பரவலாக இலக்கியவாதிகளிடம் கூரிய செல்வாக்கைச் செலுத்தியது. தமிழில் ஐரோப்பிய இலக்கியங்களை மொழியாக்கம் செய்த க.நா.சு இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களையே அதிகமும் மொழியாக்கம்செய்திருக்கிறார். உதாரணம் நட் ஹாம்சனின் ‘நிலவளம்’

வனவாசியை இச்சிந்தனைகளின் பின்னணியில் ஆராய்வது பல அகவெளிச்சங்களை அளிக்கும். முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது இதுதான், காட்டின் சித்திரத்தை அளிக்கும் விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய அதை ஐரோப்பிய பாணி இயற்கைவாதத்துக்கு எவ்வகையிலும் சமானத்தன்மை இல்லாத ஒன்றாகவே உருவாக்கியிருக்கிறார் என்பதுதான். ஆகவேதான் வனவாசி முழுக்கமுழுக்க ஓர் இந்தியநாவலாக உள்ளது. அதைப்போன்ற நூற்றுக்கணக்கான ஐரோப்பிய நாவல்களுடன் அதை எவ்வகையிலும் சமானமாக காணமுடியாது. இந்த தனித்தன்மையே அதன் சிறப்பு.

அபாரமான கற்பனாவாதத் தன்மை கொண்ட ஆக்கம் வனவாசி. அதன் மொழிநடை மிக கவித்துவமானது. த.நா.குமாரசாமியின் மொழியாக்கமும் கவித்துவமானதே. ஆனால் விபூதிபூஷன் பந்தோபாத்யாய காட்டுவாழ்க்கையை மிகைப்படுத்தவில்லை, இலட்சியப்படுத்தவில்லை. அதேசமயம் அதை வரண்ட யதார்த்தம் நோக்கியும் கொண்டுசெல்லவில்லை. விபூதி பூஷனிடம் செயல்படுவது முதிர்ந்த இந்திய தத்துவ நோக்கு. அது இயற்கையை -பிரகிருதியை- ஒரு லீலையாக காண்பது. அந்த லீலை என்பது முரணியக்கம் மூலம் உருவாவது. ஆக்கமும் அழிவும், நன்மையும் தீமையும், இருளும் ஒளியும், வளமும் வரட்சியும் ஒன்றையொன்று சமன்செய்ய முயலும் சக்கரம் அது. வனவாசியில் பருவச்சுழற்சி மூலம் நாம் காண்பது அந்த மகத்தான லீலாசக்கரத்தை. அதுவே இந்த நாவலின் சாரம்.

அதையே மனிதனைப்பற்றிச் சொல்லும்போதும் ஆசிரியர் சொல்லக்கூடும். அவன் அகமும் நன்மைதீமைகளின் லீலையரங்குதான். அவனே பிரம்மாண்டமான ஒரு அரங்கின் ஒரு காய் மட்டும்தான். ஒரு சிறிய காட்டுப்பகுதிக்குள் ஒரு சிறிய காலப்பகுதிக்குள் இயங்கும் வாழ்க்கையைச் சொல்லும் விபூதிபூஷண் காட்டும் மனிதர்களில் அனேகமாக அனைவருமே காட்டுமிருகங்களைப்போல இலக்கு என ஏதும் இல்லாமல் இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த இலக்கின்மை என்பது பொருளின்மை அல்ல. வெறுமை அல்ல. அவர்களின் வாழ்க்கை இயற்கை என்ற மாபெரும் அறியமுடியாத பொருள்கொண்ட விளையாடலுடன் இணைந்துள்ளது.

முற்றிலும் இந்தியத்தன்மை கொண்ட இந்த தரிசனத்தில் இருந்து விபூதிபூஷன் பந்தோபாத்யாய காட்டும் நுண்சித்திரங்களுக்குள் வந்தால் நாம் இன்னும் நுட்பமான ஒரு நாவலை வாசிக்க முடியும். அது ஐரோப்பிய இயற்கைவாதம் போன்ற ஒன்றல்ல. இயற்கைவாதம் ஓர் எதிர்வினை. கிறித்தவ விஸ்தரிப்பு வாதத்துக்கும் மையப்படுத்தல்நோக்குக்கும் எதிரானது. ஐரோப்பிய தொழில்மயமாதலுக்கு எதிரானது. அவை இரண்டு இணைந்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் பூர்வகுடிகளை கொன்றே அழித்த வரலாற்று உண்மைக்கு எதிரான மனசாட்சியின் எழுச்சி அது. ஆனாலும் அது எதிர்வினை மட்டும்தான். விபூதிபூஷன் பந்தோபாத்யாய முன்வைப்பது பலநூறு வருடங்களாக மெல்லமெல்ல உருவாகி முதிர்ந்த ஒரு தரிசனம்.

வனவாசி இந்திய மொழிகளில் நிகழ்ந்த பேரிலக்கியங்களில் ஒன்று. நமது வரலாற்றுப் பின்புலத்தில், நமது அகஉருவங்களின் சாயலுடன் இந்நாவலை படிப்போமெனில் இதன் ஒவ்வொரு வரியும் கவிதைக்குரிய எல்லையின்மையுடன் திறந்து கொள்வதைக் காணமுடியும். வயல்களாக மாறிக்கெண்டிருக்கும் காட்டில் யுகலப் பிரசாதன் நடும் மலர்ச்செடிகள் அப்போது நம்மை துயிலிலும் பின்தொடரும்.

[வனவாசி. வங்கநாவல் [ஆரண்யக்] விபூதிபூஷன் பந்தோபாத்யாய. தமிழாக்கம் த.நா.குமார்சாமி சாகித்ய அகாதமி வெளியீடு; 1968.]

எழுதியவர் : (22-Mar-18, 5:30 pm)
பார்வை : 147

மேலே