விசித்திரன்
நகரும் நகர நகரத்தின் நடுவே
நான் ஒரு விசித்திரன் போல
பெருநகரத்தின் நடுவே
நாற்கர சாலை அருகே
எனது குடியிருப்பு
சுவரில்லா
கிலையிலை சுழ்ந்த
கூரை அது
பார்த்துக்கொண்டே சிலர்
பார்த்தும் பார்க்காமல் பலர்
பாவக்கணக்கை கழிக்க பரிசலிப்போர் சிலர்
பாவி என விரட்டுவோர் பலர்
மூக்கை பொத்திக்கொண்டு சிலர்
வாயை பொத்திக்கொண்டு பலர்
குழந்தைகளுக்கு பயம்காட்ட சில
குழந்தைகளுக்கு உணவுட்ட என
வித விதமான மக்கள்
விசித்திரம் பார்க்கும் மக்கள்
இருந்தாலும்
சுதந்திரம் உண்மையில் பெற்றவன் நான்
சூழ் குப்பைகளின் தலைவன் நான்
எனக்கென்று அடையாளம் இல்லை
ஏனென்றால் நான் ஆண்டவன் பிள்ளை
உணவிற்க்கு இந்நாட்டில் பஞ்சமில்லை
குப்பைத்தொட்டிக்கும் அதில் வஞ்சமில்லை
கிழிந்த சட்டையும் கிழியா நெகிழியும்
எனக்கு உடை
குப்பை பொருக்கி பணமாக்குவேன் -அதில்
அடிப்பவனுக்கு பாதி மிரட்டுபவனுக்கு மீதி
என வாரிவழங்கும் வள்ளல் நான்
நான்கு கால் நண்பனுடன்
நானிலம் சுற்றுவேன்
குளிர் மழை வெய்யிலதை
குருதியில் கலந்ததை
உணவாகவும் மாற்றுவேன்
உயிர் அரணாக போற்றுவேன்
எனக்கு சொந்தமென
நிர் பந்தமில்லை
கடமையெனவும்
காதல் கனவுயெவும்
ஏதுமில்லை
இருக்கும் வரை இயங்கியும்
இறப்பு வரை இரை(றை) தேடி
நகரும் நான் ஒரு பிச்சைக்காரன்