முஅருணாசலம் அறியப்படாத இலக்கிய ஆளுமை

மு. அருணாசலம் பிறப்பு: 29-10-1909, இறப்பு: 23-11-1992)


தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தமிழுக் காகவும் இலக்கியத்துக் காகவும் பணியாற்றிய ஓர் உன்னத ஆளுமை மு. அருணாசலனார். மயிலாடு துறைக்கு அருகில் உள்ள திருச்சிற்றம் பலம் கிராமத்தில் பிறந்தவர். பள்ளிக் கல்வியை முடித்த பின் கணிதத் துறையில் இளநிலை பட்டம் பெற்ற மு.அ.வுக்குத் தன் 21-வது வயது வரை தமிழியல் சார்ந்து இயங்குவதற்கான களம் உருவாகவில்லை என்பது ஆச்சரியம்!

தமிழும் நட்பும்

1931-ல் சென்னை தி.நகருக்குக் குடிபெயர்ந்ததுதான் மு.அ.வின் ஆளுமை உருவாக்கத்துக்குக் காரணம். தன் வீட்டருகே குடியிருந்த ரசிகமணியின் நட்பும் ரசனையும் மு.அ.வைப் பெரிதும் வசப் படுத்தியிருந்தன. எனினும் வையாபுரிப் பிள்ளையிடமிருந்துதான் மு.அ.வின் தமிழ்ப் புலமைக்கான பயிற்சி தொடங்குகிறது. அப்போது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த அவரிடமே மாணவராகச் சேர்ந்து முதுகலைப் பட்டமும் பெற்றார்.

எட்டு நூற்றாண்டு வரலாறு

வையாபுரிப்பிள்ளையிடமிருந்து பதிப்பு நுட்பங்களை உள்வாங்கிக்கொண்ட மு.அ., 1940-ல் முக்கூடற்பள்ளு நூலைப்பதிப்பித்தார். மு.அ.வுக்கும் சரி, முக்கூடற்பள்ளு சரி இதுதான் முதற்பதிப்பு! மு.அ. ஊர்ஊராகச் சென்று தேடி அலைந்து 150-க்கும் மேற் பட்ட ஓலைச்சுவடிகளைத் தன் வீட்டில் சேகரித்து வைத்திருந்தார். தொடர்ந்து பல நூல்களைப் பதிப்பித்தார். இதன் தொடர்ச்சி தான் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள்.

தமிழகக் கல்விப் புலத்தில் புற்றீசலாய்ப் பெருகியிருக்கும் மேலோட்டமான இலக்கிய வரலாற்று நூல்களுக்கு மத்தியில் மு.அ.வின் வரலாற்று நூல்கள் மிகவும் தனித்துவமானவை. ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய பணியைத் தனி யொரு மனிதராகச் சாதித்துக் காட்டியவர் மு.அ. வரிசையாக ஒவ்வொரு நூற்றாண் டிலும் வெளிவந்த எந்த நூல்களும் விடுபட்டுவிடக் கூடாது என்ற கவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது.

இலக்கணம், சமய இலக்கியம், ஓவியம், சோதிடம், நிகண்டு, கல்வெட்டு, கணிதம் என்ற பல்துறைச் சார்ந்த நூல் களை இலக்கிய வரலாற்றில் இடம்பெற செய்ததது, முறையான ஆய்வு முறை, கவித்துவ நடை என்று பல்வேறு புதுமைகளைப் புகுத்தி எட்டு நூற்றாண்டுத் தமிழிலக்கிய வரலாற்றை எழுதி பதினொரு தொகுதிகளாக வெளியிட்டார்.

புத்தகத்தில் பெயர் போடாத பதிப்பாளர்!

கவிமணி தேசிக விநாயகத்தின் கவிதைகளைத் தொகுத்து முதன்முதலில் புத்தகமாக வெளியிட்டது மு.அ.தான். 1938-ல் வையாபுரிப்பிள்ளையின் துணையுடன் ‘மலரும் மாலையும்’என்ற நூலாக கவிமணியின் கவிதைகளை வெளியிட்டார் மு.அ.

அந்தப் பதிப்பில் அவர்தான் பதிப்பித்தார் என்பதற்கான எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. ‘புதுமைப் பதிப்பகம், 3, சாம்பசிவம் தெரு, தி.நகர்’ என்கிற பதிப்பக முகவரி இந்நூலின் முன்பக்கத்தில் உள்ளது. இம்முகவரி மு.அ.வின் வீட்டு முகவரி. இன்றும் இம்முகவரியில் மு.அ.வின் வாரிசுகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், கவிமணியின் வரலாற்றை விளக்கும் நூல்களில் மு.அ.வின் பெயர் இடம்பெறுவதில்லை என்பதுதான் வரலாற்றுச் சாபக்கேடு.

வாய்மொழி இலக்கிய ஆய்வாளர்

நாட்டாரியல் துறையில் முக்கியமான பங்களிப்புகளைச் செய்தவர் மு.அ. ‘தமிழ் நாட்டுப்புறப்பாடல் தொகுப்பின் முன்னோடி’ என்று ஆய்வாளர்களால் சுட்டப்படுபவர். ‘காற்றிலே மிதந்த கவிதை’ என்ற தலைப்பில் 1943-ல் இவர் எழுதிய நூல்தான் தமிழில் முதலில் வெளியான வாய்மொழிப் பாடல்கள் தொகுப்பு. தமிழ்க் கதைப்பாடல் ஆய்வின் முன்னோடியாகவும் இவரே அறியப்படுகிறார்.

1992-ல் தான் இறக்கும் வரை ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழ் இலக்கியத்துக் காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருந்த இந்த மாபெரும் வரலாற்று ஆளுமையின் பங்களிப்புகள் இனியாவது வகுப்பறைகளில் வாசிக்கப்பட வேண்டும்.

-ஜெ.சுடர்விழி, சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்

எழுதியவர் : (23-Mar-18, 3:25 am)
பார்வை : 28

மேலே