வல்லரசாகும் இந்தியா

முதல்ல, உங்களோட அறிவியல் பசிக்குத் தீனி போடாம, பல ஏழைக் குழந்தைகளோட கல்விப்பசிக்கு உங்களால தீனி போட முடியும்ங்கிற ஒரு நல்ல விஷயத்துக்குள்ள உங்கள திசை திருப்பறதுக்காக என்னை நீங்க மன்னிக்கனும். இந்த உலகத்துல பொறக்கிற எல்லாருக்குமே ஒரு வளமான வாழ்க்கை வாழ்வதற்க்கான உரிமையும், ஆசையும் இருக்குங்கறத நாம யாரும் மறுக்க முடியாது!

ஒரு வளமான வாழ்க்கைக்கு மிகவும் அடிப்படையானது, (உணவு, உடை உறையுள்ளுக்கு பிறகு) கல்விதான். இதத்தான் நம்ம பொய்யாமொழி புலவர் திருவள்ளுவரு…..

“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை”

அப்படீன்னு சொல்லியிருக்காரு! அதாவது, இந்த உலக செல்வங்கள்லேயே அழிவே இல்லாத ஒரு செல்வம் கல்விச்செல்வம் அப்படீன்னு சொல்றாரு. அதனாலதான் எழுத்தறிவித்தவன் இறைவன்னு கூட சொல்றாங்க! அப்படிப்பட்ட கல்வி ஒருத்தருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பளிக்கக்கூடியது. அதுக்கு உதாரணமா உங்களுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்றேன்…..

ஜப்பானின் பார்வையில் இந்தியாவும், இந்தியர்களும்!

நான் ஜப்பானுக்கு படிக்க வந்த புதுசுல, சில பொதுவிடங்கள்ல நடக்கிற கலைநிகழ்ச்சிகளுக்குப் போறது, பாட்மின்டன் விளையாடப் போறதுன்னு, விடுமுறை நாட்கள்ல இப்படிச் சில இடங்களுக்குப் போறதுண்டு. அப்படிப்போற இடத்துல, ஜப்பானிய மக்கள் கேப்பாங்க….

“அனாத்தானோ குனி வா தொச்சிரா தெசுக்கா?” அப்படீன்னு! (ஜப்பானீஸ்ல இதுக்கு “நீங்க எந்த நாட்டுலேர்ந்து வர்றீங்க”ன்னு அர்த்தம்). அதுக்கு நாம,

“இந்தோ தெசு” அப்படீன்னு பதில் சொல்லுவோம்! (அதாவது, இந்தியாவிலேர்ந்து வர்றேன்னு அர்த்தம்)

உடனே அந்த ஜப்பானீஸ் சொல்லுவாங்க…..

“இந்தோஜின் வா கொம்பியூட்டர் தே ஜ்யோசு தெசு நே” (அதாவது, இந்தியர்கள் எல்லாம் கம்பியூட்டர் துறையில திறமையானவர்களாச்சே!)

நான் உடனே, “ஐய்யய்ய…. நமக்கு கணக்கு சுட்டுப்போட்டாலும் வராதுங்க, ஆனா கூட படிச்ச பசங்க நிறைய பேரு, கணக்கு, கம்பியூட்டர் பாடத்துல புலிதாங்க அப்படீன்னு (நான் ரொம்ப நல்லவன்னு) சொல்றதுண்டு!

இதெல்லாம் ஏன் நான் உங்ககிட்ட சொல்றேன்னா, இந்தியர்கள்னா உலகத்துல, சமீபகாலங்கள்ல ஏக வரவேற்ப்பு. அதுக்குக் காரணம் நம்ம கல்வித்தரம், கலாச்சாரம், பண்பாடு இப்படி எத்தனையோ. இந்தோஜின் வா ஜ்யோசு தெசு நேன்னு நமக்கு முன்னாடி சொல்லுற இதே ஜப்பானியர்கள், இந்தியா ஒரு வறுமையில் வாடும் நாடு, அங்கே நிறைய பேருக்கு கல்வியறிவு குறைவு, கூலி வேலை செய்றவங்க அதிகம்னு நமக்கு பின்னாடி சொல்லுவாங்க! இதுக்கு உதாரணமா, இயக்குனர் சரணோட, கமல் நடித்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்துல வர்ற ஒரு காட்சியச் சொல்லலாம்.

இந்தியாவுக்கு சுற்றுலாவுக்கு வரும் ஒரு ஜப்பானியர், “ஐ வான்ட் டு சீ புவர் இன்டியா”ன்னு கேப்பாரு நம்ம பிரபுகிட்ட, அவரக் காலி பண்ணி ஆஸ்பத்திரிக்கு பேக் அப் பண்ணிடுவாங்க கமலுக்காக. அதனால, இந்தியாவை கம்பியூட்டர் துறையில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு நாடாக பார்க்கும் அதே சமயத்தில், ஒரு வறுமை நாடாகவும் உலக மக்கள் பார்க்கிறாங்கங்கிறத நாம புரிஞ்சிக்கணும்!

இந்தியக் ‘குடி’மகன்களும் வல்லரசுக் கனவும்!

அவங்க அப்படி பார்க்குறதுக்கு காரணமும் இருக்கத்தான் செய்யுது. ரெண்டு ரூபாய்க்கு அரிசியும், 80 ரூபாய்க்கு பருப்பும் போடும் அரசியல்வாதிகள் இருக்கும்வரை, 2 ரூபாய்க்கு அரிசியை வாங்கி வைத்துவிட்டு, தினக்கூலியில் சம்பாதிக்கும் வருமானத்தில் வாரத்தில் 4 நாட்கள் குடித்துவிட்டு, சாப்பாட்டுக்கு இல்லையென்று கேட்கும் மனைவியை, அடித்து உதைக்கும், 70 % இந்தியக் ‘குடி’ மகன்கள் இருக்கும்வரை, இந்தியாவின் வறுமையும் தீரப்போவதில்லை, அந்த வறுமையில் கல்விச்செல்வமின்றி, தங்களின் பொன்னான வாழ்க்கையை தொலைத்துவிட்டு, தினக்கூலிக்குச் செல்லும் எண்ணற்ற குழந்தைகளும் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பில்லை!

பின்ன எப்படி, 2020-ல இந்தியா வல்லராசாகும்? கொஞ்சம் நீங்களே யோசிச்சுப் பாருங்க! இந்த நிலை மாறனும்னா நாம வெறுமனே யோசிச்சா மட்டும் போதாது. எதாவது செய்யனும். என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்?

நம்ம எதிர்கால வாழ்க்கையையும், நம்ம குடும்பத்தோட எதிர்கால வாழ்க்கையையும், வளமானதாக்கிட, வாழ்க்கை ஓட்டப்பந்தயத்துல, தினந்தோரும் ஓடிக் களைத்துப் போகும் நம்மைப் போன்ற சாமானியர்களால், எதிர்கால இந்தியாவுக்காக என்ன பெருசா செய்துவிட முடியும் அப்படீன்னு யோசிக்கிறீங்களா?

முடியும்ங்க…..கண்டிப்பா முடியும்! இத நான் சொல்லல. இஷா வித்யா அப்படீங்கிற ஒரு இலவச கல்வி நிறுவனத்தை நிறுவிய திரு. சத்குரு வாசுதேவ் அவர்கள் சொல்றாங்க! அவரு என்ன சொல்றாரு, இஷா வித்யா கல்வி நிறுவனம் மூலமா என்ன செய்யறாரு, அவரோட இந்த கல்வி நிறுவனம் மூலமா நீங்க எப்படி இந்தியாவை ஒரு வல்லரசாக்க முடியும்னுதான், இந்தப் பதிவுல சுருக்கமா நாம பார்க்கப் போறோம்!

சத்குருவும் இஷா வித்யாவும்!

சதா சர்வ காலமும், பரமானந்தத்தை அள்ளித்தருவதாய் சொல்லும் பிரேமானந்தாக்கள், நித்தியானந்தாக்களின் செய்திகளால் நிரம்பி வழியும், பத்திரிக்கைகள், ஊடகங்களில் சத்குரு வாசுதேவ் போன்ற தொலைநோக்குள்ள கல்விமாந்தர்களைப் பற்றி என்னைப் போன்றோருக்கும், ஏனைய தமிழ் மக்களுக்கு தெரியாமல் போனதில் பெரிய ஆச்சரியமேதுமில்லைன்னு நெனக்கிறேன்!

ஒரு நாடு என்பது வெறும் நிலத்தைக் குறிப்பதல்ல. அந்நிலத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களையே குறிக்கிறது எனும் சத்குரு, அத்தகைய ஒரு நாட்டின் முழுமையான வளர்ச்சியை, அந்நாட்டில் வாழும் மக்கள், குறிப்பாக கோடிக்கணக்கான குழந்தைகளின் கல்விததரமே நிர்ணயிக்கிறது என்கிறார். ஒரு நாட்டின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதிலும், பேணிக் காப்பதிலும் அந்நாட்டின் அரசாங்கமே பெரும்பங்கு வகிக்கிறது. அரசாங்கத்தின் அங்கமான கல்வி நிறுவனங்களில், நகரங்களின் பள்ளிகள்போக மீதமுள்ள 95% பள்ளிகள் கிராமப்புறங்களில்தான் உள்ளது!

அரசாங்கத்தின் கிராமப்புற பள்ளிகளில் வழங்கப்படும் கல்வித்தரம் போதிய அளவு இருக்கா இல்லையாங்கிற பட்டிமன்றத்துக்குப் போறதுக்கு முன்னாடி, அங்கே படிச்சு வெளியே வருகிற மாணவர்களின் எதிர்காலம் எப்படியிருக்குன்னு பார்த்தோமுன்னா, பெரும்பாலான மாணவர்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமலும், ஆங்கிலப் புலமையின்மையாலும், தினக்கூலிக்கு வேலைக்குப் போகும் அவல நிலைக்கு உள்ளாகிறார்கள்! இந்த அவல நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி (?) வைக்கும் ஒரு கன்னி முயற்ச்சியாக, திரு. சத்குரு அவர்களால் கடந்த ஜூன் 19, 2006-ல் , தமிழகத்தின் கோயம்புத்தூரிலுள்ள சன்டெகவுண்டன்பாலையம் என்னும் குக்கிராமத்தில் தொடங்கப்பட்டதுதான் இஷா வித்யா என்னும் கல்வி நிறுவனம்/பள்ளி!

இஷா வித்யாவின் கிளைப்பள்ளிகள்!

இஷா வித்யாவின் முதல் பள்ளி, முதல் வருடத்தில், சுற்றியுள்ள 26 கிராமங்களிலிருந்து, சுமார் 263 குழந்தைகளை எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்புவரையில் வாய்ப்பு வழங்கி அனைத்துக்கொண்டது! அதனைத் தொடர்ந்து அடுத்த வருடத்தில் ஈரோடு, நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடியில் 3 பள்ளிகளை தொடங்கியது இஷா! கடந்த 2009 ஆம் ஆண்டு, விழுப்புரத்திலும், கடலூரிலும் (எங்க ஊருங்கோவ்!) மேலும் 2 பள்ளிகளுடன், மொத்தம் 6 பள்ளிகளின் மூலம் 1800-க்கும் மேலான குழந்தைகளின் வாழ்வில் கல்வியொளியை வழங்கி வருகிறது. இதுல விசேஷமென்னன்னா, 1800-க்கும் குழந்தைகள்ல கிட்டத்தட்ட 72% குழந்தைகள், உலகின் பல நல்ல உள்ளங்களின் உதவித்தொகையில்தான் படித்து வருகிறார்களாம்!

எழுதியவர் : (23-Mar-18, 3:51 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 3809

மேலே