முதுமொழிக் காஞ்சி 50

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
மறுபிறப் பறியா ததுமூப் பன்று. 10

- அல்லபத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் மறுபிறப்பை யறிந்து அறத்தின்வழி ஒழுகாத மூத்த மூப்பு மூப்பன்று.

பதவுரை: மறுபிறப்பு - மறுபிறப்பு நன்கு நடத்தற்குரிய ஒழுக்கங்களை,

அறியாதது - ஒருவன் அறியாமலே அடைந்த மூப்பானது,

மூப்பு அன்று - மூப்பு என்னும் கணக்கிலே சேர்ந்ததாகாது.

அம்மைத் தாஞ்செய்த அறத்தின் வருபயனை
இம்மைத்துய்த் தின்புறா நின்றவர் - உம்மைக்
கறஞ்செய்யா தைம்புலனும் ஆற்றுதல் நல்லாக்
கறந்துண்டஃ தோம்பாமை யாம். 155 அறநெறிச்சாரம்

பொருளுரை:

முற்பிறப்பில் தாம் செய்த அறங் காரணமாக வரும் இன்பத்தை இப்பிறப்பில் நுகர்ந்து மகிழ்கின்றவர்கள், மறுமையின்பத்தின் பொருட்டு அறத்தினைச் செய்யாமல் ஐம்பொறிகளாலும் நுகரப்படு மின்பங்களை நுகர்ந்துகொண்டு வாளா இருத்தல் நல்ல பசுவினை பாலைக் கறந்து மகிழ்ச்சியோடு பருகி பின் பசுவை உணவிட்டுக் காவாதிருத்தல் போலாம்.

இறந்த பிறப்பிற்றாஞ் செய்தவினையைப்
பிறந்த பிறப்பா லறிக - பிறந்திருந்து
செய்யும் வினையா லறிக இனிப்பிறந்
தெய்தும் வினையின் பயன். 156 அறநெறிச்சாரம்

பொருளுரை: மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளை பிறந்த இப் பிறவியில் அடைகின்ற இன்ப துன்பங்களால் அறிவார்களாக; இனி இன்னொரு பிறவி எடுத்து அடையும் இன்ப துன்பங்களை இம்மையில் தாம் பிறந்து செய்யும் நல்வினை தீவினைகளால் அறிவார்களாக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Mar-18, 3:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 76

மேலே