கம்பனின் அன்பு நெறி

முகப்பு » இலக்கியம், கம்பராமாயணம், கவிதை
கம்பனின் சித்திரகூடம்
June 15, 2012
- ஜடாயு

வெண்ணிலவு கருமேகத்துள் மறைகிறது, மழை தவழும் அந்த அழகிய மலைச்சாரலில். நிலவுக் குழந்தை தன் சூல்கொண்ட வயிற்றுக்குள் மறைந்திருக்க, வீறிடுகிறது வானம். இடியோசை எழுகிறது. தன் இணையான பெண்யானை தான் பிளிகிறதோ என்று எண்ணி அந்த மேகத்தை நோக்கி பனைமரம் போன்ற தன் பெரிய கையை நீட்டுகிறது ஆண் யானை.

கானக வழியிடையில் வெளிறிக் கிடந்த ஒரு பாலை நிலத்தைக் கடந்து, இத்தகைய எழில் கொஞ்சும் சித்திரகூடம் என்ற வனப்பகுதியை வந்தடைகிறார்கள் இராமனும் சீதையும் இலக்குவனும்.

வெளிறு நீங்கிய பாலையின் மெல்லெனப் போனார் –
குளிறும் வான்மதிக் குழவி தன் சூல்வயிற்று ஒளிப்ப,
பிளிறு மேகத்தைப் பிடியெனப் பெரும்பனைத் தடக்கைக்
களிறு நீட்டும் அச் சித்திர கூடத்தைக் கண்டார்.

(மெல்லெனப் போனார் – மெல்ல நடந்து சென்றனர்; குளிறும் – ஒலிசெய்யும்; குழவி – குழந்தை; பிடி – பெண்யானை; களிறு –ஆண்யானை)

இவ்வளவு அழகான காட்டுக்குள், அன்பு மனைவியுடன் கைகோர்த்து நடந்து போகும்போது, சும்மா பார்த்துக் கொண்டே போகலாமா? அதுவும் ரசிக சிரோமணி என்று தியாகராஜர் வர்ணித்த ராமன் அப்படி செய்யலாமோ? வழிக் காட்சிகளை எல்லாம் சீதைக்குக் காண்பித்துக் கொண்டே வருகிறான். அந்தக் கவின் எழில் கம்பனின் கவிதைக் கானகமாக நம் கண் முன் விரிகிறது.

போகும் வழியில் வேங்கை மரங்களில் பொன்னிற மலர்கள் பூத்திருக்கின்றன. கருவண்டுகள் அந்த மரத்தின் மெல்லிய கிளைகளில் வந்து மொய்க்கின்றன. அவற்றின் பாரம் தாங்காமல் கிளைகள் தாழ்ந்து, பின்னர் வண்டுகள் பறந்து விட்டதும் பூக்களை உதிர்த்துக் கொண்டு தாமாக மேலெழுகின்றன.

கற்பின் திறம் இன்னது என்று அருந்ததிக்கும் எடுத்துக் காட்டிய திருமகளே, சீதா! நீ வருகிறாய் என்று பொன்மலர் தூவி, காலில் விழுந்து தொழுது எழுவது போல அவை தோன்றுவதைப் பாராய்.

சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே!
நீல வண்டினம் படிந்து எழ, வளைந்து உடன் நிமிர்வ,
கோல வேங்கையின் கொம்பர்கள், பொன்மலர் தூவிக்
காலினில் தொழுது எழுவன நிகர்ப்பன – காணாய்!

(சீலம் – கற்பு; நீல வண்டினம் – கருவண்டுகள்; கோல வேங்கை – அழகிய வேங்கை மரம்; கொம்பர்கள் – கிளைகள்)

கானகத்தில் முனிவர்களின் ஆசிரமங்களும் பர்ணசாலைகளும் உள்ளன. பர்ண சாலையில் ஒரு காட்சி. முப்புரி நூலை மார்பில் அணிந்த ரிஷிகள் வேள்வி முடித்து ஆகுதிக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். யாக குண்டத்தில் அக்னி புகைந்து கொண்டிருக்கிறது. காற்று வேறு பலமாக அடிக்கிறது. ஆகுதியின் போது தீ ஜாஜ்வல்யமாக சுடர்விட்டு எரியவேண்டும் என்பதனால், ப்பூ ப்பூ என்று ஊதி அதை எரியவைக்க முயன்று கொண்டிருக்கிறனர் முனிவர்கள்.

ஆசிரமத்திற்குப் பக்கத்தில் உலவிக் கொண்டிருக்கும் மயில்கள் இதைப் பார்க்கின்றன. உடனே எல்லாமாகச் சேர்ந்து வந்து நெருங்கி நின்று, தங்கள் அழகிய தோகையை விரித்து நின்று, குண்டத்தில் தீயை மீண்டும் எழுப்புகின்றன!

பாந்தள் தேர் இவை பழிபடப் பரந்த பேர் அல்குல்!
ஏந்து நூலணி மார்பினர் ஆகுதிக்கு இயைந்த
கூந்தல் மென்மயில் குறுகின நெடுஞ்சிறை கோலி
காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ – காணாய்!

(பாந்தள் – பாம்பின் படம்; தேர் – தேர்த்தட்டு; பழிபட – உவமையாகாமல்; கூந்தல் மென்மயில் – தோகையுடைய மயில்கள்; குறுகின – நெருங்கி நின்று; நெடுஞ்சிறை கோலி – நீண்ட சிறகைப் பிரித்து; காந்து – காந்துகின்ற, எரிகின்ற; எரி – தீ)

பாம்பின் படம் போலும், தேர்த்தட்டு போலும் பரந்த அல்குல் என்று சீதையின் இடையழகை ராமன் வர்ணிக்கிறான். Hour glass figure என்று கூறுகிறோமே, அந்த மாதிரியான தோற்றம் (அல்குல் குறித்து கம்பனில் சிறந்த புலமை கொண்ட தமிழறிஞர் ஹரி கிருஷ்ணன் அளிக்கும் மேற்படியான விளக்கங்களை இங்கே மற்றும் இங்கே பார்க்கலாம்).

மயில்கள் முனிவர்களுக்கு இந்த அளவு உதவி செய்யும் போது கிளிகள் சும்மா இருக்குமா?

சீதா! காட்டில் விளையும் பல்வேறு தானியங்களையும், உன் கைபோன்று சிவந்த வாயில் எடுத்து அடக்கிக் கொண்டு, முனிவர்களின் ஆசிரமங்களுக்கு எடுத்துச் சென்று அன்போடு கொடுக்கும் இந்தக் கிளிகளைப் பார்.

ஐவனக் குரல், ஏனலின் கதிர், இறுங்கு, அவரை,
மெய் வணக்குறு வேய் இனம் ஈன்ற மெல் அரிசி,
பொய் வணக்கிய மாதவர் புரை தொறும் புகுந்து, உன்
கைவணத்த வாய்க் கிள்ளை தந்து அளிப்பன – காணாய்!

(ஐவனக் குரல் – மலை நெல்லின் கதிர்; ஏனலின் கதிர் – தினைக் கதிர்; இறுங்கு- சோளம்; மெய் வணக்குறு வேய்இனம் ஈன்ற மெல் அரிசி – உடல் வணங்கி நிற்கும் மூங்கில் குழாய்களில் தோன்றும் அரிசி; பொய் வணக்கிய – பொய்யை விரட்டிய; மாதவர் – பெருந்தவமுடையவர்; புரைதொறும் – ஆசிரமங்கள் தோறும்; உன் கைவணத்த – உன் கை வண்ணத்தை உடைய; கிள்ளை – கிளி).

மயிலும் கிளியும் சாத்வீகமான பறவைகள். ஆனால் கானகத்தின் கொடிய விலங்குகள் கூட, மாமுனிவர்களின் தவ ஆற்றலுக்கு மதிப்பளிக்கின்றன. யானையைக் கூட இறுக்கி ஒரே மூச்சில் விழுங்கும் மலைப்பாம்புகள், கற்ற்றிந்தவர்கள் போல அடக்கத்துடன் இருக்கின்றன. முனிவர்கள் மிதித்து ஏறும் படிகளாக, மலையடிவாரங்களில் கிடக்கின்றன.

இடிகொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மாசுணம், கற்று அறிந்தவர் என அடங்கி,
சடை கொள் சென்னியர், தாழ்வு இலர், தாம் மிதித்து ஏற,
படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பன – பாராய்!

(வேழத்தை – யானையை; எயிற்றொடும் – தந்தத்தோடும்; கடிய மாசுணம் – கொடிய மலைப்பாம்புகள்; சடை கொள் சென்னியர் – சடைமுடி பூண்ட தலையினர்; தாழ்வரை – மலையடிவாரங்களில்)

தள்ளாமையால் தளர்ந்து மெதுவாக காட்டுக்குள் நடந்து கொண்டிருக்கிறனர் சில முதியவர்கள். தங்கள் இல்லறக் கடமையை எல்லாம் முடித்து விட்டு, வானபிரஸ்தம் போகும் வயதடைந்ததும் தவம் புரிவதற்காக கானகம் நோக்கி வந்தவர்கள். இடுங்கிய கண்களுடன், வழிதெரியாமல் தவித்து இங்குமங்கும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைக் கண்டும் நெஞ்சு உருக அந்தக் காட்டில் ஆள் உண்டு. குரங்குகள் தங்கள் கூனல் வாலை நீட்டிக் கொண்டு முன்னே நடந்து, அவர்களுக்கு வழி காட்டுகின்றன. ஆம், அவற்றின் வால் தான் கூனலே அன்றி மனம் அல்ல. ‘உருகுறு நெஞ்சக் கடுவன்’கள் அவை. அதனால் தான் மாதவர்க்கே அரு நெறி காட்டுகின்றன!

வடுவின் மா வகிர் இவை எனப் பொலிந்த கண் மயிலே!
இடுகு கண்ணினர், இடர் உறு மூப்பினர் ஏக,
நெடுகு கூனல் வால் நீட்டின, உருகுறு நெஞ்சக்
கடுவன், மாதவர்க்கு அரு நெறி காட்டுவ – காணாய்!

(வடுவின் மா வகிர் இவை – மாவடு வகிர்ந்தாற் போல; இடுகு – இடுங்கிய; ஏக – நடந்து செல்ல; நெடுகு – நீண்ட; கடுவன் – ஆண்குரங்கு)

கணவன் காட்டுக்குள் எங்கோ இருக்கிறான். மனத்தில் கொதிக்கும் காதலினால், கணவனுடன் ஊடல் கொண்டு அவனைச் சென்று சேராமல் தனியே உட்கார்ந்திருக்கிறாள் கானகத்துப் பெண். காமவேதனையால் தவிக்கும் அவள் மீண்டும் கணவனைச் சென்று சேரும்படி, இன்னிசை பாடி அவள் மனதை உருக்குகின்றன கின்னர மிதுனங்கள்! பறவைகளும் பாம்புகளுமே அன்பு காட்டும் சித்திர கூட்த்தில் தேவகணங்கள் ஆற்றும் காதல் சேவை இது.

ஆடுகின்ற மாமயிலினும் அழகிய குயிலே
கூடுகின்றலர், கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப
ஊடுகின்றனர், கொழுநரை உருகினர் நோக்கப்
பாடுகின்றன கின்னர மிதுனங்கள் – பாராய்!

(கொடிச்சியர் – குறிஞ்சி நிலத்து மகளிர்; கூடுகின்றிலர் – கூடாதிருப்பவர்கள்; கொழுநரை – கணவரை; கின்னர மிதுனம் – குதிரை முகமும் மானுட உடலும் கொண்டு இசைபாடும் தேவகணங்களின் ஜோடி).

அதோ அருவிச் சாரல் பக்கம் இரண்டு யானைகள் போய்க் கொண்டிருக்கின்றன. பெண் யானை இரைத்து இரைத்து மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இளமையான யானை தான், ஆனால் உண்டாகி இருக்கிறது. கர்ப்பம் முற்றிய நிலை – ‘பெருகு சூல் இளம்பிடி’. களைத்துப் போய் உட்கார்ந்து விட்டது. கூட வரும் ஆண்யானை நல்ல கம்பீரம் – நிலாப்பிறை மாதிரி வளைந்த தந்தங்கள். உடனே ஓடிப் போய்ப் பக்கத்தில் இருக்கும் பெரிய மரத்திலிருந்து தேனடையை எடுக்கிறது.. மொய்த்துக் கொண்டிருக்கும் மழலை வண்டுகளை ஒரு குச்சியை எடுத்து வீசி விரட்டுகிறது. அந்த நறுமணம் கமழும் செந்தேனை துதிக்கையால் தன் துணைக்கு ஊட்டி விடுகிறது.

உருகு காதலின், தழை கொண்டு, மழலை வண்டு ஓச்சி,
முருகு நாறு செந்தேனினை முழை நின்றும் வாங்கி,
பெருகு சூல் இளம்பிடிக்கு, ஒரு பிறைமருப்பு யானை,
பருக, வாயினில், கையின் நின்று அளிப்பது – பாராய்!

(ஓச்சி – விரட்டி; முருகு – மணம்; முழை – மரப்பொந்து; இளம்பிடி – இளம் பெண்யானை)

நாம் சித்திரகூட்த்துக்குள் நுழைந்த உடன், சூல்கொண்ட மேகத்தைப் பார்த்து துதிக்கை நீட்டிய யானை இது தானோ? எப்போதும் தன் காதலியின் நினைவு தானோ அதற்கு? இருக்கலாம்.

கிழக்குப் பக்கத்தில் ஒரே புகைமூட்டம். காட்டின் ஒரு புறம், வேடுவர்கள் தாங்கள் கோடாலி கொண்டு வீழ்த்திய நல்ல பருத்த அகிற்கட்டையை எரிக்கிறார்கள். அதிலிருந்து எழுகிறது நறுமணம் கமழும் பசும்புகை. இன்னொரு புறம், முனிவர்கள் வேள்வி முடித்து ஆகுதி சொரிகிறார்கள். அதில் சுடர்ந்து புகையுடன் எழுகிறான் வைஸ்வானரான அக்னி! வேடுவர் எழுப்பிய அகிற்புகை, வேதியர் எழுப்பிய வேள்விப் புகையுடன் வானமண்டலத்தில் அளாவி ஒன்று கலந்து விட்டது.

சீதா! அந்தப் புகைமண்டலம் பெரிய கரிய மலையின் சிகரங்கள் போல படர்ந்திருப்பதைப் பார்.

வரி கொள் ஒண் சிலை வயவர் தம் கணிச்சியின் மறித்த
பரிய கார் அகில் சுட, நிமிர் பசும்புகைப் படலம்,
அரிய வேதியர் ஆகுதிப் புகையொடும் அளாவி,
கரிய மால் வரைக் கொழுந்து எனப் படர்வன – காணாய்!

(வரிகொள் – கட்டமைந்த; ஒண் சிலை – வலிமையான வில்; வயவர் – வேட்டுவ வீரர்கள்; கணிச்சி – கோடாலி; பரிய கார் அகில் – பருத்த கரிய அகிற்கட்டை; மால்வரை – பெரிய மலை)

எங்கும் பசுமை கொட்டிக் கிடக்கும் மலை. சரிந்து இறங்கும் பாதையில் நடந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். வேதஞானம் போலத் தெளிந்த அந்தி வானம் மரகதச் சிவப்பில் குளித்துக் கிடக்கிறது. எதிரே சூரிய அஸ்தமனம் தெரிகிறது. அந்தச் சரிவில் கூட்டமாக குதித்து ஓடிக் கொண்டிருக்கின்றன ஏழெட்டு மலை ஆடுகள். அவை உயர உயரக் குதிப்பது, சூரியதேவனின் பச்சை நிறக் குதிரைகள் போன்று இருக்கிறது. சீதா, உன் அழகிய, செவ்வரி படர்ந்த கண்களால் அதைப் பாராய்!

குருதி வாள் எனச் செவ்வரி பரந்த கண் குயிலே!
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை,
சுருதி போல் தெளி மரகதக் கொழுஞ்சுடர் சுற்ற,
பருதி வானவன் பசும்பரி புரைவன – பாராய்!

(குருதி வாள் – ரத்தம் தோய்ந்த வாள்; மருவி – பொருந்தி; மால்வரை உம்பரில் – பெரிய மலையின் மேலாக; வருடை – மலை ஆடு; சுருதி – வேதம்; கொழுஞ்சுடர் – சூழ்ந்த ஒளி; பருதி – பரிதி, சூரியன்; பசும்பரி புரைவன – பச்சைக் குதிரை போன்றன).

சூரியனை “ஹர்யஸ்வன்” என்று வேதம் கூறுவதற்கேற்ப, பசும்பரி என்கிறார் கவி. Nilgiri Thar என்று அழைக்கப்படும், பின்புறம் வளைந்த கொம்புகள் கொண்ட வரையாடுகள் நீலகிரி, மூணாறு, இரவிக்குளம் காட்டுப் பகுதிகளில் அதிக அளவில் உள்ளன. மலையில் மாலை நடை போகும்போது இது போன்றதொரு காட்சியை இன்றும் நாம் பார்க்கலாம்.

*****

கம்பராமாயணத்தில் பல இடங்களில் அற்புதமான இயற்கை வருணனைக் காட்சிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அழகானவை. சித்திரகூடப் படலத்தில் வரும் இந்தக் காட்சிகளில் கம்பர் சித்தரித்துக் காட்டுவது ஒரு அடர் கானகம். ஆனால் அந்த அடர் கானகத்திலும் ஒருவிதமான ஒத்திசைவும் (harmony) ஒழுங்கும் உள்ளது. அங்கு மிருகங்கள், பற்வைகள், மனிதர்கள், தேவகணங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி வாழ்கின்றனர். பெருமரங்களும், மலைகளும், அருவிகளும், சுனைகளுமாக இயற்கையின் வரமளிக்கும் கரம் எங்கெங்கும் நிறைந்துள்ளது. இக்கொடிய கானகத்திலும் இராமன் சீதைக்குக் காட்டும் காட்சிகளில் எல்லாம் அன்பின் ததும்பலே வெளிப்படுகிறது. அயோத்தி நகரத்தையும் உற்றாரையும் உறவினரையும் துறந்து வனவாசம் மேற்கொண்டு கானகம் வந்தவர்கள், அந்தக் காட்டின் அழகிலும் அமைதியிலும் தங்களை இணைத்துக் கொண்டார்கள் என்று சுட்டுவதற்காகவே கவி இத்தகைய காட்சிகளை தன் காவியம் முழுவதும் வைத்திருக்கிறார்.

ஆதி காவியமான வால்மீகி ராமாயணம் காலத்தால் கம்பராமாயணத்திற்கு ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக முற்பட்டது. அதில் சித்திரகூட வர்ணனை மிக மிதமான, இயல்பான மொழியில் உள்ளது. தாவரங்கள், விலங்குகள் மற்றும் கானகம் பற்றிய நேரடியான, எளிய சித்தரிப்புக்களே அதில் உள்ளன. கம்பனில் நாம் காண்பது போன்ற சமத்காரமான, கவித்துவமான வர்ணனைகள் காளிதாசனின் காவியங்களில் மிகுதியும் கிடைக்கின்றன. ரகுவம்சத்திலும், குமார சம்பவத்திலும் உள்ள இயற்கை வர்ணனைகளில் பல இவ்வகையானவை.

மகாகாவிய இலக்கணத்தையும் வால்மீகத்தையும் சம்ஸ்கிருதம் வாயிலாகக் கற்றவன் கம்பன். காளிதாசனைக் குறித்து கம்பன் வெளிப்படையாக்க் குறிப்பிடவில்லை. ஆயினும் பொ.பி. 9-10ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கம்பன் சம்ஸ்கிருத காவிய உலகில் முதலிடம் பெற்றிருந்த காளிதாசனைக் கட்டாயம் கற்றிருப்பான் என்றே கருதவேண்டும்.

அத்துடன், சங்க இலக்கியங்களும் கூட இது போன்ற வர்ணனைகளில் கம்பனுக்கு முன்னோடியாக இருந்திருக்கின்றன என்று கருதலாம். குறிப்பாக ‘சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை..’, எரிமருள் வேங்கை இருந்த தோகை இழையணி மடந்தையின் தோன்றும்’ போன்ற கபிலரின் குறிஞ்சி நிலக் காட்சிகள்.

****

இப்படியாக நடந்து, சித்திரகூட சிகரத்தில் தங்க வேண்டிய இடத்தை வந்தடைகிறார்கள். முனிவர்களின் உபசரிப்பை ஏற்று இராமனும் சீதையும் அவர்களின் ஆசிரமங்களுக்குச் செல்கிறார்கள். இலக்குவன் குடிசை கட்ட ஆரம்பிக்கிறான்.

அந்தி சாயும் நேரம் வந்து விட்டது. மகாவிஷ்ணு சக்கரப் படையால் அரக்கனை வதம் செய்தபோது அவன் உடலில் இருந்து பெருகிய குருதி போல வானம் சிவந்தது. அவன் முகத்தில் இருந்து தெறித்த ஒற்றைக் கோரைப் பல் போல, அப்போது கீழ்வானில் நிலா உதித்தது.

சக்கரம் தானவன் உடலில் தாக்குற,
எக்கிய சோரியின் பரந்தது எங்கணும்
செக்கர்; அத்தீயவன் வாயின் தீர்ந்து, வேறு
உக்க வான் தனி எயிறு ஒத்தது, இந்துவே.

(தானவன் – அரக்கன்; எக்கிய – வெளிப்பட்ட; சோரி – இரத்தம்; செக்கர் – செவ்வானம்; உக்க – சிந்திய; வான் தனி எயிறு – ஒற்றைக் கோரைப் பல்; இந்து – நிலா).

இந்த இடத்தில் ஏன் இப்படி ஓர் மாலை வர்ணனை வரவேண்டும் என்று கேட்கலாம்.
சித்திரகூடத்திற்கு வருவதற்கு முன், முனிவர்களுக்கு அபயம் அளித்துவிட்டு வந்திருக்கிறான் இராமன். முனிவர்களைத் துன்புறுத்தும் அரக்கர்களை வதம் செய்வேன் என்று உறுதியளித்திருக்கிறான். அதை நினைவுறுத்துவது போல இந்த சூரிய அஸ்தமனம் இருந்தது என்பதைத் தான் கவி இங்கே குறிப்புணர்த்துகிறார்.

மோசமாக எழுதப் பட்ட சில நாவல்களில் ஒரே மாதிரியான அல்லது சம்பந்தமில்லாமல் தொற்றிக் கொண்டிருக்கிற சூரியோதய, அஸ்தமன வர்ணனைகள், இயற்கைக் காட்சிகள் சலிப்பூட்டும் வகையில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருப்பதைக் கவனித்திருக்கலாம். அவை வாசகனுக்கு அயர்ச்சியூட்டி அவன் பொறுமையைச் சோதிப்பவை. ஆனால், சிறந்த படைப்புகளில் அவை ஒவ்வொரு முறை வரும்போதும் வேறு வேறு விதமாகவும், புதுமையாகவும், நாவலின் அந்தத் தருணத்திற்கு இசைவதாகவும் இருக்கும். அப்போது கலாபூர்வமாகவும், அழகியல் ரீதியாகவும் அவை சரியாகப் பொருந்தி நல்ல வாசிப்பு அனுபவத்தை அளிக்கும். நாம் மேலே கண்டது போல.

மாலைப் பொழுதானதும், குரங்குகள் தங்கள் வாழ்விடமான மரங்களைத் தேடிச் சென்றன. யானைகள் மலையடிவாரங்களுக்குப் போயின. சகுந்தப் பறவைகள் தங்கள் கூடுகளை நாடிச் சென்றன. மெய்யறிவினாலேயே நோக்கி உணர்தற்குரிய பரம்பொருளான இராமன், தான் போட்டிருக்கும் மானுட வேஷத்திற்கேற்ப, சாயங்காலம் செய்ய வேண்டிய சந்தியா வந்தனத்தை நாடிச் சென்றான்.

மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின
நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின
அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான்.

மாலை முடிந்து இரவாகத் தொடங்கும் நேரம், இலக்குவன் கட்டி முடித்த பர்ணசாலையை இராமனும் சீதையும் வந்து பார்க்கிறார்கள்.
நீண்ட மூங்கில்களின் சிறிய துண்டுகளை நிற்க வைத்து, மேலே வரிசைப்படுத்தி, ஒடுக்கமில்லாத ஒரு பெரிய நீண்ட மூங்கில் தடியை மேலே கூரைக்கு தூலமாக நேரே நிறுத்தி, கெட்டியான குச்சிகளை (வரிச்சுகள்) மேலே ஏற்றிக்கட்டி, அப்படிக் கட்டிய வரிச்சுகளின் மேல் எல்லா இடங்களிலும் ஓலைக் கொத்துக்களைக் கொண்டு பரப்பி மூடியிருக்கிறான் இலக்குவன்.

நெடுங்கழைக் குறுந் துணி நிறுவி, மேல் நிரைத்து,
ஒடுங்கல் இல் நெடு முகடு ஒழுக்கி, ஊழ் உற
இடுங்கல் இல் கை விசித்து ஏற்றி, எங்கணும்
முடங்கலின் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே.

(நெடுங்கழை – நீண்ட மூங்கில்; குறுந்துணி – சிறிய துண்டுகள்; நிரைத்து – நிறுத்தி; ஒடுங்கல் – ஒடுக்கம்; ஒழுக்கி – நேரே வைத்து; ஊழ் உற – முறைப்படி; இடுங்கல் இல் – இடுக்கமில்லாத, கெட்டியான; கை ஏற்றி விசித்து – கையால் ஏற்றிக் கட்டி; வரிச்சு – குச்சி; முடங்கல் – ஓலை; விரிச்சு – விரித்து; மூட்டி – மூடி).

இன்றும் கூட திருநெல்வேலி பக்கங்களில் இப்பாடலில் வரும் வரிச்சு என்பதற்கிணையான “வரிச்சக் காம்பு” என்ற சொல் சகஜமாகப் பயன்பாட்டில் உள்ளதைப் பார்க்கலாம்.

தேக்கு இலை கொண்டு பரப்பி கூரையாக்கி, பிறகு அதற்கு மேல் பொலிவுடைய நாணற்புல்லால் வேய்ந்து, கீழ்ப்புறத்தில் வேய் என்ற மெல்லிய மூங்கில் குச்சிகளால் சுவர் அமைத்திருக்கிறான். அந்தக் குச்சிகளுக்கு இடையே உள்ள இடைவெளி தெரியாதவாறு மண்ணைப் பிசைந்து எறிந்து, அதை சமப்படுத்துவதற்காக தண்ணீரும் தெளித்து ஒழுங்கு படுத்தியிருக்கிறான்.

தேக்கு அடைப் படலையில் கூரை செய்து, பின்
பூக்கிளர் நாணலின் புல்லு வேய்ந்து, கீழ்த்
தூக்கிய வேய்களின் சுவரும் சுற்றுறப்
போக்கி, மண் எறிந்து, அவை புனலின் தீற்றியே.

(படலை – பரப்பு; பூக்கிளர் – பூப்போன்று பொலிவுடைய; வேய் – மெல்லிய மூங்கில் வகை; சுற்றுறப் போக்கி – சுற்றிலும் சூழ அமைத்து; புனலின் – நீரினால்).

கிராமங்களில் மண்குடிசை கட்டும்போது மண்ணைக் குழைத்து எறிந்து “தீற்றுதல்” இப்போதும் நடைமுறையில் உள்ளது. இன்னும் சில பத்தாண்டுகளில் மண்குடிசைகளே கூட வழக்கொழிந்து போகும் நிலை வரலாம். ஆனால் கம்பன் காலத்திய குடிசை கட்டுமான கலைச்சொல் ஒன்று இன்றைய காலம் வரைக்கும் நம்மிடம் புழங்கி வருகிறது என்பது நினைவுகூர்ந்து கவனித்து சிந்திக்க வேண்டிய விஷயம்.

இதோடு நிறுத்தி விடவில்லை இலக்குவன்.

மயிலுடைப் பீலியின் விதானம் மேல் வகுத்து..
செயலுடைப் புதுமலர் பொற்பச் சிந்தியே..

மயில் பீலியால் மேல்முகப்பு அமைத்து, அப்போது பூத்த புதுமலர்களைக் கொண்டு வந்து அழகும் செய்கிறான்.

இப்படி இலக்குவன் அந்தப் பர்ணசாலையைக் கட்டியிருக்கும் அழகை ஆறேழு பாடல்களில் கவி வர்ணிக்கிறார். ராமாயணத்தில், எடுத்ததற்கெல்லாம் கோபப் பட்டு, வில்லையும் அம்பையும் தூக்கி அனல்பறக்கும் மொழிகள் பேசி, பிறகு இராமானால் சமாதானப் படுத்தப் படும் இலக்குவன் தான் பொதுவான வாசிப்பில் காணக் கிடைப்பான். ஆனால் அந்த இலக்குவனுக்குள் இவ்வளவு நிதானமும், செயல்திறமும், அழகுணர்ச்சியும் கொண்ட ஒரு ஆளுமையும் உண்டு என்பது இத்தகைய தருணங்களில் வெளிப்படுகிறது.

அதே போல, கம்பராமாயணத்தில் எல்லா இடங்களிலும் மிகைக் கற்பனைகளும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் நிறைந்த அதீத சித்தரிப்புகளே காணக் கிடைக்கின்றன என்று சிலர், குறிப்பாக நவீன இலக்கிய வாசகர்கள் எண்ணக் கூடும். எப்போதும் எல்லாவற்றிலும் உச்ச கட்டங்களை நோக்கிச் செல்வது பெருங்காவியங்களின் இயல்பு. அந்த வகையில் கம்பராமாயணத்தில் அத்தகைய இடங்களும் நிரம்ப உள்ளன தான்.

ஆனால் மிக இயல்பான, மிதமான, “யதார்த்தமான” சித்தரிப்புகளும் பல இடங்களில் உள்ளன. இலக்குவன் பர்ணசாலை அமைக்கும் இந்த இடம் அப்படிப் பட்ட ஒன்று.

குடிசையைப் பார்த்த இராமன் அடேயப்பா என்று பிரமித்துப் போகிறான்.

மேவு கானம், மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன;
தா இல் எம்பி கை சாலை சமைத்தன –
யாவை, யாதும் இலார்க்கு இயையாதவே?

(மேவு கானம் – அடர்ந்த காட்டில்; போந்தன – நடந்து சென்றன; தா இல் எம்பி – குற்றமற்ற என் தம்பி)

மிதிலை அரசகுமாரியின் பூவிலும் மெல்லிய பாதங்கள் கானகத்தின் கல்லிலும் முள்ளிலும் நடக்கின்றன. குற்றமற்ற என் தம்பியின் கரங்கள் குடிசை கட்டுகின்றன. எதுவுமே இல்லை என்று ஆகிவிட்டவர்களுக்கு, இயைந்து செய்ய முடியாத செயல் என்று ஏதாவது உண்டா என்ன? – இப்படி ஓடுகிறது அவன் எண்ணம்.

என்று சிந்தித்து, இளையவற் பார்த்து, ‘இரு
குன்று போலக் குவவிய தோளினாய்!
என்று கற்றனை நீ இது போல்?’ என்றான்
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்.

(குவ்விய – திரண்ட; துன்று – அழகிய; கண் பனி சோர்கின்றான் – கண்ணீர் விடுகின்றான்)

குடிசை கட்டி முடித்து நிற்கும் குன்று போர்ந்த உயர்ந்த அந்தத் தோள்களைப் பார்க்கிறான் இராமன். “இது போல எப்போதடா கற்றுக் கொண்டாய் லட்சுமணா?” என்று தழுதழுக்கிறான். அவன் கண்களில் கண்ணீர் அருவியாய்க் கொட்டுகிறது.

இவ்வாறு அன்பும் நெகிழ்ச்சியும் ததும்பும் தருணங்களுடன் அவர்களது வனவாசத்தின் அடுத்த கட்டம் ஆரம்பிக்கிறது என்று சொல்லிக் கதையை மேலே நகர்த்திச் செல்கிறார் கவி.

அயோத்தியா காண்டத்தில் அபாரமான நாடகத் தருணங்கள் கொண்ட படலங்கள் உள்ளன – கையேயி சூழ்வினைப் படலம், குகப் படலம் போல. ஆனால், பொதுவாக பேச்சாளர்களாலும் கம்பன் கவிதாபிமானிகளாலும் அவ்வளவாக கவனிக்கப் படாத சித்திரகூடப் படலத்திலும் கூட, எப்பேர்ப்பட்ட அற்புதமான நயங்களும் கவித்துவமும் கொண்ட இடங்கள் உள்ளன என்பதற்கு மேலே நாம் கண்ட பாடல்களே சான்று.

எழுதியவர் : (23-Mar-18, 3:56 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : kambanin anbu neri
பார்வை : 2468

மேலே