நாஞ்சில் ஒருமைகள் 2

நாஞ்சில் ஓருமைகள்.

அட்டமி அடியந்திரம்

கும்பப் பூ வயிலறப்பு கழிஞ்சால வாற மாசிமாச தேய்பெறை அட்டமிக்கு தான் நம்மட வீட்டு சிறப்பு பெரிய கோயிலுக்கு.

திருவந்திரத்துக்கு தாமஸம் போனத நால நீலாண்டபுள்ள தாத்தா அட்டமிக்க பத்து நாளைக்கி மின்னகூட்டியெ தெரிசனோப்பு வந்திருவா.
ரெம்பவும் அத்துவானப் பட்டு வெஞ்சன சாமானங்களை தெக்க போயி கோட்டாத்து கம்போளத்துலயும் வடசேரி பேனா கிருச்ணன் கடையிலயுமா ஒரு ஆச்சைக்கி மின்னகூட்டியெ வாங்குவா.

மெளகாத்தலு வெரலி மஞ்ச கொத்தமல்லி எல்லாத்தையும் பொடிக்கதுக்கு ஜோலிக்கார பொம்பளைகளு வந்து உரல்ல போட்டு இடிச்சு பொடியாக்கி அததுக்குள்ள மர வெஞ்சன பொட்டிகளில வைப்பா.

மறக்கறி வாங்க அட்டமிக்க ரெண்டொரு நாளுக்கு மிந்தியே சந்தை மொறைல வடசேரி சந்தையில வாங்கிருவா.

பிருத்தி சக்கப்பழம் ,திராட்சை பழம் ,மாம்பழம் ,மாதுளம்பழம், சக்கப்பழம் வாழைப்பழம் ன்னு பழ வகையறா
ஓலவட்டி , கடவம் , அரிவட்டி , செரட்டாப்பை ஓலப்பாயி மற்ற வகைக்குள்ளது எல்லாமே வாங்கிற்று மாட்டு வண்டிகளில ஏத்தி விட்டுருவா. வண்டி அசைஞ்சாடி நம்மட வீடு வரும்.

அட்டமிக்க இரண்டு நாளைக்கு மிந்தியே நீலாண்டபுள்ள தாத்தாவும் தெரவியம்புள்ள தாத்தாவுமா கீழூரு மேலூரு அழயாண்டிரம் கிராமத்துக்கு போவா.
அவாள் வீடுகளுக்கு போயி "சாமீ. கும்ப அட்டமி வாரெ செவ்வாச்ச வருகு. கறிகாயி வெட்ட திங்களாச்ச ராவு மின்ன கூட்டியே வந்திரணம் .
செவ்வாச்ச வெளுத்தால ராகவேசுவரரு சாமிய கும்பிட்டு சாப்பிட்டுற்று திரும்பிரலாம் ஒங்களுக்கு வேண்டியது எல்லா தய்யார இருக்கும். அவசியம் வந்திரணம்" ன்னு கூப்பிடுவா.

அட்டமிக்க தலைக்கா நாளு சாயங்காலம் எல்லா வெஞ்சனம் மறக்கறி வெறகு திருவுலகுத்தி அருமாணை ஒண்ணொண்ணா கோயில் ஆக்க பெரைக்கு போகும்.

பதிவு தீவாரணை பள்ளியறை தீவாரணை எல்லாம் முடிஞ்ச பொறவு ஒரொரு பிரமணாளா ஆக்க பெரைக்கு வருவா. அழயாண்டிரம் அய்யரு சமையலுக்கு வருவேரு.
நம்மூரு வேம்பய்யரு சாமி தலைமையில கறிகாயி வெட்ட பூச போட்டு ஆரம்பிக்கையில ராவு மணி ஒம்பது தாண்டிரும். அவுலு வெரவி காப்பியும் போட்டுருப்பா. ஏழெட்டு பேரு தேய்ங்கா திருவுவா பாக்கி காய்களை நறக்குவா.

காலம்பற மூணு நாலு மணிக்குள்ள மிளகாய் பச்சடி , தயிர் பச்சடி , இஞ்சி கிச்சடி , மாங்காய் உப்புலோடு , அவியலு , எரிசேரி , பருப்பு, சாம்பாரு , சம்பாராம், ரசம் இன்னும் எல்லா கறிகளும் முடிஞ்சு இருக்கும்.
வார்ப்புல தண்ணி ஊத்தி சோத்துக்கு அரிசியை போட்டிருப்பா.

இராவு ஆக்க பெரையில இருந்தவோ காலம்பற வந்தவ்வோ யெல்லாம் காலுகளுவ போயிற்று படித்துறைக்கு வருவா மாமன்மாருகோ அவாளுக்கு தேய்ச்சு குளிக்க எண்ணெயும் திங்க எள்ளுருண்டையும் குடுப்பா.
எல்லாரும் பழையாத்துல குளிச்சிட்டு கோயிலுக்கு போவா.

இதுக்குள்ளால மேசாந்தியும் கீசாந்தியும் காலம்பற பூசைகளுக்கு ஒருங்கிப்பா.

எட்டரை ஒம்பது மணிக்குள்ள கோயில் சிப்பந்தி பெரிய கோயிலு மணி போடுவேரு.

உடன் தானே நீலாண்டபுள்ள தாத்தா முன்னாடி வர நாங்க எல்லாருமா தெருவு நெறைஞ்சால கோயிலுக்கு வருவோம்.

மேசாந்தி ரெண்டு கும்பம் வெச்சு பூசை செய்து ஒரு மணிக்கூருக்கு ராகேசுரருக்கும் ஒலகம்மனுக்கும் அவிசியம் பண்ணுவேரு.
தீவாரணை முடிச்சு தாத்தாக்கு பரிவட்டம் கெட்டி பிரசாதம் கொடுப்பேரு.

சாமிக்கு மின்ன இருக்க அம்பலத்தில வெளக்கு வெச்சு சோறு கறிகளை வெளம்புவா. தீவாரணை காட்டிற்று எல்லாரும் சாப்பிட ஆரம்பிச்சா நாலு பந்திக்கு கொறயாம பிரமணாள் சாப்பிட்டுருப்பா.

சிப்பந்திகளும் சாப்பிட்ட பொறகு மிச்சம் உள்ள கறிகள் பாயசங்கள் சோறும் நம்மட வீடு வரும்.

வீட்டு முற்றத்து படிப்புரைல எல்லாம் ஒருமிச்சு இருந்து சாப்பிடையில தாத்தா ரெம்ப பூராப்புல இருப்பா....

எழுதியவர் : சிவோஹம். சுப்ரமணியன் தாணு (25-Mar-18, 3:08 pm)
பார்வை : 104

சிறந்த கட்டுரைகள்

மேலே