நாஞ்சில் ஒருமைகள் 3

நாஞ்சில் ஓருமைகள்.
உத்திரம்
கேசனேரி பத்து வயலு கரையில உள்ள சாத்தாங்கோயிலுக்கு தான் நாங்கோ பங்கனி உத்தரத்துக்கு பாயசம் வைக்க போவோம்.
கலியாண பொத்தை வடக்க தாவாரத்துல வயலுக்க கரையில
அஞ்சு நாகருகளோட புள்ளையாரும் வடக்க பாத்தால இருப்பா. சாத்தா மட்டும் மேக்க பாத்திற்று இருப்பேரு.
அப்பாற்ற நம்மட குடும்ப சாத்தாவான்னு கேட்டதுக்கு " இவரு தாம்டே நமக்கு சோறு போடுகேரு.இவரு இங்ஙன இருக்கேது நால தாம் மக்ளே நம்மட வயலுகோ நல்ல வெளயு. ராசாக்கமாரு கும்பிட்ட சாத்தா இவரு. ராஜா பயிரு வெச்ச வயலுடே இதெல்லாம். யாரும் கண்டுகிடாம இருக்கைல நாம தான்டே இவர ஆராட்டணும். நம்ம குடும்ப சாத்தாவை கும்பிட ஆளுகோ நெறய இருக்கு மக்ளே."ன்னு சொல்லுவா.
அப்பா வயல பயிரேத்த ஆரம்பிக்க மிந்தி சாத்தாக்கிட்ட சிவலிங்கம் யேதும் இல்லியாம். ஆனா அப்பாவுக்கு நம்பிக்கையோ யென்னவோ நாகருக்களுக்கும் புள்ளையாருக்கும் நடுசுல சிவலிங்கம் இருந்து. வயலு ஜோலி யெதுன்னாலும் சாத்தாவை தொழாம தொடங்கிட்டு இல்லே .
அப்படி கும்பிட்டதனால வெளஞ்சா இல்ல அப்பாவோட கடப்பாடுல வெளஞ்சா தெரில . எல்லா பூக்கும் ரெண்டரை மேனி கொறயாம நெல்லு கெடைக்கும்.
மாசில வயலறப்பு கழிஞ்சு வயலுக்கு உள்ள பெரிய வல்லரக்கன் சம்பா நெல்லு தாளுகோ வயலு முச்சூடும் இருக்கும்.
உத்தரத்தண்ணைக்கி வெளுக்க மிந்தியே அம்மை எங்கள எழுப்பி விட்ருவா.பக்கத்தில உள்ள எல்லா புள்ளைகளையும் அம்மை கூப்பிட்டுருவா.
வெஞ்சனம் தேய்ங்கா எலை திருவுலகுத்தி பீசாத்தி வெட்டுகுத்தி குடம் வாளி வெங்கல பாத்திரங்கோ எல்லாத்தையும் நாங்கோ புள்ளைகள் யெல்லாருமா தூக்கிற்று வரிசையா ஊரம்மன் கோயிலு வழியா பழையாத்து கஞ்சியாத்து வழில உள்ள மணல் மேடுகள தாண்டி கலியாண பொத்தை மேக்க தாவாரத்துல இருக்க அய்யாவுள்ள பாட்டா வெளைக்கு மேக்க உள்ள தடத்துல நடந்து பொத்தைக்கி வடபக்கமா வந்திருவோம்.
யெப்பப்பா சாத்தாங் கோயிலு வந்திற்றோம்.
எல்லா சாமானங்களும் எல்லா புள்ளைகளும் வந்திற்றத அம்மையும் அப்பாவும் உறுதி படுத்திருவா..
அப்பா பொத்தைக்கி மேல ஏறி பன ஓலை, கிலாஞ்சலு, கோஞ்சாட்டை, கொல்லாமாவு சுள்ளிகள சேகரம் பண்ணுவா.
அக்காமாருகளும் அம்மையுமா ஆளுக்கொரு குடத்துல கேசனேரி குளத்தில வெள்ளம் எடுத்திற்று வருவா.
செணமா தீ பெருக்கி சர்க்கரை பாயசம் வெச்சருவா.பருப்பருசி பஞ்சாமிருதமும் செய்திருப்பா.
அப்பா சாமிகள எண்ணை தேய்ச்சு குளுப்பாட்டி திருநாறு சந்தணம் குங்குவம் வெச்சுற்று பூ சாத்துவா. தும்பு எலைல வெத்திலை பாக்கு பழம் வெச்சு அலங்காரம் பண்ணுவா.
இது முடிய வரைக்கும் நாங்கோ பொத்தைக்கு மேல ஏறி சுக்குனாறி கைகால் அறுத்த வலி தெரியாம கொல்லாம்பழம் திண்ணுட்டு இருப்போம்
"யே புள்ளைகளா கீழ வாங்கோ சாமி கும்டணும் " ன்னு அம்மையு அப்பாவும் கூப்புடுவா