நிழல்களின் நிஜங்கள்

நிலவொளியில் வெயில் தேடி குளிர்காயும்
அறிவொளிகள் கூட்டத்தில்
தனியொருவன் தாத்பரியம்
ஏதொரு நாளும் தாக்கத்தை
ஏற்படுத்தாது

புனைவுகள் போல
நிஜங்களும் தோன்றிட!
நிகழ்காலம் கூட
நகலாக நகையாடிட!
கனவுகள் யாவும்
வெறும் தரவுகளாகின
நினைவுகள் ஊடே
நிசப்தம் அடைந்தன

ஓட்டை கப்பலில்
உலகம் சுற்றி
சாதனை படைக்க
நினைப்பது சுலபம்
நிஜத்தினில் உயிரை
காப்பதே கடினம்

கனவுகள் கண்டோம்
கரை சேர்வோமென்று
தரைதனை தொட்டதும்
தனித்தீவாய் பட்டது

உயிர்வாழத் தகுதிகள்
இருந்தும் உளச்சூழல்
உறுத்துது
கதிராடிய கழனியெங்கும்
கருவேலமாய் சிரிக்குது

சாதியை வைத்து
ஊதியம் செய்யும்
ஊடகங்கள் ஒருபுறம்
உடற் சவத்தினை
கொண்டு
அரசியல் சந்தர்ப்பம் பேசும்
உயிர் பிணங்கள் மறுபுறம்

எமனாளும் தேசத்திலும்
நீதி இருக்கும்
இவராளும் தேசத்தில்
சாதி மட்டுமே இருக்கும்!

எழுதியவர் : துளசிதரன் (8-Apr-18, 3:06 am)
பார்வை : 457

மேலே