காளி
மரண விதையிலே
மறுபடி பிறப்பேன்
உன் மடியில் தவழ்வேன்
தாமரை இலையிலே
நீர்த்துளி போலவே
உனை சுற்றி விளையாடுவேன்
ஐவர் கொண்ட எம் குடும்பத்தின்
சூரியன் நீயே
உன் புன்னகை பார்த்து
சிலிர்க்கும் எம் தந்தையின்
வெள்ளித்தாடியே
எம் நிலவொளி
உன் பாதச்சுவடை
அச்சுவடித்து
ஒரு பூச்சாடி செய்வேன்
அதில் என் சாம்பலை
இட்டு வைத்து
விதைத்து
வளர்த்து வை
வருவேன்
சூரியன் உதிக்கையில்
பாலைவனத்தில்
நிழல்கள் கொந்தளிக்க இடம் ஏது
உன்னை வணங்கிய பின்
என் நெஞ்சில்
பகைவர் மறுதலிக்க இடம் ஏது
அவர்கள் கணைகள்
எனைத்துளைக்க முடியாது
வீரன் ஆனேன்
அம்மா
சூரியன் உதிக்கையில்
பாலைவனத்தில் போல்
ஒரு குழந்தையைப் போல்
உன் முன் நிர்வாணமாய் நின்றேன்
கடைசி ஆடை
இதையும் அறுத்து ஏறி
அகத்தின் நதி
புறத்தில் பாயட்டும்
உன் குங்குமச்சிரிப்பில்
என் குருதிச்சாயம் போகட்டும்
நித்தம் கண்ட உன் விழிகளில்
முதல் முத்தமாய்
இமைப்பை நான் பார்க்கட்டும்
யுகங்கள் கோடி கடந்து
உன் கால்கொலுசோசை மீண்டும் கேட்கட்டும்