அச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 14

மாண்ட்ரியல்......

"என்ன கரோலின், ஏதோ கேட்கவேண்டும் என வந்திருப்பதாக ஆஷ்லே சொன்னாளே, என்ன விஷயம்?" என்றான் ஜொஹான்.

"ஜொஹான், எனக்கு ஒரு சிறிய உதவி செய்யவேண்டும், எனக்கு தெரியும், சிபாரிசு செய்வது உனக்கு பிடிக்காது என்று, பலமுறை ஆஷ்லே இதை சொல்லி இருக்கிறாள், ஆனால் எனக்கு வேறு வழி இல்லாமல் கேட்கிறேன்" என்றாள் கரோலின்.

"என்ன கரோலின், என்ன என்று சொல்" என்றான் ஜொஹான்.

"எனது தம்பிக்கு வான்கூவரில் வேலை கிடைத்திருக்கிறது, அதனால் நான் யோசிப்பது என்னவென்றால் நானும் எனது பணியை இங்கே ராஜினாமா செய்துவிட்டு எனது தங்கையுடன் வான்கூவரில் வந்து குடியேறலாம் என எண்ணுகிறேன். அதனால், எனக்கு நீ சிபாரிசு பண்ணவேண்டாம், எங்காவது வான்கூவரில் வேலை வாய்ப்பு விளம்பரமோ இல்லை உனக்கு ஏதும் செய்தி வந்தாலோ என்னிடம் சொல், நான் முறையாக விண்ணப்பித்து முயற்சி செய்துகொள்கிறேன்" என்றாள் கரோலின்.

"ஏய், கரோலின், என்ன சொல்கிறாய், இந்த முடிவு எதற்கு, நீ இங்கேயே இரு, எனது அண்ணனை போல உனது தம்பி வான்கூவரில் சென்று பணிபுரியட்டும், ஆம்பள பையன் தானே, எதற்கு நீ போகவேண்டும்?" என்றாள் ஆஷ்லே.

"இல்லை ஆஷ்லே, எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நான் எனது தம்பி தங்கையை விட்டு பிரிந்ததே இல்லை, அது மட்டும் அல்ல, அவர்களும் அப்படித்தான், அதனால் உனது அண்ணன் ஜொஹானை எனது தம்பியுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது, என்னை பொறுத்தவரை நான் போவது தான் சரி" என்றாள் கரோலின்.

"நீ சொல்வதும் ஒருபுறம் சரிதான் கரோலின், ஆனால் இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் முதலில் எனது அண்ணனோடு உனது தம்பி போய் வேலை பார்க்கட்டும், பிறகு அந்த வேலை அவனுக்கு செட் ஆகி அவன் தன்னை நிலை படுத்திக்கொண்டு பின்பு நீ போகலாமே என்பது தான் எனது யோசனை" என்றாள் ஆஷ்லே.

"எனக்கும் ஆஷ்லே சொல்வது தான் சரி என்று தோன்றுகிறது" என்றாள் மெர்சி.

"ஆமாம், அதுவே சிறந்த யோசனை" என்றான் ஜொஹான்.

"ஆமாம் ஜொஹான், நானும் அப்படித்தான் யோசித்தேன், ஆனால் இப்போதே வேலை தேட தொடங்கினாள் தான் இன்னும் ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்குள் முடியும்" என்றாள் கரோலின்.

"நீ சொல்வதும் சரிதான், சரி, நான் ஒரு யோசனை சொல்கிறேன், எனது மருத்துவமனையில் கேத்தரின் என்ற பெண் நிதித்துறையில் இருந்தாள். அவள் வேறு வேலை கிடைத்து பணியை ராஜினாமா செய்துவிட்டாள். நீயும் அதே துறையில் இருப்பதால் நான் வேண்டுமானால் எனது மருத்துவமனைக்கு உனது பயோடேட்டாவை தருகிறேன், ஆனால் கண்டிப்பாக சிபாரிசு செய்யமாட்டேன்" என்றான் ஜொஹான்.

"ஜொஹான், நீ இந்த பயோடேட்டாவை தந்தாலே சிபாரிசுக்கு சமம்" என்று சொல்லி சிரித்தாள் மெர்சி.

"மிகவும் நன்றி ஜொஹான்" என்றபடி சாப்பிடத்தொடங்கினாள் கரோலின்.

கேர் காண்டியாக்....

"அலெக்ஸ்......நான் எம்.ஜே., ஷெரிங்க்டன் காவல் நிலைய அதிகாரி" என்றாள் எம். ஜே.

திரும்பினான் அலெக்ஸ்.

முகத்தில் அங்கங்கு காயங்கள், வீங்கி இருந்தது முகம், உதட்டில் பூட்ஸ் காலால் மிதித்தது போன்ற ஒரு காயமும் இருந்தது, இடது கை கட்டை விரலில் எலும்பு முறிக்கப்பட்டிருந்தது, வலது தோளில் வீக்கம், பார்க்கவே மிகவும் வழியில் இருப்பது போலவும் அதேசமயம் கோபமாகவும் இருந்தான் அலெக்ஸ்.

"சொல்லுங்கள், இன்னும் எனது குடும்பத்தில் நான் உயிரோடு இருக்கிறேன், என்னையும் கொல்லத்தான் அப்படி ஒரு தண்டனை கொடுத்தீர்கள், இன்னும் உயிர் இருக்கிறதே என்று வந்தீர்களா?" என்றான் அலெக்ஸ்.

"மிஸ்டர் அலெக்ஸ், சற்று நிதானித்து பேசுங்கள், ஒரு காவல் அதிகாரியிடம் பேசுகிறோம் என்பது நினைவில் இருக்கட்டும்" என்று அதட்டும் தோரணையில் பேசினாள் எம்.ஜே.

"ஓஹோ, அப்படியா, எனக்கு எல்லாம் நினைவில் இருக்கிறது, காவல் அதிகாரி என்றால் நீங்கள் மட்டும் எல்லோரையும் மிரட்டலாம், அடிக்கலாம், கொல்லலாம் இல்லையா? பொதுமக்கள் எல்லாம் உங்களை பொறுத்தவரையில் மிருகங்களுக்கு ஒப்பானவர்கள் இல்லையா? அவர்களின் உயிரும் வலியும் உங்களுக்கு புரியாது இல்லையா?" என்றான் அலெக்ஸ்.

"அலெக்ஸ், செய்த தப்புக்களுக்கு தான் தண்டனை பெற்றிருக்கிறீர்கள், நீங்கள் எந்த தப்புமே பண்ணவில்லை என்றால் உங்களுக்கு நாங்கள் ஏன் தண்டனை கொடுத்திருக்கப்போகிறோம்?" என்றாள் எம்.ஜே.

"ஓஹோ, நான் தப்பு பண்ணினேனா, நீங்கள் எனக்கு கொடுத்தது தண்டனையா?" என்றான் அலெக்ஸ்.

"ஆமாம், வண்டியை வேகமாக ஒட்டியது, போக்குவரத்து காவல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, அவர்களை தாக்கியது, பின்பும் பல சந்தர்ப்பங்களில் பல காவலர்களை தாக்கியது......" எம்.ஜே. முடிப்பதற்குள் "போதும், எனது தந்தையும் தங்கையும் மரணத்தின் விளிம்பில் இருந்தனர், அவர்களை அந்த நிலைமையில் தான் அப்படி நடந்தது, ஏன், நீங்கள் உங்களை அந்த நிலையில் வைத்து பாருங்கள், நீங்கள் அப்போது என்ன செய்திருப்பீர்கள்?" என்றான் அலெக்ஸ்.

"உங்களின் தவறுகளுக்கு ஜஸ்டிபிகேஷன் தருவதால் நீங்கள் செய்தது தவறில்லை என்ட்ரி ஆகுமா என்ன அலெக்ஸ்?" என்றாள் எம்.ஜே.

"ஆமாம், ஆகாது தான், இன்னும் ஒரு தவறு இருக்கிறது, அந்த காவல் அதிகாரிகளிடம் அவ்வளவு கெஞ்சினேன், என்னை விடுவிக்கக்கோரி, ஆனால் எனது தந்தைக்கு ரத்தம் தேவை பட்டிருக்கும் மருத்துவமனையில் அவருக்கு rH பாசிட்டிவ் ரத்தம் என்று தெரிந்ததும் அந்த ரத்தம் கிடைக்காமல் அவர் மரணத்தை தழுவினாரே.... நான் அங்கு இருந்திருந்தால் எனது ரத்தமும் அதே வகை தான், என்ன தந்தையை காப்பாற்றி இருப்பேன். அந்த சூழ்நிலையை உருவாக்கிய அந்த காவல் அதிகாரிகளை இன்னும் என் கையால் கொல்லாமல் விட்டிருக்கிறேனே....அது தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய குற்றம்" என்றான் அலெக்ஸ்.

பளார் என அலெக்சின் முகத்தில் அறைந்தாள் எம்.ஜே.

இருக்கையில் இருந்து கீழே விழுந்தான் அலெக்ஸ். அவனது மார்பில் காலை வைத்து மிரட்டும் தோரணையில் "என்னிடம் ஸ்மார்ட் கேம் விளையாடாதே அலெக்ஸ், எனக்கு எல்லாம் தெரியும்" என்றாள் எம்.ஜே.

அவளது காலை உதறி தள்ளிவிட்டு "என்ன தெரியும் உங்களுக்கு?" என்றான் அலெக்ஸ் கோபமாக.

எம்.ஜே. வின் பூட்ஸ் கால் மீண்டும் அலெக்சின் தாடையில் ஒரு உதை விட்டது. வாயில் இருந்து ரத்தம் வரத்தொடங்கியது அலெக்சிற்கு.

"நீங்கள் என்னை ஏன் இப்படி துன்புறுத்துகிறீர்கள், இதற்கு பதில் என்னை நீங்கள் கொன்றுவிடலாம்" என்று கத்தினான் அலெக்ஸ்.

"தேவைப்பட்டால் அதையும் செய்வோம்" என்றபடி அவனது தொடையில் இன்னொரு மிதி வைத்தாள் எம்.ஜே.

வேகமாய் எழுந்து எம்.ஜே. வை நோக்கி தாக்கும் தோரணையில் வந்த அலெக்ஸை பக்கவாட்டில் இருந்து தாக்கி தள்ளினாள் ஷெர்லின்.

கீழே விழுந்த அலெக்சின் கால்களில் மாறி மாறி மிதித்து அவனை எழுந்திருக்க முடியாத வண்ணம் செய்தனர் இருவரும்.

வழியில் கதறினான் அலெக்ஸ்.

சத்தத்தை கட்டுப்படுத்த தனது பூட்ஸ் காலை அவனது வாயில் வைத்து அழுத்தினாள் எம்.ஜே.

இந்த காட்சிகளை வெளியில் வீடியோ வழியாக பார்த்துக்கொண்டிருந்த கென்னடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் காவல் துறையின் விதிமுறைகளை மதித்து மெளனமாக இருந்தார் கென்னடி. ஆனால் அலெக்ஸ் துன்புறுத்தப்படுவதை அவரால் ஏற்க முடியவில்லை.

"ஷெர்லின், இவன் மயங்கிவிட்டான், ஒரு விஷயம் செய்யலாம், மயக்கம் தெளியும்வரை காத்திருப்போம்" என்றாள் எம்.ஜே.

"சரி, வா, நாம் வெளியே காத்திருக்கலாம்" என்றாள் ஷெர்லின்.

அலெக்சின் வாயின் மேல் வாய்த்த காலை அப்போது தான் எடுத்தாள் எம்.ஜே.

முதல் அடி வைத்த எம்.ஜே.வின் பூட்ஸ் கால் அதில் படிந்திருந்த அலெக்சின் ரத்தத்தால் தரையில் பிசுபிசுவென ஒட்டி நடந்தது.

வீடியோ அறையில் இருந்த கென்னடியிடம் சென்றனர் இருவரும்.

"எம்.ஜே. உன்னுடைய விசாரணையின் சாராம்சம் எனக்கு புரியவில்லை, நீ அவனிடம் எதற்காக விசாரிக்கிறாய் என சொல்லவில்லை, அவனும் கேட்கவில்லை, ஆனால் உனது ஆக்ரோஷம் மிக அதிகமாக தெரிந்தது" என்றார் கென்னடி.

"ஆமாம் மிஸ்டர் கென்னடி. என்ன செய்வது, அவன் பரிதாபமான நிலையில் இருந்தாலும் நமது துறை அதிகாரிகளை கொடூரமாக கொன்றிருக்கும்....." எம்.ஜே. முடிப்பதற்குள் "கொன்றதாக சந்தேகப்படும் நபர், இன்னும் முடிவாகவில்லை" என்றார் கென்னடி.

"ஹ்ம்ம், ஆமாம், சந்தேகத்தின் பேரில் நாம் விசாரித்துக்கொண்டிருக்கும் நபர்....சரியா?" என்றாள் எம்.ஜே.

"நீ ஒன்றை கவனித்தாயா.....அவர்களை கொல்லாமல் விட்டது தான் நான் செய்த தவறு என அவன் கூறினான், ஆதலால் அவர்கள் மரணித்தது, கொலை செய்யப்பட்டிருப்பது அவனுக்கு தெரியவில்லை என நாம் கொள்ளலாம் இல்லையா?" என்றாள் ஷெர்லின்.

"இல்லை ஷெர்லின், நீ தவறாக யூகிக்கிறாய், நாம் விசாரிக்கிறோம் என்பது அவனுக்கு தெரியும், அதனால் அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் மிக தெளிவாக பேசி இருக்கிறான், அவர்கள் மரணித்திருப்பது அவனுக்கு தெரியும் என அவன் காட்டிக்கொள்ளாமல் இருந்தால் அவன்மேல் நமக்கிருக்கும் சந்தேகம் குறையத்தொடங்கும் என அவன் முடிவெடுத்து அப்படி பேசி இருக்கலாம் இல்லையா?" என்றாள் எம்.ஜே.

"ஆமாம், இந்த கோணத்தில் நான் யோசிக்கவில்லை, அது இருக்கட்டும், அவனை நீ ஏன் கொடூரமாக கையாண்டாய் என நான் தெரிந்துகொள்ளலாமா?" என்றாள் ஷெர்லின்.

"ஒரு விஷயம் தெரிந்துகொள், இவ்வளவு தெளிவாக தடயங்கள் இல்லாமல் மூன்று கொலைகளை, அதுவும் பொது இடத்தில காவலர்களை கொன்றிருக்கும் ஒருவன், விசாரணை வரும், எப்படி எல்லாம் நம்மை விசாரிப்பார்கள், அவர்கள் எப்படி கேட்கும் கேள்விக்கு எப்படி பதில் சொல்லவேண்டும், எப்படி நாம் பேசினாள் நம்மேல் இருக்கும் குற்றச்சாட்டிற்கு வாக்குமூலம் இல்லமால் போகும் என்பதெல்லாம் தெளிவாக யோசித்து வைத்திருப்பார்கள், அதுமட்டும் அல்ல, அவர்களை நாம் கேட்கும் கேள்விகளுக்கு யோசிக்கவே விடக்கூடாது, நாம் முதல் கேள்வி கேட்கும்போதே நமது அனைத்தி கேள்விகளுக்கும் பதிலை யூகிப்பவர்கள் தான் கிரிமினல். அவர்களின் சிந்தனை வேகம் நமது சிந்தனை வேகத்தை விட மிக அதிகம், அதனால் தான் கேள்விகளே இல்லாமல் எந்த விஷயத்திற்கு அவனை வெளுக்கிறோம் என்றே அவனுக்கு புரியாமல் அவனை அவ்வளவு துவம்சம் செய்தேன், எனக்கும் அவனை அடிப்பது பாவமாகத்தான் இருந்தது, என்ன செய்வது, வேறு வழி இல்லை, அதனால் தான் அப்படி ஒரு ட்ரீட்மெண்ட் அவனுக்கு, அவனால் இப்போது நாம் என்ன செய்யப்போகிறோம், என்ன கேட்கப்போகிறோம் என்பதை யூகிக்க முடியாது" என்றாள் எம்.ஜே.

"அதற்காக வலியில் கத்தி கதறும் அவனது வாயில் உனது பூட்ஸ் கால்களை வைத்து அடைப்பது மிகவும் கொடுமை, சில சமயங்களில் மூச்சு நின்றுவிடும் இல்லையா?" என்றாள் ஷெர்லின்.

"இல்லை, நான் மிகவும் கவனமாக தான் செய்தேன், அவனது மூக்கினை பார்த்தேன், எந்த காயங்களோ வீக்கமோ இல்லை, சாதாரணமாக என்னை பற்றி அறிமுகப்படுத்தி ஒரு இரண்டு நிமிடம் கவனித்ததில் அவனுக்கு சளியோ இருமலோ மூக்கடைப்போ இல்லை என்பதையும் தெரிந்துகொண்டேன், பிறகு அவனை கீழே தள்ளி அவனது வாயை மட்டுமே தான் எனது காலால் அழுத்தி மூடினேன், எனக்கும் சற்று வருத்தம் தான், மிகவும் மூர்க்கத்தனமாக தான் நடந்துகொண்டேன், ஒரு ஆறுதல் என்னவென்றால் ரத்தம் அவன் வாயில் வந்ததே தவிர பல் எதுவும் உடையவில்லை" என்றாள் எம்.ஜே.

"நீ மிகவும் பயங்கரமான ஆள்" என்றாள் ஷெர்லின்.

"என்ன மிஸ்டர் கென்னடி, மௌனமாகவே இருக்கிறீர்கள்?" என்றாள் எம்.ஜே.

"எனக்கென்னவோ அவன் இன்னொசென்ட் தான் என தோன்றுகிறது" என்றார் கென்னடி.

"இல்லை மிஸ்டர் கென்னடி, அவன் ஏதோ மறைக்கிறான் என நினைக்கிறேன், பார்க்கலாம், அவன் எழுந்திருக்கட்டும்" என்றாள் எம்.ஜே.

பகுதி 14 முடிந்தது.

-------------------------திகில் தொடரும்----------------------------

எழுதியவர் : முபாரக் (12-Apr-18, 5:32 pm)
சேர்த்தது : முபாரக்
பார்வை : 554

மேலே