சூதாட்டத்துக்கு ரிக்வேதமும் தமிழ் வேதமும் எதிர்ப்பு

தமிழ் வேதம் என்று திருவள்ளுவ மாலையில் புகழப்பட்ட திருக்குறளும், அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட ரிக் வேதமும் சூதாட்டத்தின் கொடுமைகளை ஏசுகின்றன. சூதாட்டம் இன்றும் உலகெங்கிலும் இருக்கிறது. பல லட்சம் பேர் தினமும் லாட்டரி டிக்கெட் வாங்கி ஏமாறுகின்றனர். எங்கள் லண்டனுக்கு வந்தால் ஒவ்வொரு தெருவிலும் சூதாட்டக் கடைகள் (betting shops) இரண்டு மூன்று இருக்கும். பெட்’ bet கட்டி ஏமாறுவதற்கு ‘முன் காலத்தில் குதிரைப் பந்தயம் பின்னர் நாய் பந்தயம் என்று இருந்தன. இன்றோ பனி மழை பெய்யுமா, கால்பந்தில் யார் முதல் ‘கோல்’ போடுவார்கள் கிரிக்கெட்டில் எத்தனை ‘ரன்’களில் ஒரு அணி ஜெயிக்கும், தேர்தலில் யார் வெல்லுவார்கள்? என்று பல நூறு விஷயங்கள் சம்பந்தமாக பெட் BET கட்டி ஏமாறலாம்!



மஹாபாரதக் கதையின் அடிப்படையே சூதாட்டம்தான் என்பதை நாம் அறிவோம். மனு ஸ்ம்ருதியும் சூதாட்டத்தைக் கண்டிக்கிறது. இது போல திருவள்ளுவரும் ரிக்வேத ரிஷிகளும் சூதாட்டத்தைக் கண்டிக்கின்றனர்.



சூது என்ற தமிழ் சொல்லே ‘த்யூத’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லில் இருந்து வந்தது என்று மொழியியல் வல்லுநர்கள் மொழிவர். ஆனால் நானோ தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரே குடும்ப மொழிகள் என்றும் அவை கிளைவிட்டுப் பிரிந்து சில ஆயிரம் ஆண்டுகள் உருண்டு ஓடியதால் இரண்டும் வேறு மொழிகள் போல தோன்றுகின்றன என்றும் பல நூறு சொற்கள், சந்தி இலக்கணம், வேற்றுமை உருபுகள் மூலம் நிரூபித்து வருகிறேன். நிற்க.







சூது என்னும் தலைப்பில் வள்ளுவன் பத்து குறள் பாடி வசை பாடி இருக்கிறான். ஆகையால் மஹா பாரத காலத்துக்குப் பின்ன ரும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சூதாட்டம் நடைபெற்று வருவதை அறிகிறோம். அந்தக் காலத்தில் இப்போது போல betting shop பெட்டிங் ஷாப் இல்லாவிடினும் மன்றம், கழகம், சபா (அவை) என்ற இடங்களில் சூதாட்டக்காரகள் சந்தித்து விளையாடியதை அறிகிறோம்.

குறள் 931 முதல் 940 வரை சூதாட்டக் கொடுமைகளைப் பகரும். ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலம் 34 ஆவது பாடல் கவச ஐலூஷன் பாடியது. அதிலுள்ள கருத்துகளை வள்ளுவனும் பிற்காலத்தில் சொல்லி இருக்கிறான்.

சூதாட்டத்தால் உடை, செல்வம், உணவு, புகழ், கல்வி என்ற ஐந்தும் ஒருவன் இடத்தில் வராது (939) என்பான் வள்ளுவன்.



ரிக் வேத சூதாட்ட துதியோ இதை நன்கு விளக்குகிறது: இதோ ரிக் வேத துதியின் சாராம்சம்:



1.சூதாட்டமும் சோம பானம் போல இன்பம் தருகிறது.



2.என் மனைவி என்னிடத்திலும் நண்பர்கள் இடத்திலும் அன்பாகவே இருந்தாள்; கோபித்ததே இல்லை; ஆனால் சூதாட்டம் காரணமாக நான் அவளை இழந்தேன்.



3.என் மாமியார் என்னை வசை பாடுகிறாள் என் மனைவி என்னை எதிர்க்கிறாள்; கிழட்டு குதிரை போல நான் உள்ளேன்.

4.சூதாட்டக் காரனை மனைவி முதல் எல்லோரும் ஏசுகின்றனர். தந்தையும் சகோதரரும் திட்டுகின்றனர்.





5.இனிமேல் ஆடக்கூடாது என்று நினைப்பேன் அந்த தாயக்கட்ட காயுருட்டும் சப்தம் என்னை இழுக்கிறது . நான் காதலியைச் சந்திக்கும் இடத்துக்கு ஓடுவதுபோல ஓடுகிறேன்.

6.காய் உருட்டுவதைப் பார்த்த உடனே ஆர்வம் வந்து விடுகிறது.

7.சூதாட்டக்காரனை காய்கள் வருத்துகின்றன.

8.எவருடைய கோபமும் சூதாட்டக் காய்களைப் பாதிப்பதில்லை. அரசனும் அதை வணங்குகிறான்.



9.இதோ காய்கள் மேலேயும் கீழேயும் உருண்டு போகின்றன. அவை இதயத் துடிப்பை அதிகரிக்கின்றன.



10.மனைவியும் மகனும் வருந்துகின்றனர். சூதாட்டக்காரன் கடன்பட்டதால் திருடவும் செய்கிறான்.

11.மற்றவர்களுடைய மனைவி மக்களைப் பார்த்து வருந்துகிறான்



12.இறுதியில் ஒரு புத்திமதியுடன் கவிதை முடிகிறது:

நான் சொல்லுவதை நம்பு; சூதாட்டம் ஆடாதே; நிலத்தைப் பண்படுத்தி பயிர் செய்; இதனால் செல்வம் கிட்டும்; இன்பம் வரும்; பசுக்கள் அதிகரிக்கும்; மனைவியும் உடன் இருப்பாள்!



13.தானியங்களே! எங்களிடத்தில் நட்புடன் இருங்கள். உங்கள் கோபத்தை என் எதிரிமேல் திருப்பி விடுங்கள் எங்கள் எதிரிகள் உங்களிடம் மாட்டிக்கொள்ளட்டும்



பத்து குறள்களையும் ரிக் வேத தாயக்கட்டத் துதியையும் ஒப்பிட்டால் இரண்டிலும் ஒரே கருத்தைக் காணலாம்!!



எண் 53

1.இந்தப் பாடலில் வேறு சில சுவையான விஷயங்களும் வருகின்றன. ‘விபிதகா’ என்ற மரத்தின் விதைகள் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்டன.



2.மௌஜவம் என்ற மலையில் சோமரசச் செடிகள் வளருகின்றன.



3.பகடை ஆட்டத்தில் 53 காய்கள் உள்ளன. இதை லுட்விக் என்பவர் 15 காய்கள் என்று மொழி பெயர்த்துள்ளார். சம்ஸ்க்ருதத்தில் ‘த்ரி பஞ்ச’ என்ற சொல் உளது.



4.’மகத்தான படையின் சேனாபதி’ என்பதற்கு ‘பகடைக் காயின் மிக உயர்ந்த எண்ணிக்கை’ என்று மொழி பெயர்க்கின்றனர்.



5.ஒன்றுமில்லை என்று கையை விரிப்பதற்குப் ‘பத்து விரல்கள்’ என்ற சொற்றொடர் உள்ளது. சாயனருடைய பாஷ்யம் கொடுக்கும் தகவலை வைத்தே நாம் இப்படி மொழி பெயர்க்கிறோம்.



–சுபம்–



London Swaminathan

எழுதியவர் : (12-Apr-18, 7:34 pm)
பார்வை : 58

சிறந்த கட்டுரைகள்

மேலே