கல்வி அன்று
கல்வி
பிறப்பிலே தொடங்கி எவ்வேழு பிறவிக்கும் தொடரும் பெருஞ்செல்வம்
ஆற்றல்மிக்க ஆயுதம் , அழியாத்தன்மையிலான நிலையான செல்வம்
கற்றலும் கற்பித்தலும் ஒருவழிப் பாதையில் பயணிக்கும் பயணம்
கல்வி
சமூகத்தின் சிறந்த தூண்களைச் செதுக்கிடும்
அறநெறி நிறைந்த வாழ்வினைக் கற்பிக்கும்
மாண்ட பின்னும் வாழும் அக்னிச்சிறகினை வழங்கும்
ஏழ்மையை எதிர்த்தே ஏவுகணை அனுப்பும்
சாதியைத் தகர்த்தே சட்டமியற்றிச் சாதிக்கும்
மூடநம்பிக்கையைத் தீக்கிரையாக்கித் தொண்டுசெய்து பழுத்த பழமாகும்
காசநோய் தன்னைக் கவ்வினாலும் காவியமியற்றும் கல்கியாகும்
சமையலறைத் தேவதையை வானில் பறக்கும் புதுமைப்பெண்ணாக்கும்
இருண்ட வீட்டிலோ அறிவொளி மிகுந்திடச் செய்யும்
ஏட்டுக்கல்விச் சுவைக்காது போனாலும் வாழ்வில் ஏற்றம்தரும்
வாடியப்பயிரைக் கண்டு வாடியே, பசிப்பிணி போக்கிய வள்ளலாக்கும்
தான்கல்லாவிடினும் நாட்டு மக்களுக்கு கல்விக் கண் திறந்துவைக்கும்
எவராலும் அசைக்கவியலா மனஉறுதியும் தன்னம்பிக்கையும் தருவதே
அகத்தே புதைந்திருக்கும் மெய்ப்பொருளைப் புறத்தே பிரகாசிக்கவைப்பதாகும்